1896 மார்கழி அதிகாலையில் துரத்தி வந்த மயில்-பகவதியின் டயரியிலிருந்து

அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. இந்நாவல்கள் அனைத்தும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் நேர்த்தியான அச்சுப் பதிப்புகளாக வெளிவந்துள்ளன= வாழ்ந்து போதேரே நாவலில் வரிசைப்படியான அடுத்த பகுதி தொடர்ச்சி இது

செப்டம்பர் 1896 பகவதியின் டயரிக் குறிப்பு தொடர்ச்சி

இன்னிக்குக் காலம்பற இப்படித்தான் தெம்பா காப்பி உபசாரம் எனக்கு நானே நடத்திண்டு, கோலம் போட்டு முடிச்சுட்டு உடனே குளிச்சேன். சரி இவ்வளவு பண்ணியாச்சு, மார்கழி ஆச்சே, கோவிலுக்குப் போகலாம்னு கிளம்பிட்டேன். கோவில் பக்கத்திலே ஊருணியிலே ஜில்லுனு வெள்ளம் கோரியெடுத்து குடத்துலே நிறைச்சு வரலாம்னு கூட பரிபாடி. சட்டுனு வார்த்தை வர மாட்டேங்கறது. பரிபாடின்னா, திட்டம்னு சொல்றதா?

நிறைகுடத்தோட கோயிலுக்குள்ளே போகலாம் தான். ஆனா கொண்டு போனதை அபிஷேகத்துக்குத் தந்துடறது தான் மரியாதை. காலிக் கொடம்னா வாசல்லே வச்சுட்டு உள்ளே போகணும். சமயத்திலே காணாமப் போயிடும்.

பரவாயில்லேன்னு காலிக் கொடத்தை வெளியிலே சண்டிகேசுவரர் சந்நிதிக்குப் பின்னாடி வச்சுட்டு நிர்மால்ய தரிசனத்துக்காக உள்ளே போனேன். வக்கீல் குமஸ்தா பெயர் சொல்லாதவர் திருவெம்பாவைன்னு ராகத்தோடு படிச்சுண்டிருந்தது கண்ணுலே பட்டது. பெயர் சொல்லாதவர் ஏன்னு கேட்டா, எங்க அவர், அதான் புகையிலைக் கடைக்காரர் பெயர் தான் குமஸ்தருக்கும்.

அவருக்கு பரிவட்டம் கட்டி ஒவ்வொரு பாட்டாகப் பாடி எம்பாவே எம்பாவேன்னு முடிக்க முடிக்க அடுக்கு தீபாராதனை காட்டினதைக் கொஞ்ச நேரம் கண் குளிரப் பார்த்துட்டு வெளியிலே வந்தேன்.

சின்னக் குருக்கள், புகையிலைக் கடை மாமி, பொங்கல் பிரசாதம் இந்தாங்கோன்னு நீட்டினார். கண்ணிலே ஒத்திண்டு வாங்கிண்டேன்.

நம்ம வகை சேவை என்னிக்குன்னு கேட்டேன். புகையிலைக் கடைக்காரர் மார்கழி பத்துலே இருந்து இருபது வரை சேவை நடத்தறதாச் சொல்ல ஒரே சந்தோஷம். இன்னிக்கானா வக்கீல் ராவ்ஜி திருப்புழிச்சை உபயதாரராம். யார் கொடுத்தா என்ன, கோவில் பொங்கல் ருஜியே தனிதான்.

ஒரு ஆறு மணி இருக்கறச்சே ஊருணியிலே தண்ணி எடுத்துண்டு ஜாக்கிரதையாப் படி ஏறிண்டு இருந்தேனா. இருட்டு இன்னும் விலகலே. படியிலே மசமசன்னு எதுவோ இருக்கற மாதிரி தட்டுப்பட்டது. ஊருணிக்குள்ளே போகற போதும் இருந்ததான்னு கேட்டா எனக்குச் சரியாத் தெரியலே. இருந்திருக்கலாம். நான் பார்த்திருக்க மாட்டேனா இருக்கும். அது ஒரு மிருகமோ பட்சியோ தான். மனுஷர் இல்லே.

ஜிவ்வுனு றெக்கையை விரிச்சு அந்தப் பட்சி தத்தித் தத்தி என் முன்னாலே ஓடினது. நான் அப்படியே நின்னேன். இவ்வளவு பிரம்மாண்டமா றெக்கை வச்சுண்டு என்னவாக்கும் இது. மயில் தானே? அது ஏன் விடிகாலை இருட்டுலே வந்தது? எங்கே இருந்து வந்தது?

சரி அதுக்கும் மார்கழிக் குளிர் வேணும் போல இருக்கு. யாருக்கும் உபத்ரவம் பண்ணாம ஊருணிக் கரையிலே ஆடிட்டு சுப்ரமணிய சுவாமியைத் தொழுதுட்டு பறந்து போகட்டும்னு நான் ஒரு ஓரமாப் படி ஏறினேன்.

ஊருணிக் கரையிலே நடந்துண்டு இருக்கற போது தான் பின்னால் ஏதோ சலசலன்னு சத்தம். என்னவா இருக்கும்னு பார்த்தா, என்னத்தைச் சொல்ல? அந்த மயில் என் பின்னாலேயே தொரத்திண்டு வந்துண்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன