எல்லா அடவுகளும் முத்திரைகளும் எதிரியை பயப்படுத்தி அகற்றி நிறுத்தவே ஏற்பட்டவை

அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரேயிலிருந்து= தொடர்ச்சியாக இங்கே

வந்தது முதற்கொண்டு சதா பேசியபடி இருக்கிறான் வயசன். இந்த வயசில் அவனுக்கு ஒருத்தர் வேலை போட்டுக் கொடுத்த பூரிப்போ சந்தோஷமோ வார்த்தையாய் வந்து விழுந்த மணியமாக இருக்கிறது.

எப்போதோ கண்ணூர் போன கதையை வயசன் திலீபுக்கு இது வரை ரெண்டு முறை சொல்லி விட்டான். அவன் சின்ன வயதில் பொண்ணு தோற்றுப் போகிற வனப்பில் இருப்பானாம். கையும் காலும் முகமும் தொடையும் வழுவழுவென்று மினுங்கிய பையன். கண்ணூர் ஓட்டலில் ராத்தங்கிய போது பரிசாரகன் கடித்து விட்டானாம். அது எங்கே என்று அவன் விஸ்தாரமாகச் சொல்ல, திலீபுக்கு அன்னத் திரேஷமாக இருந்தது. வடுப்பட்டு விட்டதாம், அவன் உடம்பே அவனுக்கு வித்தியாசமாகிப் போனதாம். திலீப் நம்பவில்லை என்றால், அதுக்கென்ன, அவிழ்த்துக் காட்டவும் தயாராக இருந்தான் வயசன்..

அகல்யா, வயசன்மாரோட நாறிப் பிடுங்கும் ப்ரத்யேக சமாசாரங்களைப் பார்வையிடவா நான் நாலு நாள் அரசாங்க விஜயமாக கேரளத்துக்கு வந்தேன்?

இங்கே இல்லாத அகல்யாவிடம் புலம்ப, திலீபுக்கு பசி மூண்டெழுந்து வ்ந்தது.

முந்தாநாள் ஆலப்புழையில் பஸ் ஏறுகிற வரை திலீபுக்கும் மற்றவர்களுக்கும் கேரளம் தெய்வங்களின் சொந்த நாடாகவே இருந்தது. மலையாளக் கரை பற்றிய மாதுங்கா மதிப்பீடுகளை அவற்றின் உச்சபட்ச மேன்மையான கற்பிதங்களோடு நம்பத் தயாராக வந்திருந்தார்கள் சியாமளா பெரியம்மாவும் சாஸ்திரி தம்பதிகளும்.

அவர்களுக்கு ஆசுவாசம் அளிக்கும் பூமி கதகளியும், சோபான சங்கீதமும், மயில் தோகையை இடுப்பில் செருகிக் கொண்டு ஆண்பிள்ளைகள் ராத்திரி முழுக்க ஆடும் அர்ஜுன நிருத்தமுமாக இருந்தது.

முக்கியமாக அர்ஜுன நிருத்தம். அதைத் தேடித்தான் மினிஸ்டர் மனைவியான சியாமளா பெரியம்மா இங்கே வந்தது.

பரத நாட்டியமும் கூடியாட்டமும் ஒடிசியும் கதக்கும் அர்ஜுன நிருத்ததில் இருந்து அபிநயங்களைக் கடன் வாங்கியவை என்று பெரியம்மாவின் ஆய்வுக் கட்டுரை சொல்லப் போகிறது. எல்லா நடனமும் யுத்தத்தோடு தொடர்புடையவை என்றும் அது பேசும். எல்லா அடவுகளும் முத்திரைகளும் எதிரியைப் பயப்படுத்தி அகற்றி நிறுத்தவே உண்டானவை எனவும் கூறும்.

களரியில் இருந்து அர்ஜுன நிருத்தம், அங்கே இருந்து பரதம் என்று போர் எல்லோரையும் எல்லாவற்றையும் எல்லாக் காலங்களிலும் கவ்விச் சூழ்கிறது என்று பிஸ்கட் சாஸ்திரி வழிகாட்டலில் பெரியம்மா செய்கிற ஆராய்ச்சியால் அர்ஜுன நிருத்தம் மேம்படுமோ என்னமோ அவளுக்கு டாக்டரேட் கட்டாயம் அடுத்த வருஷம் இந்த நாளில் கிட்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன