அரசூர் வம்சம் தொடங்கி, விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் வழியே நான்காவது அரசூர் நாவல் வாழ்ந்து போதீரே. நாவலில் இருந்து – ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு
(பகவதியின் டயரியில் இருந்து)
1896 செப்டம்பர் 23 புதன்கிழமை
விடிகாலையில் குளிக்கறது நல்ல பழக்கம் தான். இங்கே அரசூர்லே, எல்லார் வீட்டுப் பெண்களும் அதேபடிக்குத் தான் செய்யற வழக்கம். முக்கியமா செவ்வாய், வெள்ளிக் கிழமை. அதோடு கூட, மாசாந்திரம் விலகி இருக்கறது கழிஞ்சு. அப்புறம் மார்கழி மாசம் முப்பது நாளும்.
மார்கழி கொண்டாடறது எனக்கு அரசூர் வந்த பிற்பாடு தான் சீலமாச்சு.
முதல்லே மார்கழின்னு பேரே புதுசா இருந்தது. மலையாளத்திலே தனு மாசம்னு கேட்டுத் தான் பழக்கம். அது இங்கே மார்கழி.
தனு மாசத்துக்கு முந்தி வரும் சிங்க மாசம் இங்கே ஆவணி. கன்னி மாசம் புரட்டாசி. துலாம் மாசம் ஐப்பசி. விருச்சிகமோ கார்த்திகை ஆயிடும். இப்படி மாசம் பந்த்ரெண்டும் இங்கே முழுக்க மாறி வரும்.
மார்கழி மாசம் இருக்கே. அது தனி அனுபவமாக்கும். வெறும் நாளிலே உதயத்துக்கு முந்தி ஒரு அஞ்சரை மணிக்கு எழுந்து வாசல் தெளிக்கக் கிளம்பறது வழக்கம் என்னாக்க, மார்கழி மாசத்திலே அலாரம் கடியாரத்தைத் தலைமாட்டுலே வச்சுண்டு நாலு மணிக்கு முழிப்புத் தட்டினதுக்கு அப்புறம் விடாம மணி அடிக்க எழுந்திருக்கறேன். அலாரம் நான் தான் வைக்கறது. லண்டன் கடிகாரம். ரொம்ப காசு அடச்சு பட்டணத்துலே இருந்து வாங்கிண்டு வந்தார். ஒரு தடவை எப்படின்னு செஞ்சு காட்டி விளக்கிச் சொன்னார். புரிஞ்சுண்டேன். நல்ல விஷயம் புதுசா தெரிஞ்சுக்கற சந்தோஷமாக்கும் அது.
ராத்திரி எடுத்து வச்ச பால் குளிர் காலங்கறதாலே திரியாம, கெட்டுப் போகாமல் அப்படியே திடமா இருக்கும். என்ன, எருமைப் பால் எடுத்து வச்சா அவ்வளவு நிச்சயமாச் சொல்ல முடியாது. ரொம்ப கொழுத்து நாள் முழுக்க நாக்கிலே சுத்திண்டே இருக்கும். வயத்துலேயும் சமயத்திலே குடுகுடுன்னு ஓடி ரகளைப் படுத்திடும் எருமைப் பால். பசும்பால் தான் சரியானது. பசு மாதிரியே ரொம்ப சாத்வீகம் அது.
பால் இந்தக் கதைன்னா, காப்பிப் பொடி இன்னொரு மாதிரி. அதை சித்த முன்னாடியே திரிச்சு வச்சுக்கணும். அப்போ அப்போ அரைக்க வீட்டுலே கையாலே சுத்தற மிஷின் இருக்கு தான். ஆனாலும் காலம்பற மூணு மணிக்கு கரகரன்னு அதுலே பிடிப்பிடியாப் போட்டு சுத்தி அந்த சத்தத்திலே ஊர் முழுக்க எழுந்து உட்கார வைக்க மனசு இல்லே எனக்கு. இவரானா ரெண்டு நாளைக்கு ஒரு தடவை பீப்ரியும் ரொபஸ்டாவும் ஒரு ரகசியமான விகிதத்துலே கலந்து ஐயங்கார் கடையிலே புதுசா அரைச்ச பொடி வாங்கிண்டு வந்து வச்சுடுவார். சளைக்காமல் காப்பிப் பொடி வாங்குவார் இப்படி சிராங்காய்க்கு ரெண்டு முட்டைக் கரண்டி அதிகமா. ரெண்டு நாளைக்கு மேலே அதோட வாசனை போயிடுமாம். சுல்தான் கெட்டார், புகையிலைக்கடை ஐயர்வாள் காப்பி ருசி அப்படி.
குமுட்டி அடுப்பு பத்த வச்சு வென்னீர் போட்டு, ரெண்டு கரண்டி வழிய வழிய காப்பிப் பொடியை பில்டர்லே போட வேண்டியது. வென்னீரைக் கொதிக்கக் கொதிக்க விட்டு, ராஜாவுக்கு மரியாதைக்குக் குடை பிடிக்கற மாதிரி சில்வர் குடையை மேலே வச்சு அடச்சுட்டு தந்தசுத்தி. நம்பூத்ரி சூரணத்தை தீத்தி பல் தேய்க்கப் போய்ட்டு வந்தா, கமகமன்னு காப்பி டீகாஷன் இறங்கி இருக்கும்.
எனக்குத் தானாக்கும் முதல் காப்பி. புகையிலைக் கடைக்காரர் எழுந்திருந்தா அவருக்குத் தான் முதல்லே. தூங்கற மனுஷனை என்னத்துக்கு எழுப்பி காப்பி கலந்து தர்றதாம்? அகத்துக்காரர்னானும் சரிதான். ஊர், உலக நடப்பு இது. காப்பி மரியாதை இது.
வாசல்லே போய் ஒரு மரக்கால் முழுக்க அரிசி மாவும் கோல மாவும் கலந்து எடுத்துப் போனதை வச்சு இருபது புள்ளி இருபது வரிசை கோலம் போட உக்கார்ந்தா, நேரம் போறதே தெரியாது. கோலம் சீரா வந்து எங்கேயும் சிக்காமல் அம்சமா முடிய அஞ்சரை மணி ஆகிடும். . அதுக்குள்ளே அண்டை அயல்லே இருக்கப்பட்ட பெண்டுகளும் அவரவரோட வாசல்லே கோலம் போட வந்து எல்லாருமா கை பேசப் பேச வாயும் கூடவே கலகலன்னு சேர்ந்து பேசறது நடக்கும்.
மார்கழி மாசம்னோ என்னமோ யாரும் வம்பு பேசறதில்லே. ஹரிகதையிலே கேட்டது, வீட்டிலே கர்ண பரம்பரையா வந்த தகவல் இப்படிச் சொல்லிக் கேட்டு கோலம் போடற சிரமமே தெரியாமப் போயிடும். நான் இவர் வாங்கி வந்து கொடுக்கற அறுபத்து மூவர் கதை, பக்த விஜயம் இப்படி புஸ்தகம் படிச்சு அதிலே வர்றதை எல்லாம் சொல்றதாலே என் பக்கம் எல்லோரோட காதும் திரும்பி இருக்கும். கதை சொல்லிண்டே கோலம் தப்பு இல்லாம போட பழக்கம் வேணும். எனக்கு ரெண்டு மார்கழி ஆச்சு அது மனசிலே படிய. இப்போ கண்ணை மூடிண்டு கூடக் கோலம் போடுவேனாக்கும்.