இருமுடி கட்டி விட செண்டை மேளத்தோடு வந்த மாரார்களுமாக மாடுங்கா

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து

கேரளம் திலீப் நினைத்தது போல் இல்லை.

பம்பாய் மாடுங்கா சங்கர மட வைதீகர்களும், ஓணத்துக்கு வாழைக் குலை வாங்கக் குடும்பத்தோடு கும்பலில் புகுந்து புறப்படும் செண்ட்ரல் ரயில்வே டிவிஷனல் கிளார்க் நாயர்களும், ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதம் இருமுடி கட்டி விட செண்டை மேளத்தோடு வந்து சேரும் மாரார்களுமாக அவன் மனதில் எழுப்பியிருந்த உலகம் வேறு விதமாக இருந்தது.

அந்த நிலப் பிரதேசத்தில் விடிய ரெண்டு மணி நேரம் முன்னால் நம்பூதிரிகள் ஆறு, குளம் என்று பார்த்து முழுக்குப் போட்டு விட்டு முன்குடுமி முடிவார்கள். வாசல் திண்ணைகளிலும் கோயில் பிரகாரங்களிலும் உட்கார்ந்து இடைவிடாமல் மயேமயே என்று எல்லா வேதமும் நீட்டி முழக்கி ஓதுவார்கள். அகண்ட ஜபமாகக் கூடி உட்காந்து நாசியில் கை வைத்து ஜபித்துக் கொண்டிருப்பார்கள்.

வெள்ளைப் புடவையும் சந்தனப் பொட்டுமாக, லட்சணமான ஸ்தூல சரீர சுந்தரிகள் கால்களை அகட்டி வைத்து ஆடுவார்கள். கை கோர்த்து வட்ட வட்டமாக சுற்றி வந்து பாடுவார்கள். சதா கும்மியடித்துக் கொண்டிருப்பார்கள்.

உச்ச ஸ்தாயியில் செண்டையும் பெரிய சைஸ் தாளங்களுமாக பெருஞ் சத்தமாக வாசித்துக் கொண்டு மாரார் வகை ஆசாமிகள் சுற்றிச் சுற்றி வருவார்கள. அவர்களோடு, பட்டப்பகல் என்றாலும் கோல் விளக்கு ஏற்றிப் பிடித்துக் கொண்டு கோவில் ஊழியர்கள் அவசரமாக நடந்து போவார்கள்.

இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் எல்லாரும் சட்டம் போட்டுக் கட்டாயமாக்கியது போல் தாடி வளர்த்து, சதா கண்ணில் அப்பிய சோகத்தோடு அலைவார்கள். மேலே லேசாகத் தொட்டால் ராக்கிளிகளும், படகுத் துறையில் தனித்து நிற்கும் பெண்களும், யாத்ரிகர்களும், பெருவழி அம்பலங்களும், கடந்து வரும் கீதங்களை ஊர் முழுக்க ஒலிக்கும் ஒரே ஆண் குரலில் துயரம் இழையோடப் பாடத் தொடங்குவார்கள்.

பலாப்பழமும், நேந்திரம்பழ வறுவலும், தேங்காய் துருவியதுமாக எல்லாப் பொழுதும் சாப்பிடக் கிடைக்கிற நிலம் அது. பிரகாரத்தில் வரிசையாக இலை போட்டு கோயில்களுக்கு வருகிறவர்களைக் கட்டாயப்படுத்தி சாப்பிடச் சொல்வார்கள். சோற்றை அள்ளி வீசி, மடி ஆசாரத்தோடு பரிமாறுவார்கள்

நடந்தது என்னமோ இதுதான்.

திலீப் உட்கார்ந்திருக்கும் பழைய கட்டடத்தின் முன்னறையில் குடிக்கத் தண்ணீர் பிடித்து வைத்த வயசன் திலீபைப் பார்த்துச் சொல்லிச் சிரிக்கிறான்.

சுவரில் சாய்ந்து நிற்கிற வயசன் அவன். ஆப்பீசு திறக்கறீங்க எடுபிடி காரியம் செய்ய ஆள்கார் வேணாமா என்று கேட்டு முதலில் படி ஏறி வந்தவன் அவன்.

இருந்துட்டுப் போகட்டும்., காப்பி வாங்கிண்டு வரவும் தண்ணி பிடிச்சு வைக்கவும் வேண்டி இருக்கு.

பிஸ்கட் சாஸ்திரி நியமித்த முதல் ஊழியன் அவன். வயசு எழுபதுக்கு மேல் என்றாலும் அறுபது ரூபாய் மாத சம்பளத்துக்கு மலிவாகக் கிட்டிய ஊழியம் இது என்பதை இங்கிலீஷில் குழுக்குறியாக எடுத்துச் சொல்லி திலீபின் சிரிப்பை யாசித்தார் சாஸ்திரி.

நீங்க சொன்னா அதுதான் சட்டம் என்று மினிஸ்டர் பெண்டாட்டி சியாமளா பெரியம்மா சாஸ்திரியை சிம்மாசனத்தில் வைத்தாள் அப்போது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன