நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 40 இன்று திண்ணை.காம் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து
சகல இன சஞ்சீவனி எங்களுக்கு வேண்டாம். அதைக் கொடுத்த பெருந்தேளரசரும் எங்களுக்கு வேண்டாம்.
காலையில் இருந்து நடுராத்திரி வரை சாரிசாரியாகச் சகல இனங்களும் தேளரண்மனை முன் கோஷம் முழங்கின. மற்ற இனங்களை விடவும் மும்முரமாகத் தேள் இனம் இந்த அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டது.
கரடியின் தலைமையில் துயிலரங்கத்துக்கு முன் பத்து பன்றிகளும், இருபது கழுதைகளும் பத்து நாய்களும் கோஷம் முழக்கி கற்களை விட்டெறிந்தன.
கரடியின் பொதுக்கூட்டச் சொற்பொழிவில் இருந்து –
குழலன் என்ற இளைஞர், இன்னும் இருநூறு ஆண்டுகள் சென்ற அப்புறம் பிறக்கப் போகிற அறிவுஜீவி, நம்மைக் கடைத்தேற்ற காலத்தில் பின்னால் இருநூறு ஆண்டு கடந்து வந்து நம்மை உய்விக்க அழைக்கிறார். (மேலும்)
இந்த தற்குறிகள் தேளரும் கோலரும் நாட்டை மட்டுமில்லை பிரபஞ்சத்தையே அறமின்றி ஆக்கி விடுவார்கள்.
தேளர் ஆண்டது போதாதா மக்கள் மாண்டது போதாதா என்று சுருக்கென்று கேள்வி கேட்டுக் கூட வந்தவர்களைத் தேளரண்மையை நெல்லிக்காய், முட்டை, கருங்கல் கொண்டு தாக்கச் சொல்லி அறிவுறுத்தினார்.
ஏமப் பெருந்துயிலில் அங்கு அமிழ்ந்திருத்தும் யாராவது விழித்தால் கல்லெறியும் சமூக விரோதிகள் அவருடைய இடத்தில் துயிலப் பிடித்துப் போடப்படுவார்கள் என்று அரங்கத்தில் பாதுகாவலர்கள் அறிவிக்க, கரடி நாலுகால் பாய்ச்சலில் ஓடி விட்டது.
கூட வந்த கிளர்ச்சியாளர்கள் எல்லா திசையிலும் அரண்டு ஓட, அடுத்த மணி நேரத்தில் கரடியார் கண்டுபிடிக்கப்பட்டார். அவரைத் தேடி அலைந்தோர் தாசி நறும்வல்லியை மடியேற்றி அந்தரங்கமாக வைத்தியம் செய்துகொண்டிருந்த எண்ணெய்க்காப்பு திருக்கோலத்தில் லங்கோட்டோடு அவரைப் பார்த்தனர்.
ஐயனே நாம் யாரோடு இருக்கிறோம் என்று வழிகாட்டியருளும் என்று அந்தப் பன்றிகளும் கழுதைகளும் நாய்களும் அவரைச் சரணடைந்தன. அதைவிட, நம்மோடு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று அவதானிப்பதே வேண்டியது என்று பொன்மொழி உதிர்த்தார் கரடியார். இப்போதைக்கு நறும்வல்லிக்கு வைத்தியம் செய்து குணமாக்கி விட்டுப் போம்வழி பற்றிப் பின்னர் யோசிக்கப்படும் என்று கூறினார் அவர்.