கர்ப்பூரனின் அதிரடி நடவடிக்கைகளும் பெருந்தேளன் பதவித் துறப்பும்

தினை அல்லது சஞ்சீவனி நாவலின் அத்தியாயம் 42 திண்ணை இணைய வார இதழில் டிசம்பர் 3 2023 தேதி பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அச்சுப் பதிப்பாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது

மறுபடி கதவு தட்டும் சத்தம். போய்த் திறந்தால் அரண்மனை சேவகத்தில் இருக்கும் மனுஷர்கள் எல்லோரும் திமிராகப் பார்த்துக்கிட்டு கையை இடுப்பில் வைத்தபடி நிற்க, வாசல் பெருக்குகிறவன் எனக்கு முன்னால் விழுகிறது போல் காரித் துப்புகிறான்.

வாயைத் திறந்தபடிக்கு அவன் சொல்கிறான் யோவ் பெருந்தேளு இந்த மாசம் சம்பளம் எப்போவரும்? கூட நிற்கிற பெண் தேள் உடல் சாஸ்திரப்படி பேரழகி. மனுஷ உடல் சாஸ்திரப்படி என்னவோ. அவள் காரித் துப்பின பயலுக்குப் பின்பாட்டு பாடற மாதிரி சொல்றாள் – பெரிசு சகல ரோக சஞ்சீவனி பாட்டில் பாட்டிலா கொடுக்கறேன் வாங்கிட்டுப் போன்னு சொல்லிடாதே. அந்த பீக்காட்டுத் தண்ணியை வெளியே போய்ட்டு கால் கழுவக்கூட பிரயோஜனப்படுத்த முடியாது. நாறிக் கிடக்குது எளவு. அதைக் குடிச்சா முன்னாலும் பின்னாலும் நீண்டு போகும்னு சொன்னீங்க.

உங்கிட்டே எப்ப சொன்னாள் அந்த ஆள் என்று துப்பன் அவளைக் கேட்க ஆமா அதுவேறே கேட்கணுமாக்கும் என்று நொடித்தாள் தேள்லட்சண அழகி. திடீரென்று பின்னால் ஒரு கும்பல், சஞ்சீவனி குடிக்கக் கொடுத்து குடிக்கறதுக்கு ரெண்டு பைனரி காசு கூலி கொடுத்து பரபரப்பாக போன வாரம் வரை வேலை பார்த்துட்டிருந்த பயலுக சம்பளம் கேட்கறானுங்க.

காசு எங்கே டிஜிட்டல் மரத்துலேயா விளையுது இல்லே பைனரி வயல்லே முளைச்சு வருது. போன வாரம் வரை எப்படியோ சமாளிச்சுட்டு போயாச்சு. இப்போ என்ன பண்றது? தேளரசர் அலைபாய்ந்தபடி நிற்க வந்துட்டேன் என்று தெம்பாக ஒரு குரல்.

கர்ப்பூரம் தான். போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது பெருந்தேளரசனுக்கு. அவரைப் பார்த்துக் கையசைத்து விட்டு கூட்டத்துக்கு முன்னால் வந்து நின்றான் கர்ப்பூரம்.

அண்ணன்மாரே அக்காமாரே தங்கச்சிமாரே தோழிமாரே

எல்லா மாரும் இருக்கட்டும் நீ சொல்ல வந்ததைச் சொல்லு என்று துப்பல் பயல் திரும்பக் குறுக்குச்சால் ஓட்டினான்.

நீங்க எல்லோரும் இவ்வளவு பொறுமையாக இருந்ததுக்கு நன்றி. குகைக்குள்ளே அந்த ஓரத்துலே நல்ல வெளிச்சம் தெரியுது என்று எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிப் பெண் ஊழியர்களின் நாணப் புன்னகை கிடைக்கப்பெற்றான் கர்ப்பூரம்.

என்ன சொல்லிவிட்டேன் இந்தப் பெண்டுகள் நாண? புரியவில்லை. விஷயத்துக்கு வருவோம். இன்று நீங்கள் வீடு திரும்பும்போது ஒரு மாத சம்பளம் தரப்படும். இந்த ஞாயிறு சம்பள பாக்கி எல்லாம் கொடுத்துத் தீர்க்கப்படும். கர்ப்பூரம் முழுமுதல் பேரரசனாக முழங்க, தேளர் சகல அதிகாரமும் பறிபோனவனாக உடலும் மனமும் தளர்ந்து காட்சியளித்தார்.

கல்பூரன் வாழ்க என்று தப்பும் தவறுமாக முழங்கிக் கொண்டு அந்தக் கூட்டம் திரும்பப் போனது. துப்பல் மயிரான் வாலைச் சுருட்டி காலுக்கு நடுவில் இடுக்கி வைத்துக்கொண்டு பயந்தபடி போனதை ஓரக் கண்ணால் பார்த்தான் கர்ப்பூரம். அவன் எப்போதடா பேசப் போகிறான் என்று ஆவலோடு கொடுக்கை ஆட்டாமல் சகல மரியாதைகளோடும் நின்றிருந்தார் பெருந்தேளர்.

ராஜா உன்னைத்தானப்பா ராஜன் பெரும்தேள்பெண்டிர் மாட்டி இருந்த நகை எல்லாம் எங்கேப்பா?

இங்கே தான்

இங்கேன்னா?

தேளழகிங்கற என் வைப்பாட்டி வச்சிருக்கா

அவளை சுகிக்கணும்னா இப்பவே செய்யுங்க நான் அந்தப்பக்கம் திரும்பிக்கறேன்.

எனக்கு அவ்வளவு அவசரமா ஒண்ணும் அந்த சிந்தனை வரல்லே

அந்தக் கதை எல்லாம் வேணாம் ஒரு பத்து நிமிஷம் அனுபவிச்சுட்டுக் கண்ணைக் காட்டுங்க சிற்றின்பத்துக்கு அப்புறமான பேரின்பம் கிடைக்க வழி செஞ்சுடலாம். அவளை நையப் புடைன்னு சாதாரணமா எங்க காலத்தில் வெளக்குமாறால் தேள் அடிக்கற மாதிரி அடிச்சுக் கொன்னுடலாம். அவள் கிட்டே கொடுத்திருக்கற நகையை எல்லாம் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்தில் வித்துட்டா ஒரு மில்லியன் பைனரி நாணயம் கிடைக்கும் அதை வாங்கி வந்து சம்பள பாக்கி தீர்த்துடலாம். கூடவே பாதி விலைக்கு சகல இன சஞ்சீவினி தர்றோம்னு ஆல்ட் க்யூ பிரபஞ்சத்திலே நீரே போய் விளம்பரம் செஞ்சுட்டு வாரும். எப்படி விற்காமல் இருக்கும்”

ஒரு நீளக் கதையைச் சுருக்கி உரைக்கறதும்பாருங்க அப்படி பெருந்தேளருக்கு வைப்பாட்டி போகத்தில் சிறுதேள்பெண்டுகிட்டே கொடுத்த நகைகள் பிடுங்கப்பட்டன, ஆல்ட் க்யூ பிரபஞ்சத்தில் அவை விலைக்கு விற்கப்பட்டு எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிட்டியது.

எல்லாவற்றுக்கும் மேல், சகல இன சஞ்சீவனி பாதி விலைக்குத் தருவதாகச் சொன்னதும் ஒரு குடுவை பாக்கி இல்லாமல் மருந்து அங்கே ஏற்றுமதி ஆகி விற்று இன்னும் ஒரு வருஷம் நிம்மதியாக தேளரசு நடத்தலாம் என்ற நம்பிக்கை.

எல்லோருக்கும் எல்லா அரசாங்க சம்பள பாக்கியும் கொடுத்துத் தீர்க்கப்பட நாட்டு மக்களுக்கு பெருந்தேளரசர் மேல் நம்பிக்கையும் பிரியமும் சேர ஆரம்பித்தது.

கர்ப்பூரம் எல்லாப் பெருமையும் எனக்கே என்று அடக்கமாக அந்த மதிப்பு மரியாதையை மடைதிருப்பி விட்டுக் கொண்டிருந்தான். எல்லோருக்கும் அரசு தரப்பில் இருந்து சேர வேண்டிய பணம் போய்ச் சேர்ந்திருக்க, அதன் மூலம் தனியார் தரப்பு கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நிறைவேற, பணம் வந்தவர்கள் அத்தியாவசியச் செலவு எல்லாம் செய்து மிஞ்சியதை இன்பம் நுகர மது மாது என்று செலவு பண்ண சிறப்பு தீனி என்று மானுடக் கழிச்சலை கரப்புகள் சுவைத்து உண்ணக் காசு மிஞ்சிட, நாட்டில் பணப் புழக்கம் அதிகமானது.

பெருங்கர்ப்பூரம் வாழ்க என்ற வாழ்த்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக எங்கும் பரவ மனமே இல்லாமல் கர்ப்பூரம் அவற்றை அடக்கி வைத்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன