வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது- அத்தியாயம் 6 சில பகுதிகள். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப் பதிப்பு வெளியீடு
ஹோம குண்டம் இப்படி கைக்கடக்கமா செஞ்சு விக்கறதா? நம்மாத்திலே எல்லாம் தரையிலே செங்கல் வச்சுன்னா அக்னி வளர்த்தது? இது எனக்கு ஒண்ணு வேணுமே.
ஜெயம்மா புரோகிதர் கையில் இருந்து அஸ்பெஸ்டாசும் மரமும் இன்னும் ஏதோ உலோகமும் கலந்த ஹோம குண்டத்தை வாங்கிப் பார்த்து விட்டுக் கேட்டாள்.
ஆமா மாமி, புதுசுதான். இது நூர்ணி மேட்.
ஜூனியர் சாஸ்திரி சந்தோஷமாக அறிவித்தார்.
நூர்ணி அப்படீன்னா? இதாலியன் கம்பெனியா?
ஜெயம்மா புரியாமல் கேட்டாள்.
நூர்ணி பாலக்காட்டு பக்கம். எனக்கு ஸ்வதேசம்.
ஜூனியர் சாஸ்திரிகளுக்கு பெருமை பிடிபடவில்லை, சொந்த ஊரில் ஒரு கொல்லர், ஒரு தச்சர், ஒரு மோட்டார் மெக்கானிக் இப்படி ஒரு குழுவை அமைத்து டிசைன் ஸ்பெசிபிகேஷன் சொல்லி வாங்கி வந்த பெருமை அடுத்த ஐந்து நிமிடம் அரங்கேறியது.
என்ன செய்ய, தில்லி பட்டணத்துலே வந்து கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ் சிமெண்ட் தரையிலே அக்னி வளர்த்தா நாளக்கே மெமோ வரும்
உங்களுக்கு யார் மெமோ தர? ஜெயம்மா சிரித்தாள்.
ஏன் கேக்கறேள். ஒரே ஒரு காரியத்துக்குத் தான் கைக்கடக்கமா இன்னும் செஞ்சு வாங்கலே. அதுக்கு அங்கே நிகம்போத் காட்லே கொண்டு போய்க் கிடத்தினா எட்சட்ரா எட்சட்ரா
ஜூனியர் பால் குடித்தபடி தெம்பாகச் சொல்ல, அசத்தே அடக்கி வாசி என்றார் சீனியர்.
புண்ணியாஜனன நேரத்தில் சாவுச் சடங்கு பற்றி வேறெதும் குறிப்பிடாமல் கவனமாக அவர் தவிர்க்க, ஜெயம்மா உள்ளே நோக்கினாள்.
உங்க ப்ரண்டை பாஷாண்டியா நிக்காம குளிக்கச் சொல்லுங்கோ. புண்ணியமாப் போகும்.
வசந்தி மெல்ல குழந்தை உள்ளு என்று தாற்காலிகமாகப் பெயர் சூட்டிய உள்ளறையில் இருந்து எட்டிப் பார்த்து ஜெயம்மாவிடம் சொல்ல, அவள் சாடிப் பாய்ந்து அடி என் சமத்துக் கொடமே என்று வசந்தியைக் கட்டிக் கொண்டாள்.
இந்த மாதிரி அணைப்பு பெண்கள் மத்தியில் அந்நியோன்யத்தை அழகாகக் காட்டுகிற போது ஆண்கள் கட்டிக் கொண்டால் அராஜகமாக இருப்பதை நினைத்தபடி சங்கரன் குளிக்கப் போனான்.
உன்னை மாதிரி அழகா இருக்கா இந்தப் பொண்ணரசி.
பிடார் ஜெயம்மா குழந்தையை கன்னடத்திலோ, இல்லை, குழந்தைகளைக் கொஞ்சவே பொதுவாக யாரோ ஏற்படுத்திய மொழியிலேயோ சரம் சரமாக வார்த்தை சொல்லிக் கொஞ்சுவது குளியல் அறையில் எதிரொலிக்க, சோப்பு வாசனையோடு வந்து சாஸ்திரிகள் பக்கம் உட்கார்ந்தான் சங்கரன்.