நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த பொங்கல் வாழ்த்துகள். பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.
******************************
மேற்கில் இருந்து இன்று நல்ல சேதி வருதாம்.. ’விஸ்வரூபம்’ பிரதிகள் வந்து சேர வாய்ப்பு உண்டு. புத்தகக் கண்காட்சி போகும் நண்பர்கள் கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லக் கோரிக்கை விடுக்கப் படுகிறது.
*******************
திருப்பாவை – 30
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். 30
திருப்பள்ளி எழுச்சி – 10
புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி,
சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு’ என்று நோக்கி, திருப்பெருந்துறை உறைவாய்! திருமால்ஆம்
அவன் விருப்பு எய்தவும், அலரவன் ஆசைப் படவும், நின் அலர்ந்த மெய்க்கருணையும், நீயும்,
அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!
//
திருப்பள்ளி எழுச்சி
பதப்பொருள் : திருப்பெருந்துறையுறைவாய் – திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே, திருமால் ஆம் அவன் – திருமாலாகிய அவன், புவனியில் – பூமியில், போய்ப் பிறவாமையின் – சென்று பிறவாமையினால், நாம் – யாம், அவமே – வீணாகவே, நாள் போக்குகின்றோம் – நாளைக் கழிக்கின்றோம், இந்தப் பூமி – இந்தப் பூமியானது, சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி – சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்ளகின்ற இடமென்று பார்த்து, விருப்பு எய்தவும் – விருப்பத்தை அடையவும், மலரவன் – பிரமன், ஆசைப்படவும் – இச்சிக்கவும், நின் – உனது, அலர்ந்த – பரந்த, மெய்க்கருணையும் – உண்மையான திருவருட்சத்தியும், நீயும் – நீயுமாக, அவனியில் புகுந்து – பூமியில் எழுந்தருளி வந்து, எமை ஆட்கொள்ள வல்லாய் – எங்களை ஆட்கொள்ள வல்லவனே, ஆர் அமுதே – அருமையான அமுதம் போன்றவனே, பள்ளி எழுந்தருள் – திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக// tamilvu.org
மணிவாசகர் போகிற போக்கில் திருமாலை ஒரு சின்ன இடி இடித்து விட்டுப் போகிறதை நமுட்டுச் சிரிப்போடு ரசிக்கலாம். இன்னிக்குப் பொங்கல். கோப தாபம் எல்லாம் கிடையவே கிடையாது.
திருப்பாவை
வஙக்க் கடல் என்பது வங்காள விரிகுடா இல்லை என்று முதலிலேயே சொல்லி விட வேண்டும். வங்கம் என்றால் கப்பல். கப்பல்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் கடல் இங்கே பாற்கடல் (பாற்கடல் மிசை கப்பல் ஓட்டி விளையாடியது யாரெல்லாம், பாற்கடலைக் கடையறபோது கப்பல் எல்லாம் ஆட்டம் கண்டு முழுகியிருக்குமேன்னு கிராஸ் கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது!).
நாலாயிரத்தில் ஆழ்வார்கள் அருளிச் செயலான பாசுரங்கள் நிறைவு பெறும்போது பாடிய ஆழ்வார் தன் பெயரைத் தவறாமல் குறிப்பார். இசைப் பாடலில், தியாகராஜ கீர்த்தனை, ‘தியாகராஜ’ என்றும் தீட்சிதர் கீர்த்தனை ‘குருகுஹ’ என்றும், சியாமா சாஸ்திரிகள் கீர்த்தனை, ‘சியாம கிருஷ்ண’ என்றும் இலச்சினை வைத்து (முத்திரை) வைத்து முடிக்கிற அந்தக்கால காப்பிரைட் ஸ்டேட்மெண்ட் இது.
இந்தப் பாடலில் ‘பட்டர்பிரான் கோதை’ முதல் முறையாகத் தன்னை இனம் காட்டிக் கொள்கிறாள். பெரியாழ்வார் எழுதிக் கொடுத்திருந்தால் இந்த முத்திரை படிந்திருக்காது. எனவே ஆண்டாளே திருப்பாவை என்ற ஒப்பற்ற இலக்கியப் படைப்பை அளித்தவர் என்று தெரிகிறது.
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய்.
மணிவாசகப் பெருமான், ஆண்டாள் திருவடிகளே காப்பு.
********************************
மேடை நாடகம் எழுதி முடித்தேன். இத்தனை காட்சி எழுதி முடித்த பிறகு Final Draft பயன்படுத்தி இருக்கலாமே என்று தோன்றுகிறது. Narration-ம் dialogue-ம் free-flowing ஆகத் தர MS Word போதாதுதான்..
*******************
ஆங்கில எழுத்தாளர்கள் எழுதுவதோடு ப்ரமோஷனையும் தங்களுடைய பணிகளில் ஒன்றாகச் செய்வதைப் பார்த்திருக்கலாம். பில் பிரைசன், பால் தோரோ, ஜெப்ரி ஆர்ச்சர், இங்கே சேதன் பகத், ஷோபா டே.. ஜெப்ரி ஆர்ச்சர் புதுப் புத்தகம் பிரசுரமாகும்போதெல்லாம் இந்தியா வரத் தவறுவதே இல்லை. அவருடைய வாசகர்கள் பலர் இங்கே தானாம். பில் பிரைசன் இணையத் தளத்தில் அவருடைய ப்ரமோ டூர் ஸ்கெட்யூலே கிடைக்கும்.. I am for publisher driven author promos.. commoditization கெட்ட வார்த்தை இல்லை என்று நினைக்கிறேன்.. சரிதானே?
*********************
யாருப்பா என்னை Facebook-ல் மத்திய சென்னை மாவட்டம் திமுகவில் சேர்த்தது? எதுக்கு?
குரூப்க்ளில் என்னைச் சேர்க்க முற்படும் உடன்பிறப்புகள் இன்று மாலை 4:30 முதல் 6:00 வரை அவ்வாறு செய்யும்படி கோரப்படுகிறார்கள்.
இரண்டு நிமிடம் முன்னால் நான் ‘நோ தேங்க்ஸ்’ சொல்லி, வெளியேறிய குழு -முரசொலி வாசகர் வட்டம்