The Tamil Winterபனியும் தலைக்குத் துணியும்


திருப்பாவை – 26

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,
சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய். 26
திருப்பள்ளி எழுச்சி – 6

பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும்,
மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின் மணவாளா!
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
இப் பிறப்பு அறுத்து, எமை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

//

திருப்பாவை – கண்ணனைத் திருப்பள்ளி எழச் செய்த பெண்கள் வைக்கும் கோரிக்கைப் பட்டியல் இந்தப் பாடல்.

//
திருப்பள்ளி யெழுச்சிக்குச் சங்குகள் வேண்டும்; புறப்பாட்டுக்குப் பறைவேண்டும்; பறை கொட்டிக்கொண்டு புறப்படும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டுபாட அரையர் வேண்டும்; பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்திலே விழித்துக்கொண்டு போம்படி மங்களதீபம் வேண்டும்; நெடுந்தூரத்திலேயே எங்கள் திரளைக்கண்டு சிலர் வாழும்படி முன்னே பிடித்துக்கொண்டு போவதற்குக் கொடிவேண்டும்; புறப்பட்டுப் போம்போது பனி தலைமேல் விழாதபடி காக்க ஒரு மேற்கட்டி வேண்டும்? ஆகிய இவ்வுபகரணங்களையெல்லாம் நீ தந்தருளவேணு மென்கிறார்கள்.// பிரதிவாதி பயங்கரர்

இத்தனை பொருட்களும் வேண்டியிருக்கிறது நீ உலா வர. முன்னர் வந்த பாடல்களில் வந்த உக்கமும் (விசிறி), தட்டொளியும் (முகம் பார்க்கும் உலோகக் கண்ணாடி) கூடப் பட்டியலில் உண்டு. இதை எல்லாம் நாங்கள் எங்கே போய் வாங்க? அறியாச் சிறு பெண்கள். இதையெல்லாம் நீயே கொடுத்து விடேன் என்று கண்ணனையே கேட்கிறார்கள்.

தீபம், பறை, அரையர்கள், கொடி எல்லாம் கேட்கும் ஆண்டாள் சட்டென்று ஆயர் சிறுமியாகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து, தலையில் பனி விழாமல் இருக்க ஒரு மேற்கட்டி கொடு என்று கோரிக்கை வைக்கிற போது ஆண்டாள் கவிநயம் மேலெழுந்து நிற்கிறது. வில்லிப்புத்தூர் பெண்பிள்ளைக்கு வார்த்தை வசப்பட்ட எத்தனையோ இடங்களில் இதுவுமொன்று.

ஆயர்பாடிச் சிறுமிகளின் அன்பு மட்டுமில்லை, innocence-ம் தெரியும்படி இந்தப் பாடலைப் பட்டுத் துணி நெசவு செய்த ஆண்டாள் திருவடி பணிதல் அல்லாது வேறென்ன இந்தக் காலை நேரத்தில் செய்வோம்! தமிழுக்கு இவ்வளவு எளிமையும் அழகும் யார் வாரி வழங்கி இருக்கிறார்கள், பாரதி வரும் வரையில்?

திருப்பள்ளி எழுச்சி உரை

பரப்பு அற என்பது ‘பப்பற’ என்றாயிற்று. மனம் ஒரு பொருளிலும் செல்லாது ஒடுங்கும் யோக நிலை. அந்த நிலையில் உள்ள பிறப்பறுத்த யோகியர் சிவனை வணங்கி நிற்கிறார்கள். எந்த யோக நிலையும் தேடாது, இல்லறத்தில் ஈடுபட்டு மகிழும் மானுடப் பெண்களும் அங்கே வணங்க வந்திருக்கிறார்கள். அருள் கிட்ட நிலை தடையில்லை.

//பதப்பொருள் : அணங்கின் மணவாளா – உமையம்மைக்கு மணவாளனே, செப்பு உறு கமலங்கள் – கிண்ணம் போன்ற தாமரை மலர்கள், மலரும் – விரியப்பெற்ற, தண்வயல் சூழ் – குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே, இப்பிறப்பு அறுத்து – இந்தப் பிறவியை நீக்கி, எம்மை ஆண்டு அருள் புரியும் – எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற, எம் பெருமான் – எம் பெருமானே, பப்பு அற – மனவிரிவு ஒடுங்க, வீட்டிருந்து உணரும் – பற்றற்று இருந்து உணருகின்ற, நின் அடியார் – உன் அன்பர்கள், வந்து – உன்பால் அடைந்து, பந்தனை அறுத்தார் – பிறவித்தளையை அறுத்தவராய், அவர் பலரும் – அவர்கள் எல்லோரும், மைப்பு உறு கண்ணியர் – மை பொருந்திய கண்களையுடைய பெண்களும், மானுடத்து இயல்பின் – மனித இயல்பில் நின்றே, வணங்குகின்றார் – உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; அவர்களுக்கு அருள் புரிதற்பொருட்டு, பள்ளி எழுந்தருளாய் – பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.//tamilvu

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன