தினை அல்லது சஞ்சீவனி நாவலின் இறுதி அத்தியாயத்திலிருந்து. திண்ணை இணைய இதழில் பிரசுரமாகிறது. புத்தகமாக இந்த நாவல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாக வெளியாகியுள்ளது
விடிந்தபிறகு தான் கரப்புகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. கிட்டத்தட்ட முழு இனப் படுகொலை.
அரசாங்கத்தில் வெவ்வேறு நல்ல பதவிகளில் இருக்கும் மூத்த, நிறம் மங்கிய கருப்புகள் அரண்மனை வாசலில் பழைய மோட்டார் வாகனங்களின் சக்கரங்கள் முன்னும் பின்னும் நகர நசுக்கப்பட்டு ரத்தவாடையோடும் தசை நாற்றத்தோடும் தெரு முழுக்க அங்கங்கே சாணகம் போல் ஒட்டியிருந்தன.
வீடுகளுக்குள் இருந்து இழுத்து வரப்பட்ட கரப்பு இனப் பெண்கள் விஷவாயு சுவாசிக்க வைக்கப்பட்டு உடல் முறுக்கி இறந்தன. பள்ளிகளுக்குள் இருந்து வெளியே உதைத்து அனுப்பப்பட்ட இளம் கரப்புகள் நீர்த்தொட்டிகளுக்குள் அமிழ்த்தப்பட்டு மூச்சு முட்டி மரித்தன.
நாடு முழுவதும் பல கரப்புகள் கரப்புகளாலேயே கொல்லப்பட்டன. இரண்டு இரண்டு கரப்புகளாக அணைப்பில் இருத்தப்பட்டு இந்த இணையர்களில் ஒருவர் மற்றவரின் தலையை கத்தி போன்ற கால் கொண்டு அறுத்து எறியக் கட்டளை பிறப்பிக்கப் பட்டது. கரகரவென்று தலையறுக்கிற காரியம் அவசரமில்லாமல் நடக்கவும், தலைகள் கீழே விழும்போது பாடிக்கொண்டிருக்கவும் நிர்பந்திக்கப்பட்டன அக்கரப்புகள்.
நெருப்புக் கொளுத்தி தீ கனன்று எரிய கரப்புகள் குடும்பம் குடும்பமாகத் தீயில் விரட்டப்பட்டுப் புகுந்து புகைந்து எரியும் காட்சிகள் நாடு முழுக்க அரங்கேறி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.
நாடு முழுவதும் பெருந்தேளரசரும் குழலனும் கைகோர்த்து நிற்கும் பிரம்மாண்டமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ’இவர்கள் கூடினால் இணை ஏது உலகில்’ என்ற வாக்கியம் கீழே அச்சடித்து வந்த இந்தச் சுவரொட்டிகளைப் படித்து ’கூடினால்’ என்ற சொல்லுக்குச் சிறப்புப் பொருள் கற்பித்து நாடெங்கும் மிஞ்சியவர்கள் சிரிக்க, பிளாஸ்டிக் வாளிகளில் பசை காய்ச்சி எடுத்துப் போகப்பட்டுச் சுவர் தோறும் சுவரொட்டிகளின் கீழே கருப்புக் காகிதம் ஒட்டப்பட்டது.
சுவரொட்டிகளில் சதா சிரித்துக் கொண்டிருக்கிறான் குழலன். தெருவில் சுவரொட்டி ஒட்டிய சுவரைக் கடந்து நாற்பதுக்காரிப் பெண் யாராவது போகும்போது மட்டும் கண் விழுங்காமல் அவள் பின்னே போஸ்டர் குழலன் தொடர்வதாக எங்கும் பரவலாக வதந்தி பரவியது.
ஆடி ஆடி வரும் ஆசனம் பெருத்த மத்திய வயசுப் பேரழகி ஒருத்தியின் பின்னால், சுவரொட்டி ஒட்டி வைத்திருந்த சுவரே நடக்க ஆரம்பித்து விட்டதாகத் தகவல்.