அரசூர் நாவல் வரிசையில் நான்காவது வாழ்ந்து போதீரே. அதிலிருந்து
குழந்தை அழுகை நின்று போன வீட்டில் மந்திரங்களின் ஒலி மட்டும் இருந்தது
அண்டர் செக்ரட்டரி சார் மந்திரம் சொல்லலாமோன்னோ.
சங்கரன் ஹோம அக்னியில் பார்த்த மூன்று பெண்டுகளையும் காலையில் உறக்கமா விழிப்பா என்று விளங்காமல் கிடந்த நேரத்தில் பார்த்த நினைவு வந்தது. ஒன்று பகவதிப் பாட்டி, மற்ற இருவர்?
அவாள்ளாம் யாரு?
சங்கரன் சாஸ்திரிகளிடம் கேட்க, யாரெல்லாம் என்று எதிர்க் கேள்வி கேட்டார் அவர்.
அதற்கெல்லாம் நேரமே கொடுக்காமல் உள்ளே இருந்து மாவிலை, ஜிகினாக் காகிதம், பட்டு ரிப்பன் என்று அலங்காரம் செய்த ஆகி வந்த மகா பழைய தொட்டிலும் வசந்தி அம்மா ஜாக்கிரதையாகத் தலைக்குப் பின்னால் அணைத்துப் பிடித்த குழந்தையும் வந்தானது. அந்தத் தொட்டில் ஜெயம்மா வீட்டில் மூணு தலைமுறையாக வம்சம் வளர்ப்பது.
கொழந்தையை தோப்பனார் மடியிலே வச்சுக்க வேண்டியது.
சாஸ்திரிகள் அறிவிக்க, ஜெயம்மா கவுண்டர் போட்டாள்.
இவன் மடியிலேயா? வசந்தியைப் போட்டுண்டாலே ஒழுங்காப் பிடிச்சுக்கத் தெரியாது. இன்னும் தலை நிக்காத குழந்தை அவனோட சிசு. இருங்கோ. பின்னாலே நின்னு நான் பிடிச்சுக்கறேன்.
ஆறடியை நாலடியாக வாமனக் குறுக்கம் செய்து பின்னால் இருந்து குழந்தையை ஏந்தியபடி ஜெயம்மா நிற்க, சங்கரனுக்கு மனசு நிறைந்து போனது.
சிநேகிதம்னா இப்படி இருக்கணும் என்றாள் குஞ்ஞம்மிணியின் கண்ணீரைத் துடைத்தபடி பகவதி. இந்தக் காலத்திலும் இப்படி ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையாக இருக்கப்பட்ட சிநேகிதத்தை விசாலம் கை அசைத்து ஆசீர்வதித்தாள்.
அக்னியிலே யாரோ ஒரு மாமி ஆசிர்வாதம் பண்ற மாதிரி இருக்கு
வசந்தி சொல்ல, சாஸ்திரிகள் எல்லாம் புரிந்த திருப்திச் சிரிப்பு சிரித்தார்.
ரொம்ப நல்லது அண்டர் செக்ரட்டரி மாமி. இதை நான் நாலு ஆத்திலே சொன்னா, எனக்கும் வைதீகம் விருத்தியாகும்.
அந்தக் கதம்ப பாஷையையும் அதன் உள்ளுறை பொருளையும் ஜெயம்மா தவிர வேறு யாரும் புரிந்து கொண்டு சிலாகித்ததாகத் தெரியவில்லை. என்றாலும், ஜெயம்மாவின் அங்கீகாரத்தை ஏற்று வாங்கி, ஏமாற்றத்தை ஒதுக்கிவைத்தார் சீனியர் சாஸ்திரிகள்.
தொட்டில் போட்டு சீதா கல்யாண வைபோகமே பாடுவதையும் ஜெயம்மாவே எடுத்துக்கொண்டாள். வசந்தி வீட்டுக்காரர்களில் பாடத் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது. அவளுடைய அப்பா ஒரு வினாடி கூட யோசிக்கவில்லை.
கொழந்தே, நீ வசந்திக்கு உடன் பொறக்காத அக்கா. முகத்திலே ஜாடை கூட ஒரே மாதிரி இருக்கு, நீயே பாடு.
ரெண்டு குடும்பத்துக்கும் தீராத களங்கமாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக நல்வாக்கு சொன்னார் அவர். நற்சொல் என்பதால் அதற்குள் ரொம்ப ஆழமாக இறங்காமல் மேலோட்டமாகக் கால் நனைத்து அனுபவிக்க மட்டுமாக எல்லோரும் அதை எடுத்துக் கொண்டார்கள்.
தொட்டில் போட்டபோது பக்கத்தில், எதிரில் இருக்கும் சர்தார், வங்காளிக் குடும்பக் குழந்தைகள் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு குழந்தையை விட்ட தொட்டிலை மெல்ல ஆட்டி வசந்தி அம்மா சின்னச் சின்னதாக இந்துஸ்தான் டைம்ஸ் நியூஸ்பேப்பரில் கட்டி வைத்த காப்பரிசி வாங்கிக் கொண்டார்கள்.
காப்பரிசி. தொட்டில் போட்டா இதான் ஸ்வீட் என்றாள் வசந்தியின் அம்மா.
காப்பர் சி-யா? மேல் மாடிக் குடித்தன வங்காளிப் பெண் கேட்டாள்.
காப்பர்-டி வச்சுண்டா காப்பர்-சி வராது.
சங்கரன் மெதுவாக வசந்தியிடம் சொல்ல அவள் முறைத்தாள். வசந்தியின் தம்பி, ஜ்யோத்ஸ்னா நினைப்பில் இடுப்பு இடுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்ததை சங்கரன் தவிர வேறு யாரும் கவனிக்கவில்லை.
காப்பரிசியை அப்படியே சாப்பிட்டுட வேண்டியதுதான். அரிசி, வெல்லம், தேங்காய்க் கீத்து, வெள்ளை எள்ளு எல்லாம் போட்டது. நடுவிலேயே இருபது பைசாக் காசு வச்சிருக்கும். அதை முழுங்காம எடுத்துண்டு போய் அம்மா அப்பா கிட்டே கொடுங்கோ.