ஆராய்ச்சிக் கட்டுரையைப் பெரியம்மா நின்றும் இருந்தும் நகர்ந்தும் வாய்விட்டும், முணுமுணுத்தும், அரை வார்த்தை சொல்லி மற்றது முழுங்கியும் டிக்டேட் செய்யச் செய்ய அதைக் கவனித்து சரியாக டைப் அடித்துத் திருத்தித் திருத்தி, திலீபுக்கும் அர்ஜுன நிருத்தம் பற்றித் தெளிவாகவே தெரிந்திருக்கிறது. சாஸ்திரி தம்பதிகளில் அம்மையாருக்குத் தெரிந்ததை விட அது பத்து மடங்கு அதிகம்; சாஸ்திரியை விடவும் தான் என்று அவன் நினைக்கிறான்.
இன்னும் சிரத்தையாக இதுவே வாழ்க்கை என்று திலீப் உட்கார்ந்தால், சியாமளா பெரியம்மாவுக்கும் சாஸ்திரிக்கும் அவன் அர்ஜுன் நிருத்தமும், களரியின் போர்க் கலாசார அடவுகளும் பற்றிப் பாடம் எடுப்பான்.
இந்த பிஸ்கட் கோஷ்டிக்கு எதற்காக செய்யணும்? வவுச்சரில் ரெவின்யூ ஸ்டம்ப் ஒட்டி கையெழுத்துப் போடச் சொல்லி நூற்று முப்பது ரூபாய் மூக்கால் அழும் கும்பல் இது. அவர்களின் ரெவின்யூ ஸ்டாம்ப்களை அவர்களே அவர்களின் பின்னஞ் சந்தில் இறுக்க ஒட்டிக் கொள்ளட்டும். திலீப் வெள்ளைக்காரனுக்கு லண்டனில் பாடம் எடுப்பான். அகல்யாவைக் கல்யாணம் செய்து கொண்டு அந்த வெள்ளைக்காரப் பட்டணத்திலோ வேறே எங்கேயோ குடிபெயர்ந்து விடுவான்.
பெரியம்மாவும் பிஸ்கட்களும் இன்றி இப்படி ஒரு குமாஸ்தா உத்தியோகமும் இதுவரை பார்த்தே இருக்காத ஆலப்புழை, அம்பலப்புழைக்குப் பயணமும் கிடைத்திருக்குமா? அகல்யா மனசில் விசாரிக்க, அதானே என்றான் திலீப்.
ஃபீல்ட் ஸ்டடி, சந்திப்பு, பாட்டு ஒலிப்பதிவு, கோவில் கோவிலாகப் போவது, அசாதரணமாக மயில் இறகிலிருந்து உடுப்பு சேர்த்துத் தருகிற தையல்காரர்களின் தொழில் ரகசியம் அறிவது என்று வேலை எல்லாம் ஒரு இடத்தில் இருந்து பார்க்க இடம் தேவைப்பட்டது. பெரியப்பா தில்லியில் இருந்து டெலிபோன் செய்து இங்கே யாரோ மந்திரி உதவி செய்ய இந்தப் பழைய கட்டிடம் கிடைத்தது. கல்யாண சமையல்காரர்களின் வீடாக இருந்து கிறிஸ்துவ இல்லமாகி அதுவும் கழிந்து சர்க்கார் ஆபீசாக இருபது வருஷம் இருந்து பூட்டி வைத்திருந்த ஒண்ணாம் தரம் கல்லுக் கட்டிடம்.
பெரியம்மாவோ சாஸ்திரி தமபதிகளில் ஒருத்தரோ வந்தாலே ஒழிய இந்த இடத்தை விட்டு இப்போது வெளியே போக முடியாது. ஏகப்பட்ட வேலை ஒரே நேரத்தில் ஆரம்பித்திருக்கிறது இங்கே. டைப்ரைட்டர், வெள்ளைக் காகிதம், டேப் ரிக்கார்டர், ஒலிப்பதிவு நாடா என்று எங்கும் நிரம்பி வழிகிறது.