ஒரு மாதமாகக் காலை ஒரு மணி நேர நடைப் பயிற்சியொடு மாலையில் இன்னொரு 45 நிமிடம் கூடுதல் நடையும் சேர்ந்ததால் ராத்திரி சீராக உறக்கம் வருகிறது.நோய்க்கூறு கண்டது தேய்ந்து மனதின் ஒரு மூலையில் பதுங்கிவிட்டது,
சாயந்திரம் நடையில் ஒரு கூடுதல் சுவாரசியம் உண்டு.வட்டம் கிறங்கிச் சுற்றிவரும் நடைப் பாதையில் நண்பர் சந்தியா பதிப்பக உரிமையாளர் நடராஜனை சந்திப்பது அவ்வப்போது நடக்கும். எப்போதும் உற்சாகமாக வரவேற்கும் நடராஜன் குறுந்தொகையிலிருந்து, சுந்தரர் தேவாரம், வள்ளலார் திருவருட்பா, பாரதி,கல்யாண்ஜி கவிதை வரை பேசியபடி இருப்பார். மாயவரம் என்ற மயிலாடுதுறைக்காரர் என்பதால் மாயூர மனுஷர்கள் ஒரு ஐநூறு சுவாரசியமானவர்கள் பற்றி அவர் நாவல் எழுதத் தொடங்கினாலே பத்து நூல்கள் வரும். அல்புனைவாக எழுதினால் அவ்வளவாக வேண்டி இருக்காது. மாயவரம் அவருடைய முதல் ’எங்கள் ஊர்’ ஷானர் அல்புனைவு, எத்தனை சுவாரசியமான மனிதர்கள் என்பதற்கு ஒரு உதாரணம்- அந்த காலத்தில் காலையில் கட்டைப் பஞ்சாயத்து செய்துவிட்டு சாயந்திரம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றி கல்லூரி பேராசிரியர்களோடு விவாதித்த அந்தக்காலப் பெரியவர்.
உங்க ஊர் பற்றிய அல்புனைவு எல்லாவற்றையும் சேர்த்து ஒரு புத்தகம் எழுதுங்களேன் என்றார் நண்பர் நடராஜன். நல்ல யோசனை எந்த வரிசைப் படுத்தலும் இல்லாத கலைடாஸ்கோப் நூலாக சுவையான ஆவணமாக இருக்கும்.
எழுத ஆரம்பித்து விலக்கிய நான்கு நாவல்களுக்கு அப்புறம் எழுதி முடித்தே தீர்வது என்று எழுத ஆரம்பித்த வாத்திமர் நாவலோடு என் ஊர் நூலும் எழுத வேண்டும்
=