வாழ்ந்து போதீரே, அரசூர் நாவல் வரிசையில் நான்காவதாக வெளிவந்துள்ளது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங்க் அச்சுப் பதிப்பாக அண்மையில் வெளியிட்ட இந்த நாவலில் இருந்து
கதவுக்கு வெளியே நிறையப் பதக்கங்களும் கயிறுகளும் நாடாக்களும் அப்பிய, பச்சை அழுத்தமாகப் பதிந்த ராணுவ உடுப்போடு நடு வயது மேஜரோ வேறே பெரிய பதவியில் இருப்பவரோ ஒருவர் மண்டி போட்டுக் கைகளை ஒருசேர மேலே உயர்த்தி இருந்தார். அவர் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
அந்த அதிகாரிக்கு இரண்டு அடி தூரத்தில் அறை முழுக்க ராணுவத்தினர். வெளியே படிகளில், தெருவுக்கு இட்டுச் செல்லும் நடைபாதையில், வீட்டு வாசலில், தெரு முழுக்க எங்கேயும் ராணுவம் தான்.
அதிகாரி விக்கி விக்கி அழுதபடி ஆடும் பறவை ஆடும் பறவை என்று திரும்பத் திரும்ப ஆப்ரிகான்ஸ் மொழியில் சொல்லிக் கொண்டிருந்தார்.
டான்ஸ் உயல். பௌ. டான்ஸ் உயல். பௌ. பௌ. உயல்.
அந்தக கூவலை உள்வாங்கி அருகே இருந்த அதிகாரிகளும் அவர்களிடமிருந்து அலையலையாகக் கடந்து தெரு வரை, அல்லது அதற்கும் அப்புறம் நின்றவர்களும் ஆடும் பறவை என்று திரும்பச் சொல்லும் சத்தம். ஒன்று சேர முயலும் ஒலிகள் திரண்டு எழும்பி வர, பல கைகள் வானம் பார்க்க நீண்டு உயர்ந்து நின்றதைப் பார்வை சென்ற இடமெல்லாம் சந்தித்தாள் நந்தினி. என்ன பறவை? எங்கே ஆடுகிறது?
மெல்ல எழுந்த ராணுவ அதிகாரி குரல் கரகரக்க நந்தினியின் கைகளை தேவதையை ஸ்பர்சிப்பது போல் பிரமிப்போடு தொட்டார். தெய்வச் சின்னங்களை மரியாதையோடு முத்தமிட்டு வணங்குவது போல் இன்னொரு முறை மண்டியிட்டு அவள் கைகளில் ஆராதகராக முத்தமிட்டார்.
சகோதரி, மூத்த சகோதரி.
நந்தினி எதுவும் புரியாமல் ஒரு வினாடி நின்றாள். அவளுக்கு இவர்களால் இனி எந்தத் துன்பமும் வராது என்று மனதில் பட்டது. அது கொடுத்த ஆசுவாசமே பலமானதாக இருந்தது. சாப்பிடலாம். குளிக்கப் போகலாம்.
வாசலில் மரியாதையோடு நின்று உள்ளே வரலாமா என்று உத்தரவு கேட்டார் அந்த அதிகாரி. அபத்தமான சூழ்நிலை. பழைய பருத்தி அங்கி அணிந்து படுக்கையில் உட்கார்ந்தபடி நந்தினி. அந்த ஆபீஸர் உட்கார வேறு இடம் இல்லை என்பதால் அவரையும் அங்கே அமரச் சொல்லித் தான் கைகாட்ட வேண்டியிருந்தது. படுக்கையில் வேற்று மனிதரை இருக்கச் சொல்லிக் கூப்பிடுவதன் அபத்தம் புலனாக, மெல்லச் சிரித்தாள் நந்தினி.
காட் ஸெ அவொர் சிஸ்டொர். கடவுளின் அக்கா. அவொர் சிஸ்டொர்.
அவர் பிதற்றியபடி உள்ளே வந்து விதிர்விதிர்த்து நின்றார். உட்கார மறுத்து விட்டார். அது மரியாதையில்லை என்பது போல் கையசைத்தார். ஏதோ சொல்லி உடனே வெளியே போக வேண்டிய அவசரம் அவர் அசைவுகளில் தெரிந்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தார் அவர். வாசலை நோக்கிக் கை காட்டினார்.
ஒரே ஒரு செய்தி மட்டும் சொல்ல வேண்டும் உங்களிடம். சொல்ல அனுமதிப்பீர்களா?
அவர் மரியாதை விலகாத குரலில் கேட்டார்.
சொல்லுங்கள் என்று ஆதரவாகக் கூறினாள் நந்தினி.
வாசலில் வைத்த படத்தில் இருந்து அந்தப் பறவை.
அவர் ஆரம்பித்து ஒரு வினாடி நிறுத்தினார். உடல் இன்னும் நடுங்கியது.
அந்தப் பறவைக்கு என்ன?
எல்லாமே தான், அவொர் சிஸ்டொர். நிறைய இறகுகள் உள்ள, வர்ணத்தில் அவை மினுமினுக்கும் பறவை இல்லையா அது. பறவை படத்துக்குள் இல்லை. வெளியே உங்கள் அறைக்கு வெளியே நடனமாடியபடி நின்றது. நீங்கள் கடவுளின் மூத்த சகோதரி என்று செம்மொழியான பிரஞ்சில் அகவியபடி அறை முழுக்கத் தாழப் பறந்து வந்தது. பார்த்தேன். கேட்டேன். அந்தக் குரல். அதை எப்படி மறப்பேன்?
அவர் வாசல் பக்கம் திரும்பவும் உத்தேசமாகக் காட்டி வியப்பு மறையாமல் சொல்ல, நந்தினிக்கு முன்னறையில் மாட்டிய இந்திய ஓவியம் நினைவில் வந்தது. ஆடுகிற ஆண் மயிலும், ஓரமாக நின்று கவனிக்கிற பெண் மயிலுமாக இந்தியத் துணைக்கண்ட ஓவியன் வரைந்தது அது. லண்டனில் ஆர்ட் கேலரிக்கு வெளியே புதியதாக வரைந்த படங்களையும் நகல்களையும் பரத்திப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த போலந்து நாட்டுக் கிழவரிடம் முப்பத்து நாலு பிரிட்டீஷ் பவுண்டுக்கு வாங்கியது அந்த ஓவியம். இன்னார் வரைந்தது என்ற உறுதி தரும் ஆவணம் எதுவும் மயிலாடும் ஓவியத்துக்கு இல்லை என்று கை விரித்து விட்டார் போலந்துக்காரர். Talisman தாயத்து என்று கான்வாஸின் வலது கீழ் ஓரத்தில் எழுதியிருந்தது ஓவியத்தின் பெயராக இருக்கக் கூடும்.
ராத்திரியில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் படம் மாந்திரீகமான நீல ஒளியைச் சிந்தி அறையையே அந்த நிறத்தில் குளிரக் குளிரக் குளிக்க வைப்பது அவ்வப்போது நடக்கிறதுதான். ஆனாலும் அந்த மயில் படச் சட்டத்தை விட்டு வெளியே வந்து ஆடியதும், பறந்து அறை முழுக்கச் சுற்றியதும், திரும்ப உள்ளே போனதும் எல்லாம் நடந்ததில்லை.
இந்த மாதிரியான நீளமான நீல இறகு கொண்ட மயில்கள் அம்பலப்புழையில் நிறையக் காணக் கிடைக்கும் என்று விடுமுறைக்கு லண்டனில் இருந்து வந்த அம்மா சொன்னாள். வைத்தாஸுக்குப் பிடித்ததால் லண்டனில் வாங்கியது என்பது தவிர வேறே சிறப்பான கவனம் எதையும் இந்தப் படத்தில் வைக்கவில்லை.
பறவை இருக்கட்டும். நீங்கள் சொல்ல வந்தது?
அதிகாரி கை உயர்த்தி உறுதியான குரலில் முழங்கினார்.-
உங்களை யாரும் துன்பப்படுத்த மாட்டார்கள். துரும்பை எடுத்து உங்கள் மேல் தூக்கிப் போட்டாலும் எட்டு சிப்பாய்கள் முன்னால் வந்து நின்று அவர்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவார்கள். அதற்கான உத்தரவை இன்று பிறப்பிக்கிறேன்.
அப்போது தான் முன்னால் வணங்கி நிற்பவர் ராணுவத்தில் உச்ச பட்ச மரியாதைகளோடு இருப்பவர் என்று நந்தினிக்குத் தெரிய வந்தது. தேசத்தின் அடுத்த அதிபராகப் பதவி ஏற்கப் போகிறவர் அல்லது ஏற்றவர்.
வைத்தாஸ் ஐயன் நாட்டின் செல்வம். அவருடைய அன்பு மனைவியான நீங்களோ இங்கே இருக்கும் உங்கள் உறவினர்களோ இந்த நாட்டை விட்டு எப்போதுமே வெளியே போக வேண்டாம். வைத்தாஸ் அவர்களும் திரும்பி வந்து எங்களோடு சேர்ந்து இருக்கவே விரும்புகிறோம். அவர் எழுத்தாளர். மகிழ்ச்சியாக இங்கே இருந்து நாவல் எழுதாமல் எதற்கு அவர் தனியாக எங்கேயோ கிடந்து துன்பப் படவேண்டும்? இருந்து எழுத விசாலமான இடம், தட்டச்சு செய்து தரக் காரியதரிசி, புதிதாக எழுதத் தோதான பழங்கதைகளைப் பாடும் நாட்டுப்புற முதுபெண்கள், தேநீர் தயாரித்து வழங்க, கைகால் பிடித்து விட ஊழியர்கள் என்று ஏற்படுத்தி விடலாம். விருதுகளை ஏற்படுத்தி, நாமே ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நூல்களுக்காகக் கொடுத்து விடுவோம்.
ராணுவ அதிகாரி சொன்னதற்கெல்லாம் மரியாதையோடு தலையசைத்து உய் உய் என்று ஆமோதித்து பேச்சை முடிக்க அவசரம் காட்டினாள் நந்தினி,
அந்தப் பறவை படத்தில் திரும்பப் போய் என்னிடம் சொன்னது. உங்களை கடவுளின் மூத்த சகோதரியாகப் போற்றினாலே எம் அரசாங்கம் நிலைக்கும் என்று. அதற்கான உத்தரவும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் வெளியாகும்.
புதிய ஜனாதிபதி கையை உயர்த்தி, உச்ச பட்ச கௌரவமான விருதை அளிப்பது போல் நின்று அது சரிப்படாது என்று உணர்ந்தவராக, இன்னொரு முறை நந்தினிக்கு முன் மண்டியிட்டார்.
வைத்தாஸ், நீ எங்கே? இதையெல்லாம் பார்க்க வேண்டாமா உனக்கு? உன் பெண்டாட்டி காலடியில் நொடிக்கொரு தரம் நாட்டின் அதிபர் மண்டியிட்டு மரியாதை செலுத்துகிறார். வெளியாகப் போகும் அரசாங்க உத்தரவு சொல்கிறது நான் கடவுளின் மூத்த சகோதரி என்று. வைத்தாஸ், உன் நாவலில் இது வருமா? உனக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இல்லையா?
ஒரு ஆச்சரியமும் இல்லை. உன்னை தெய்வமாக்கின பிறகும் பாத்ரூம் உபயோகிக்கவோ, சாப்பிடவோ, உறங்கவோ எந்த விதமான இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்று தயவு தாட்சணியம் பார்க்காமல் அவர்களிடம் கூறு.
லண்டன் பாலப் படத்தில் இருந்து வைத்தாஸ் வெளிப்பட்டு உலாத்தியபடி இதைச் சொல்லித் திரும்பப் படத்தில் ஏறும்போது நந்தினியைப் பார்த்தான்.
மயில் எச்சம் எல்லாம் வரவேற்பறை சோபாவில் இல்லாமல் கவனமா இரு. மேலே அப்பினால் லேசில் போகாது. எல்லா நரகலும் நாறும்.
வைத்தாஸ் இங்கு இல்லை. இறகு வாடையடிக்கும் மயிலும் இல்லை. ஒன்று தவிர மற்ற மயில் படங்கள் இனிப் படங்களாகவே இருக்கட்டும். அந்த ஒரே ஒரு ஓவியத்திலிருந்து மட்டும் மயில் வெளியே வந்து ஆடி அற்புதம் நிகழ்த்தட்டும்.
ராணுவ வண்டி வாசலில் நின்ற பகல் பொழுதில் நந்தினி அப்படி நினைக்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆகி விட்டது.
ராணுவக் குழுக்கள் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்றன. யார் வந்தாலும், நந்தினி வீட்டுக்கு அந்தப் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் வந்து அவளை மண்டியிட்டு வணங்குகிறார். வாசலில் ஆடும் பறவை ஓவியத்தை பிரமிப்போடு பார்க்கிறார். அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு போகிறார்கள். மறுநாள் உள்ளூர்ப் பத்திரிகையில் மக்கள் தலைவர் புனித சகோதரியிடம் ஆசி பெற்றார் என்ற செய்தியும் புகைப்படமும் வெளியாவதும் தவறாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
வைத்தாஸ் சார்ந்திருக்கும் அரசியல் பிரிவை ஆதரிக்கும் ராணுவக் குழு நேற்று திரும்பவும் பதவிக்கு வந்தது. ஏழு மாசம் முன்னால் ஒரு தடவை அவர்கள் அதிகாரத்தைப் பிடித்தார்கள் தான். ஆப்பிள்களோடும் ஆரஞ்சுகளோடும் அப்போது நந்தினியைப் பார்க்க வந்தபோது அவள் இந்தியா போகவேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினாள்.
ஏற்பாடு செய்கிறேன்
சொல்லிப் போனவர் அடுத்த வாரம் சுட்டுக் கொல்லப் பட்டார்.
வாசலில் இதோ இப்போது ஒரு ராணுவ வண்டி நிற்கிறது. புது ஜனாதிபதி. பின் தள்ளிய பெருத்த மனுஷர். கூடவே மரியாதையான இடைவெளி விட்டுப் புகைப்படக் காரர்கள். ராணுவ அதிகாரிகள்.
மயிலும் குயிலும் இருக்கட்டும். இந்தியா போக வழி பண்ணுடா
முணுமுணுத்தபடி, கடவுளின் மூத்த சகோதரி மூட்டுப் பிடிப்புக்குக் காலில் களிம்பு புரட்டலானாள்.