வாழ்ந்து போதீரே (அரசூர் நாவல் வரிசை -4ம் புதினம்)
பகவதியின் டயரி செப்டம்பர் 1859 தொடர்ச்சி
ஏன் இந்த வீட்டை, இவரை மறந்து போனேன்? எங்கே போயிட்டிருக்கேன்? அம்பலப்புழை வீட்டு இங்கே எப்படி வந்தது? அம்பலம் எங்கேயிருந்து இடம் பெயர்ந்து வந்தது?
வீட்டுக்குள்ளே வேகமாப் போனேன். அவரும் கதவை அடச்சு உள்ளே வந்தார். கட்டிப் பிடிச்சுண்டேன் ஆமா. கட்டிண்டு கரைஞ்சேன் ஒரு பாட்டம் அழுகை. வேண்டி இருந்தது எல்லாம்.
அவர் காப்பி டம்ப்ளர்லே இக்கிணி இக்கிணியா சீப்பிக் குடிச்சுண்டே சொல்றார் – சமயத்துலே போதம் கெட்டுப் போயிடும் தான். எல்லோருக்குமே அது நடக்கலாம். சரீரத்துலே பித்தம் அதிகமானா இப்படி நேரும்னு வைத்தியன்மார் சொல்றா. அது இருக்கவே இருக்கு. இனிமே நீ இருட்டு விலக முந்தி எங்கேயும் போக வேண்டாம்.
இல்லேன்னா. எங்கேயும் போகலே. அம்பலப்புழை அம்பலம். வீடு.
நான் சொல்லத் தெரியாத சொப்பனம் கண்ட சிசு மாதிரி புலம்பறேன்.
உனக்கு அதெல்லாம் ஆத்மாவிலே ஒட்டின விஷயம்கறாரு இவரானா. ராத்திரி சொப்பனத்துலே பைராகி வந்தான். சொல்றான் –
குழந்தே. பத்திரமா வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தியே அதுவே போதும்கறான்.
அடடா, உனக்கு சாதம் போடறேன்னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு வந்துட்டேனேன்னு வரு்த்தத்தோட சொல்றேன்.
சாரமில்லே குஞ்ஞே. நான் திரும்பி வருவேன். உன் வீட்டுலே தான் சாப்பிடுவேன். அப்போ மயில் ஆடும். எல்லாரும் செழிப்பா இருக்கட்டும்.
அவன் ஜல்ஜல்னு சதங்கையைக் கையிலே வச்சு சத்தப்படுத்திண்டே போகறான். இது சொப்பனம்னா, பைராகி பசின்னு அன்னம் யாசிச்சது? ஊருணிக் கரையிலே மயில் தொறத்தினது? நான் ஓடினது? பிரமையா?
அதுலே எல்லாம் மனசை ரொம்ப அலைபாய விடக்கூடாதுன்னுட்டார் இவர். பைராகி ஆசிர்வாதம் பண்ணினது தான் இதிலே எடுத்துக்க வேண்டியதுன்னுட்டார்.
திரும்பி வருவானாமே? வரட்டுமே. வந்தா உக்கார வைச்சு பத்து காய்கறி தித்திப்பு, காரம், புளி சேர்த்து அமர்க்களமா ஆக்கிப் போட்டுடுன்னார். நான் இருக்கறதுக்குள்ளே வருவானா?.தெரியலியே.
அது எப்படியோ போகட்டும். அம்பலப்புழையிலே ஒரு வீடு வாங்கச் சொல்லணும் இவரை. சின்னதா ஒரு குச்சுவீடா இருந்தாலும் சரிதான். அங்கே ஒரு வீடு வைக்கணும். மயில் அதைச் சொல்லத் தான் பின்னாலேயே வந்திருக்கும். அதைப் பார்த்து ஏன் பயப்பட்டேன்? சிங்கமா புலியா அது?
அப்புறம் வந்து, அது எம்பாவே இல்லையாம். எம்பாவாய்-னு சொல்லணுமாம். திருப்புழிச்சை இல்லையாம். திருப்பள்ளி எழுச்சியாம். இவர் இதைப் படிச்சுட்டுச் சொன்னார். நான் என்னத்தைக் கண்டேன்.