என் புனைவுப் புதினம் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 39இலிருந்து
————————————————————————————————
நீர் கொதிக்க வைக்கப்பட்டது. இஞ்சியும் ஏலக்காயும் சேர்த்து கலுவத்தில் இடிக்கப்பட்டது. கலுவத்துக்கு மருந்து இடிப்பது தவிர இப்படி தேநீருக்கு இஞ்சியும் சுக்கும் இடிப்பதும் பெரும்பயன் தான். வைத்தியர் வீடு என்பதால் கலுவம் இருக்கிறது. வைத்தியர் அல்லாதவர்கள் கலுவத்துக்கு எங்கே போவார்கள்? நல்ல இஞ்சி சேர்த்த தேநீர் வேண்டுமென்றால் கலுவம் வாங்கித்தான் ஆக வேண்டும் அவர்களும்.
ஏலம், இஞ்சி இடித்தது வென்னீரில் சேர்க்கப்பட்டு தேயிலையோடு கொதிக்க வைத்து வடிகட்டப்பட்டது. பசுவின் பால் வேண்டுமே என்று சொல்லியபடி வானம்பாடி சமையலறைக்குள் தலை சொறிந்தபடி வந்தாள். அவள் கன்னத்தில் வருடிய குயிலிக்கு பசுக் கன்றுக்குட்டி போல கன்னம் காட்டியபடி வானம்பாடி நின்றிருக்க, எடி கழுதே, உன் கிட்டே இருந்துதான் தேளரசிலே ஆண்பெண் பேதமில்லாமல் எல்லோருக்கும் தலையில் ஈறும் பேனும் பரவி, தலையைத் தட்டினால் உதுருது என்று வானம்பாடி கன்னத்தில் ஊர்ந்த பேனை விரலில் எடுத்து சுவரில் நசுக்கி கை அலம்பி வந்தாள் குயிலி.
செக் லிஸ்ட் சரி பார்த்து விடலாமா? குயிலி கேட்டாள். சரி என்று தலையாட்டினார் நீலன்.
குயிலி தன் உள்ளங்கையில் பதித்த பயோ கம்ப்யூட்டரில் பார்த்து ஒவ்வொன்றாகக் கேட்க, நீலன் ஆமென்று பதில் சொன்னார் –
இட்லி சட்னி காப்பி டீ வாழைப்பழம் இஞ்சிச்சாறு கரிங்ஙாலி வெள்ளம் புளியிஞ்சி அலாரம் என்று ஒரு பட்டியல் –
எல்லாவற்றுக்கும் இருக்கிறது என்று மறுமொழி சொன்னார் நீலன். அது முடிந்து அடுத்த பட்டியலில் வந்த மருந்து விளைவுகள்- உறக்கம் கண் உறங்காமை பசி பசிக்கு இனிப்பு புளிப்பு உரைப்பு துவர்ப்பு உண்ணுதல் பசியின்மை உடல்விழைதல் பறத்தல் கால் மரத்தல் இருளில் பார்த்தல் நீந்துதல் குரல் இழத்தல் உரக்கப் பேசுதல் நகைத்தல் எரிந்து விழுவது கூறில்லாத அன்பு காட்டுதல் முரட்டுத்தனம் செய்யுள் உரையாடல் வேறு மொழி உரையாடல் கூறியது கூறல் என்றும் இன்னமும் அந்தப் பட்டியலில் நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டிருந்தன.
பட்டியலை நீலன் மற்றும் வானம்பாடியின் உள்ளங்கைக்கு பிரதி செய்த குயிலி தொடங்கலாமா என்று கேட்டாள். கடவுள் வணக்கம் செய்து விட்டுத் தொடங்கலாமென்று கண்மூடிப் பிரார்த்தித்திருந்தார் நீலன்.
அந்த இரண்டு பெண்களும் அவருக்கு மரியாதை காட்டக் கண் மூடி நின்றிருந்தார்கள். குயிலி, வானம்பாடி முதல் பெரியபடி சஞ்சீவனி காய்ச்சி சமையலறையில் வச்சிருக்கு போய் எடுத்து வாங்க என்று குரலில் இன்னும் வழிபாட்டுத் தன்மை மிச்சமிருக்கத் தழைந்து சொன்னார் நீலன்.