என் ஃபாண்டஸி புதினம் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 40 திண்ணை.காம் இணைய இலக்கிய இதழில் பதிப்பிக்கப் பட்டுள்ளது. அதிலிருந்து
நாட்டுக் காரியம் இருக்கிறதே தலை போகிறதாச்சே என்று புன்சிரிப்போடு கரடியார் கைகூப்பி நறும்வல்லி வீட்டுக்குள் இருந்து தைல வாடையோடு வெளியே வந்தார்.
தேசம் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது என்றும், இந்த அபாயக் கட்டத்தைக் கடந்து நாடு முன்னேற பெருந்தேளரின் அரசாட்சி மட்டும் நாட்டை வழிநடத்த முடியும் என்பதால் பெருந்தேளருக்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
குழலனால் தன் தலையையே தன் முண்டத்தோடு ஒட்டி வைத்திருக்க முடியவில்லை. கோகர்மலைநாடான பெருந்தேள் நாட்டை எப்படி ஓர் மொழி, ஓர் உணவு, ஓர் இலக்கியம் என்று ஐக்கிய நோக்கில் நல்லாட்சி தருவான் அவன் எனக் கூவினார்.
மற்ற இனமெல்லாம் குறைந்தது நூறு உருப்படியாவது கோகர்மலைநாட்டில் ஜீவித்திருக்க, கரடி மட்டும் ஏன் நீங்கள், ஒரே ஒரு கரடி என்று கூட்டத்தில் யாரோ கேட்டார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு அரைக் கரடியே போதும் என்று சொல்லிக் கைதட்டை வாரினார் கரடியார்.
தெரு முனையில் தொடர் உண்ணும் விரதம் என்று பலகை வைத்திருந்ததைப் படித்து அங்கே ஒரு பெருங்கூட்டம் விரைந்தது, தின்னச் சோறும் கறியும் மீனும் எதுவும் கிடைக்காமல் மழை பெய்து நிலத்திலிருந்து வெளிவரும் ஈசல்களைப் பிடித்துத் தணலில் வறுத்து உப்பிட்டு ஒரு பெரும் கூட்டம் உண்டபடி நகர்ந்தது.
அரசு தரப்பில் இருந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் தினசரி அரைப்படி பொரி கொடுக்கப்படுகிறது. தொடர் உண்ணும் விரதக் குழுவினர் குழலனின் புதுநாடு அமைப்பின் உறுப்பினர்கள்.
ஒரு பெரிய வீட்டின் கூடத்தில் பாய் விரித்து குழலன் அமர்ந்திருந்தான். இன்னும் கொஞ்ச நாள் நாற்பரிமாணக் கூறுகள் மாற்றி யார் கண்ணிலும் படாதவர்களாக அரசு ஊழியர்களான குயிலியும் வானம்பாடியும் இருக்க வேண்டும் என்று குழலன் அவர்களிடம் வற்புறுத்திச் சொல்லியிருந்தான்.
’தேளரசே நீ ஆண்டது போதாதா மக்கள் மாண்டது போதாதா’ என்ற கோஷம் நாடு முழுக்க எதிரொலித்ததில் குழலனுக்கு அலாதி மனநிறைவு. அதே அடிப்படையில் ’பெருந்தேள் குரங்கே பதவியை விட்டு இறங்கே’ என்று பாட்டு வாத்தியார் எழுதிக்கொடுத்த முழக்கம் நிராகரிக்கப்பட சாது மிரண்ட சினம் காட்டிய குரங்குகளும் காரணம்.
கறுந்தேளர் படைத் தலைவருக்கு காரிருளை வெல்ல வந்த முழுமதியே வருக என்ற கோஷத்தை மாற்றினால் பொருந்தும் – முழுமதியை வெல்ல வந்த காரிருளே வருக.
’எங்கேயோ குழந்தை அழும் சத்தம். எங்கேயும் குழந்தை அழும் சத்தம் தான்’. இந்த கோஷம் அறிவு அதிகம் இருந்தால் தான் புரியும் என்று பலரும் கருத்து சொன்னார்கள். சகல இன சஞ்சீவனியைக் குடித்து காமத்தில் ஈடுபட்டு ஊரெங்கும் குழந்தை பிறப்பு அதிகமானது பற்றி குயிலி இயற்றிய கோஷம் அது.
அதே போல் வானம்பாடி இயற்றிய கோஷம் – அய்யோ பசிக்கு வேண்டும் ஆஹா பிடி காண்டோம். குழலனுக்கு ரொம்பப் பிடித்த கோஷம் என்று சொல்ல அவனோடு கூடத்துக் கூட்டமே கைதட்டியது.