திருப்பாவை – 27
கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். 27
திருப்பள்ளி எழுச்சி – 7
அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார்.
இது அவன் திருஉரு; இவன், அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு, இங்கு எழுந்தருளும்,
மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்: எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
//
திருப்பள்ளி எழுச்சி
நயமான கவிதை.சின்னச் சின்னச் சொல்லாகக் கோர்த்து சிவனைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
//பதப்பொருள் : அது – பரம்பொருளானது, பழச்சுவை என – கனியின் சுவை போன்றது எனவும், அமுது என – அமுதத்தை ஒத்தது எனவும், அறிதற்கு அரிது என – அறிவதற்கு அருமையானது எனவும், எளிது என – அறிவதற்கு எளிமையானது எனவும் வாதிட்டு, அமரரும் அறியார் – தேவரும் உண்மையை அறியாத நிலையில் இருப்பர்; ஆனால், இது அவன் திருவுரு – இதுவே அப்பரமனது திருவடிவம், இவன் அவன் – திருவுருக்கொண்டுவந்த இவனே அப்பெருமான், எனவே – என்று நாங்கள் தெளிவாகச் சொல்லும்படியாகவே, இங்கெழுந்தருளி – இவ்வுலகத்தில் எழுந்தருளி வந்து, எங்களை ஆண்டுகொள்ளும் – எங்களை ஆட்கொண்டருளுகின்ற, மதுவளர் பொழில் – தேன் பெருகுகின்ற சோலை சூழ்ந்த, திருவுத்தர கோச மங்கை உள்ளாய் – திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருப்பவனே, திருப்பெருந்துறை மன்னா – திருப்பெருந்துறைக்கரசனே, எம்பெருமான் – எமது பெருமானே, எம்மைப் பணி கொளும் ஆறு எது – எங்களை ஏவல் கொள்ளும் விதம் யாது, அது கேட்போம் – அதனைக் கேட்டு அதன்படி நடப்போம், பள்ளி எழுந்தருளாய் – பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.// tamilvu
திருப்பாவை
இன்று வைணவ அந்தண இல்லங்களில் ’கூடார வல்லி’ தினம். அதாவது ‘கூடாரை வெல்லும்’ கவிதைத் தினம்.
ஒரு தமிழ்க் கவிதையைக் கொண்டாட ஒரு தினத்தையே ஆண்டுக்கு ஒருநாள் ஒதுக்கி மரியாதை செய்கிற இவர்கள் தமிழ் இனம் இல்லையென்றால் வேறு யார் தமிழர்?
கண்ணனைத் தரிசித்ததோடு பாவை நோன்பு முடிகிறது. ‘நெய்யுண்ணோம் பாலுண்ணோம்’ இனி இல்லை. ‘மூட நெய் பெய்து முழங்கை வழிவார’ அக்கார அடிசில் கூடி இருந்து உண்டு களிக்கும் நன்னாள் இது.
இந்தப் பாடல் நாலாயிரத்தில் ஐநூறாவது. மூன்றாம் திருமொழியில் உள்ளது.
மனம் வழிய, மணிப்பிரவாளத்தில் பொங்கும் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்ய சுவாமிகளின் அழகிய உரையை முழுவதுமாகவே படிக்கலாம்.
//***- கீழ்ப்பாட்டிற் சங்குகளையும் பறைகளையும் பல்லாண்டிசைப்பாரையும் கோல விளக்கையும் கொடியையும் விதானத்தையும் அருளவேண்டுமென்று அபேக்ஷித்த ஆயர்மாதரை நோக்கிக் கண்ணபிரான், “பெண்காள்! நம்மோடு ஒத்த ஈச்வரனொருவ னுண்ணடாகிலன்றோ நம் பாஞ்சஜந்யத்தோடு ஒத்ததொரு சங்கு உண்டாவது; அன்றியும் ‘சங்கங்கள்’ என்று பல சங்குகள் வேணுமென்னா நின்றீர்கள்; ஒன்றரை தேடினோமாகிலும் பாஞ்ச ஜந்யத்தோடொத்த பல சங்குகள் கிடையாவே; நம் பாஞ்சஜந்யத்தையும், *புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கையும்,* ஆநிரையினம் மீளக்குறித்த சங்கத்தையும் தருகிறேன், கொள்ளுங்கள்; இனி, ‘பறை’ என்றீர்களாகில்; நாம் உலகளந்தபோது ஜாம்பவான் நம் ஜயம் சாற்றின பறையைத் தருகிறேன்; ‘பெரும்பறை’ என்றீர்களாகில், நாம் இலங்கை பாழாளாகப் படை பொருதபோது நம் ஜயஞ்சாற்றினதொரு பறையுண்டு; அதனைத் தருகிறேன்; அதற்கு மேல் ‘சாலப்பெரும் பறை’ என்கிறீர்களாகில் மிகவும் பெரிதான பறையாவது – நாம் *பாரோர்களெல்லாம்; மகிழப் பறை கறங்கக் குடமாடுகிறபோது நம் அரையிலே கட்டியாடின தொரு பறையுண்டு; அதனைத் தருகிறேன்; கொள்ளுங்கள்; பல்லாண்டு பாடுகைக்கு உங்களுக்குப் பெரியாழ்வாருண்டு; அவரைப் போலெ ‘அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு’ என்று உங்களையும் நம்மையுஞ் சேர்த்துக் காப்பிடுகை யன்றியே “பொலிக பொலிக பொலிக!” என்று உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையுங் கொண்டுபோங்கள்; இனி, கோல விளக்குக்காக உபயப்பிரகாசிகையான நப்பின்னையைக் கொள்ளுங்கள்; அதற்கு மேல் கொடிவேணுமாகில் “கருளக்கொடி யொன்றுடையீர்” என்று நீங்கள் சொல்லும் பெரிய திருவடியைக் கொண்டுபோங்கள்; அதற்குமேல் விதானம் வேணுமாகில், நாம் மதுரையில் நின்றும் இச்சேரிக்கு வரும் போது நம்மேல் மழைத்துளி விழாதபடி தொடுத்து மேல்விதானமாய்வந்த நம் அனந்தனைக்கொண்டுபோங்கள்; இவ்வளவேயன்றோ நான் உங்களுக்குச் செய்யவேண்டுவது” என்ன;
இதுகேட்ட பெண்கள், “பிரானே! மார்கழி நீராடப்போம்போதைக்கு வேண்டியவை இவை; நோன்புநோற்றுத் தலைக்கட்டினபின்பு நாங்கள் உன்னிடத்துப் பெறவேண்டிய பல பஹுமர்நவிசேஷங்களுள் அவற்றையும் நாங்கள் பெற்று மகிழும்படி அருள்புரிய வேணுமென்று ப்ரார்த்திக்கும் பாசுரம், இது.
“கூடாரை வெல்லுஞ் சீர்க்கோவிந்தா!” என்னும் விளி – கூடுமவர்கட்குத் தோற்று நிற்குமவனே! என்ற கருத்தை உளப்படுத்தும். ஆச்ரிதர் திறத்திலே எல்லாப்படிகளாலும் பரதந்த்ரனாயிருப்பவனே! என்கை, ராமாவதாரத்திலே தன்னோடு கூடின ஸுக்ரிவ மஹாராஜர்க்குப் பரவசப்பட்டு வழியல்லாவழியில் வாலியைவதை செய்தமையும், கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்க்குப் பரவசப்பட்டுப் பொய் சொல்லியும் கபடங்கள் செய்தும் நூற்றுவரை முடித்தமையும் முதலானவை இங்கு அநுஸந்திக்கத்தகும்; இவையெல்லாம் ஆச்ரிதர்க்கும் தோற்றுச்செய்யுஞ் செயல்களிறே. இப்போது இவர்கள் இங்ஙனே விளித்தற்குக் காரணம் யாதெனில்; நீ எங்களுடைய மழலைச் சொற்களுக்குத் தோற்று, நாங்கள் வேண்டியனபடியெ பறைமுதலியவற்றை யெல்லாம் தந்தருளினவனல்லையோ? என்னுங்கருத்தைக் காட்டுதற்கென்க.
(உன்றன்னை இத்யாதி.) இப்படிப்பட்ட உன்னை நாங்கள் நெடுநாள்பட்ட துயரமெல்லாந் தீரப்பாடி, அப்பாட்டினால் தோற்ற உன்னிடத்துப் பறையைப் பெற்று, மேலும் பெறவேண்டய பரிசுகள் பல உள் அவற்றையும் நீ குறையறப் பெறுவிக்க வேணுமென்கிறார்கள்.
நாடு புகழும் பரிசினால் – நெடுநாளாக நாங்கள் எல்லாராலும் பட்ட அவமானம் மறக்கும்படியாக, ‘ஆ! பெண்கள் கண்ணபிரானைக் குறித்து நோன்பு நோற்றுப் பேறு பெற்றபடி என்னே!’ என்று அனைவரும் கொண்டாடும்படி நீ எம்மை பஹுமானிக்க வேணுமென்றபடி.
பஹுமாநிக்கவேண்டியபடியைக் கூறுகின்றனர், சூடகமே என்று தொடங்கி.
பாடகம் – பாதகடகமென்னும் வடசொற்சிதைவு. இன்னவை என்று எடுத்துக் கூறப்பட்ட இவ்வாபரணங்களையும் இவைபோல்வன மற்றும் பல ஆபரணங்களையும் நீ உன் கையால் எங்களுக்குப் பூட்ட, நாங்கள் அணிந்தோமாகவேணும்; அங்ஙனமே ஆடைகளையும் நீ உன் கையால் எங்களுக்கு உடுத்த நாம் உடுத்தோமாக வேணாமென்கிறார்கள்.
(பாற் சோறு இத்தியாதி) “வையத்து வாழ்வீர்காள்” என்ற பாட்டில் “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” என்று பிரதிஜ்ஞை பண்ணின இவர்கள் இன்று நோன்பு நோற்று முடிக்கையாலே உணவை வேண்டுகின்றன ரென்க. இன்றளவும் ஆய்ச்சிகள் உணவைத் தவிர்ந்திருக்கின்றனரே; என்று கண்ணபிரான்றானும் உண்ணாதிருந்தமையால் ஊரில் நெய்பால் அளவற்றுக் கிடக்குமாதலால் “பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார” என்கிறார்கள்.
“கூடியிருந்து குளிர்ந்து” என்கையாலே, பசி தீருகைக்காக உண்ணவேண்டுகிற தன்று, பிரிந்து பட்ட துயரமெல்லாம் தீருமாறு எல்லாருங் கூடிக்களித்திருக்கை உத்தேச்ய மென்பது போதரும்.// நன்றி http://dravidaveda.org/
பழைய நகை வகைகளைக் கவனித்தீர்களா?
சூடகம் – கையிலணியும் ஆபரணமானவை; இப்போது வளை, காப்பு என்று வழங்கப் பெறுபவை
தோள் வளை – வங்கி என்று இரண்டு தலைமுறை முன்வரை அணிந்ததாக இருக்கலாம்
தோடு – இன்னும் தோடுதான்.
செவிப் பூ, – கர்ணபூ என்கிறார். என்ன மாதிரி நகை?
பாடகம் – பாத கடகம். சிலம்பு தானே?
(உரையாசிரியர் சொல்வதைக் கவனிக்கவும் -’பாடகம் – பாதகடகமென்னும் வடசொற்சிதைவு.’).
கூடாரவல்லியை நண்பர் க்ரேஸி மோகன் சற்று முன்னர் அனுப்பிய அருமையான ஒரு வெண்பாவோடு கொண்டாடுவோம்
“கோடேறி விண்டு குவலயா பீடத்தின்
சூடாற வைத்து ஜெயித்தவனை -கூடார
வல்லியின்று , வில்லிபுத்தூர் கோதை திருப்பாவை
சொல்லியென்றும் வாழ்வோம் சுகித்து”….
******************************************
ஃபேஸ்புக் உரையாடல்
EraMurukan Ramasami 21 hours ago