இப்போதைக்கு பகவதி என்று பெயர் போடலாம். ராசியான பெயர் அது ..

அரசூர் நாவல்கள் நான்கு. நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நூலில் இருந்து

சின்னச் சங்கரன் குழந்தை அழுகை சத்தம் கேட்டு உள்ளே போகிறான். பெற்ற உடம்பு அதியுன்னதமாக உலகத்து தாய்மை எல்லாம் சேர்ந்து கவிந்து மின்ன வசந்தி மெல்ல அவனை ஒரு வினாடி பார்த்து விட்டு, தொட்டிலில் உறங்கும் பெண் குழந்தையை பிரியமாக நோக்குகிறாள்.

பொண்ணு. பரவாயில்லையா?

குழந்தை பிறந்த தினத்தில் அவன் ஆஸ்பத்திரிக்கு முதலில் வந்தபோது வசந்தி கேட்டது இது. அவளிடம் அவளுடைய அம்மாவும் அம்மாவிடம் அவர்களுக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த மூத்த உறவுக்காரப் பெண் ஒருத்தியும் கேட்டது இது.

வசந்தியிடம் மட்டும் சொன்னான் – நான் இவளைத் தான் எதிர்பார்த்தேன். பெயர் என்ன தெரியுமா? பகவதி. பகவதின்னு வச்சு பகவதிக்குட்டின்னு வாய் நிறையக் கூப்பிடணும். கொச்சு பகவதியாக்கும் இவள்.

மலையாள வாடை தூக்கலா இருக்கே.

வசந்திக்குப் பிடித்த ரேஷ்மா, ஷிஃபாலி, கோமல்கலி போன்ற பெயர்களை நிராகரித்து விட்டான் சின்னச் சங்கரன். பசுமை மணக்கும் ஊரும், காயலும், அம்பலமும், சோபான சங்கீதமும், பால் பாயச இனிப்பும் மனதில் எழுப்பும் பகவதிக்கு ஈடாகுமா அதெல்லாம்?

வசந்தி ஒரு சமாதானத்தைச் சொன்னாள் – பகவதின்னு ஒரு பெயர் இருக்கட்டும். பெயர் சூட்டற அன்னிக்கு வரை பார்ப்போம். வேறே ஏதாவது கூப்பிடற பெயர் தட்டுப்பட்டா குழந்தைக்கு அதையும் சூட்டிடலாம்.

வசந்தி கண்ணால் சிரித்து குழந்தையைப் பார்வையால் காட்டி சின்னச் சங்கரனைப் பாரு என்றாள். பட்டுத் துணியில் பொதிந்த பழக்குவியல் மாதிரி சின்னதாக வாய் அசைத்து சின்னஞ்சிறு கண்கள் செருகி சற்றே திறந்து பின் மலர்ந்து உறக்கத்தில் லயித்த குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சின்னச் சங்கரன்.

ஆண் குழந்தை. அதுவும் வருமாம். வசந்தி இல்லாமல். எங்கோ கேட்டது மாதிரி. பிரமை தானா? சங்கரனுக்குத் தெரியவில்லை. மனசு, தப்புச் செய்யப் போகும் குறுகுறுப்பில். அதற்கான சந்தோஷம் வேறே நேரம் காலம் பார்க்காமல்.

குழந்தைக்கு பக்கத்தில் இந்த மாதிரி மனநிலை ஏன் வரணும்? பரிசுத்தமான நினைப்பும் பார்வையும் பேச்சும் இருக்க வேண்டிய இடத்தில் தப்பு செய்கிற குறுகுறுப்பு ஏன்?

வசந்தி கண்ணை மெதுவாக மூடி அடுத்த உறக்கத்தில் அமிழ வெளியே வந்தான்.

ஒன்று விட்ட மைத்துனியோ, மைத்துனன் சம்சாரமோ, அவளுக்கு அம்மாவோ, தங்கையோ, இளம் வயதாகத் தெரிகிற பெண்பிள்ளை கலந்து கொடுத்த காப்பியோடு பொழுது தொடங்குகிறது. வசந்தி ஒத்துழைப்பு இல்லாமல் ஆண் குழந்தை. வேண்டாம். அது கனவு. தறிகெட்டு மனதை அது அலைக்கழிக்க வேண்டாம். தில்ஷித் கவுர்? அவள் வீட்டுக்காரன் புதுச் செருப்பு வாங்கி வந்து விலைச் சீட்டைப் பிய்த்து எறிந்து விட்டு, சாப், கன்னத்தைக் காட்டுங்கள் என்று மரியாதையோடு அடிப்பான். தேவையா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன