அரசூர் வம்சம் 4 நாவல் வரிசை நான்காம் நாவல் வாழ்ந்து போதீரே -பகவதியின் டயரி தொடர்ச்சி செப்டம்பர் 1896
நான் ஓட ஆரம்பிச்சேன். அதுவும் என் பின்னாலே ஓடி வந்துண்டு இருக்கு. மயில் ஆடினா கண்ணுக்கு நிறைவா இருக்கும். ஓடினா என்னமோ தத்தக்கா புத்தக்கான்னு கோணலா இருக்கு. தோகை பாரம் இல்லாட்ட இன்னும் வேகமா ஓடுமோ என்னமோ. அதுவும் நல்லதுக்குத் தான். என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாம அது தெருக் கோடியில் நிக்க்றது. சரி அப்படியே போயிடும்னு ஆசுவாசம்.
இது என்ன தெரு? அரசூர் மாதிரி தெரியலியேன்னு கவனிச்சுப் பார்க்கறேன். அட, இதெல்லாம் நம்ம அம்பலப்புழை ஆச்சே. இங்கே எப்படி வந்தது? கனவு ஏதாவது காணறேனா?
நின்னு யோசிக்கற போது ஜிவ்வுனு அந்த மயில் பறந்து வர்றது தெரிஞ்சது. வெலவெலத்துப் போய் எதிர் வசத்திலெ தெரிஞ்ச பாதையிலே ஓடறேன். அது அம்பலக் குளக்கரை. செண்டை மேளம் சத்தம் கேக்கறது. எங்க அம்பலப்புழ கிருஷ்ணன் அம்பலம் தான். இந்த மாரார் குரல் எத்தனையோ காலம் கேட்டுப் பழக்கமானது ஆச்சே.
வந்தே முகுந்த ஹரே ஜெய ஷவ்ரே
அம்பலப்புழை கிருஷ்ணன் அம்பலம் ஆச்சே இது. மனசுக்கு ஆசுவாசமா இருக்கு. குளக்கரையிலே யாரோ உக்கார்ந்திருக்கார்.
அம்மா பசி உசுரு போறது. புண்ணியமாப் போறது. அன்னபூரணி. சாப்பிட ஏதாவது கொடு.
பைராகின்னா அது. நட்ட நடுத் தலையிலே திரிசூலம் மாதிரி சூடு போட்டுண்ட சித்தன். அன்னிக்கு என்னோட பேசி நல்ல வார்த்தை சொன்னவன் ஆச்சே. அவனா பசின்னு ஆகாரம் யாசிக்கறது?
பைராகிகள் பசிச்சாலும் அல்பமான சம்சாரிகள் சமைச்சதைச் சாப்பிடுவாங்களோ? நான் புரியாமல் அவனைப் பார்த்தேன்.
காலம் மாறிவரும் போது நாங்களும் மாறித்தான் போகணும் குஞ்ஞே. வீட்டுக்குப் போய் பழைய சாதம் இருந்தாலும் சரி, ஒரு குத்து தயிர் விட்டு ஒரு விழுது மாங்காய் உப்பிட்டது சேர்த்து எடுத்து வா.
பைராகி பெத்தவா மாதிரி பிரியமான குரல்லே சொல்ல மனசு கரைஞ்சு போனது எனக்கு.
இதோ வந்தாச்சுன்னு சொல்லி, இடுப்பிலே வச்ச குடத்தோடு விரசா நடக்கிறேன். குப்புசாமி அண்ணா, விசாலம் மன்னி. வந்துட்டேன். பழைய சாதத்தை களைய வேண்டாம். கேட்டேளா. பைராகி கேட்கறார்.
வீடு எங்கே? எந்தத் தெருவிலே இருக்கு? இருட்டு இன்னும் ஏன் விலகலே?
நான் பதைபதைச்சு நடக்கறேன்.
ஏய் பகவதி, எங்கே நீ பாட்டுக்கு போறே?
எங்க அவர், புகையிலைக் கடைக்காரர் குரல். அரசூர் வீட்டு வாசல் இது. நான் போட்டுட்டுப் போன கோலத்தை ரசிச்சபடி நின்னுண்டு கூப்பிடறார். ஒண்ணும் புரியாம திரும்பறேன்.