கல்பனா தவிர வங்காளத்தில் வேறு பெண் குழந்தை பெயர் வைக்க மாட்டார்களா?

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நாவலில் இருந்து

சேர்ந்து மெதுவாக ஓட ஆரம்பித்தார்கள்.

பிரசவ ஆஸ்பத்திரி சேவை எல்லாம் சீராகக் கிடைக்கிறதா?

மோஷய் அக்கறையாகக் கேட்டார். ஏதாவது குறை இருந்தால் அவரிடம் சொன்னால் உடனே சரி பண்ணித் தருவதாகவும் சொன்னார். அவரால் அது முடியும்.

ஒரு பிரச்சனையும் இல்லே. வீட்டுக்கு முந்தாநாளே வந்துட்டா. நார்மல் டெலிவரி தான்.

பெயர் என்ன வைக்கப் போறே?

கனவு நினைவில் உடனடியாக வந்து புகுந்து கொண்டது. கூடவே வசந்தி ஒத்தாசை இல்லாமல் இன்னொரு குழந்தை.

ஆறடி ஆகிருதியாகக் கடந்து வந்து முன்னால் முந்திப் போன வடிவான பஞ்சாபிப் பெண்ணின் பின்னால் நிலைத்த பார்வையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுத்தான் சங்கரன். சங்கரனின் குழந்தையை அவள் ஏன் சுமக்க வேணும்? அடுத்த கனவில் விசாரித்தால் தெரியுமாக இருக்கும்.

பெயர் இன்னும் வைக்கலேன்னா கல்பனான்னு வை.

மோஷாய் நேராகப் பார்த்துக் கொண்டு சொன்னார்.

மார்க்சீயர்களுக்கு அச்சு வெல்லம் போல பெண் குழந்தை என்றால் உடனே நினைவு வரும் பெயர் இந்த கல்பனா. கல்பனா தத் பற்றியும் சிட்டகாங் நகரில் காங்கிரஸ் சோஷலிஸ்ட்கள் நடத்திய ஆயுதக் கிடங்கு ஆக்கிரமிப்பு பற்றியும் பிடார் ஜெயம்மா சங்கரனுக்கு நிறையச் சொல்லி இருக்கிறாள். அவளுக்கு இடதும் வலதும் ஒன்றுதான் என்றாலும் கல்பனாவை ரொம்பவே பிடிக்கும்.

குழந்தை வெள்ளிக்கிழமை பொறந்திருக்கா. சாரதான்னு பெயர் போடுடா. சிருங்கேரி பீடம் சாரதாம்பா தரிசனத்துக்குப் போயிருக்கியோ? நீ எங்கே போனே? லீவு கிடைச்சா அரசூருக்கு கோழி மேய்க்க ஓடிப் போயிடுவே.

பிடார் ஜெயம்மா கேண்டீனில் வழக்கம்போல ஒலிபரப்பி சங்கரனுக்குப் பெண் பிறந்த தகவல் புதிதாகப் போய்ச் சேர்ந்தது. சந்தோஷ சமாசாரம் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி கடலை எண்ணெய் முழுக்காட்டிய கேண்டீன் ஜிலேபியாக முடிந்தது வேறே கதை.

மித்ரா மோஷாய் ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் கேண்டீனுக்கு வந்திருக்கிறார். அவருக்கு அங்கே காப்பி மட்டும் இஷ்டம். நசநசவென்று எண்ணெய் கையில் பிசினாக ஒட்டும் மதறாஸி இனிப்பெல்லாம் அவருக்குப் பகை.

கல்பனா, அஜிதா, மிருணாளினி இது தவிர வங்காளத்தில் பெண் குழந்தை பெயரே இல்லையா மோஷாய்?

ஓடிக் கொண்டே சங்கரன் விசாரித்தான்.

ஏன் இல்லாமல், காவேரி.

அது சுத்தத் தமிழ்ப் பெயர் தான் என்றான் சங்கரன். அப்புறம் குழந்தைக்கு அதை வைக்க என்ன தடை என்று விசாரித்தார் அவர். அதானே?

மோஷாய், மான்செஸ்டர் கார்டியன் பத்து நாள் பேப்பர் ஒற்றைக் கட்டாக பிளேனிலே அனுப்பி வச்சு பிரஸ் கிளப்பில் நேற்று வந்தது. படிச்சீங்களா?

பேச்சை மாற்றுவதற்காக இல்லை, உண்மையாகவே அந்த பிரிட்டீஷ் செய்தித்தாளைப் படிப்பதில் சகல மார்க்சீயர்களுக்கும் பெருவிருப்பம் இருப்பதை சங்கரன் அறிவான்.

படிச்சேன் ஷொங்கொர். அதென்ன, எலிசபெத் ராணிக்குக் கொடுக்கற மானியத்தை குறைக்கணும்னு ஹவுஸ் ஓஃப் காமன்ஸ்லே இப்படி விடாப்பிடியா வாக்குவாதம் பண்றாங்க. வேதனையா இருக்கு. ராணியம்மா மதிப்பு இந்த அறிவிலிகளுக்கு என்ன தெரியும்?

சங்கரன் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தான். எல்லா மார்க்சீயர்களும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கொண்டே இங்கிலீஷ் கலாசாரத்தில். மரபில் லண்டன் மாநகரத்தில், பிரிட்டன் என்ற தேசத்தில் முழு ஈடுபாடு உடையவர்கள் என்று பிடார் ஜெயம்மா சொல்வது நினைவு வந்தது. இங்கே இருந்து விரட்டினால் அங்கே போய்க் குடியேறி விடுவார்களாக இருக்கும்.

பார் அட் லா அங்கே தான் படிச்சு வருவாங்க. பிரிட்டீஷ ராணி, ராஜ குடும்ப விசுவாசிகளோட பட்டியல் எடுத்தா இவங்க பெயர் முதல்லே இருக்கும்.

ராஜ விசுவாசிக்கு வாழ்த்து சொல்லி சங்கரன் கிளம்பினான்.

மயூரா. இந்தப் பெயர் எப்படி இருக்கு?

போகும்போது அவனை நிறுத்தி மோஷாய் கேட்டார்.

கல்பனா வேணாமா மோஷாய்?

அவ பாவம் ரொம்ப கஷ்டமான ஜீவிதம். கல்கத்தாவிலே தெருவுக்கு நாலு கல்பனா உண்டு. போதும் இப்போதைக்கு. மயூரா பிடிச்சிருக்கா? மயூரான்னா மயில். அழகும் உண்டு. போர்க் குணமும் உண்டு. இந்தக் காலப் பெண்ணுக்கு இதெல்லாம் தான் முக்கியம்.

மோஷாய் மூச்சு வாங்கிக் கொண்டு சொன்னபடி வாசலில் காரை நோக்கி நகர்ந்தார்.

சங்கரன் வீட்டில் நுழைந்தபோது வீட்டு முற்றத்தில் ஒரு மயில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. அவன் உள்ளே நுழைய அது ஒரு கணமும் தாமதிக்காமல் வெளிச்சுவர் கடந்து பறந்து போனது.

மயூரா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன