வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நாவல் வரிசையில் நான்காம் நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி
பிரியத்துக்கு பாத்தியதை உள்ளவர்களே, உங்களுடைய ஆத்மா ஜீவித்திருப்பது போல நீங்கள் அனைத்திலும் சுகமாக ஜீவித்திருக்க கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் திருநாமத்தால் வாழ்த்துகிறேன் (யோவான்).
நேசமான புத்ரி கொச்சு தெரிசா, கொச்சு தெரிசாளின் அன்பான கணவன் ஜனாப் முசாஃபர் அலி சாஹேப், நலம் தானே நீங்கள்? நான் இங்கே கால்டர்டேலுக்கு ஐந்து நாள் முன்பாக அதாவது கடந்த மாசம் இருபத்தெட்டாம் தேதி திங்கள்கிழமை காலையில் நலமாக வந்து சேர்ந்தேன்.
அமேயர் பாதிரியார் இங்கிலாந்து போய்ச் சேர்ந்த கையோடு கொச்சு தெரிசாவுக்கு எழுதிய கடிதம் இப்படி ஆரம்பித்தது. இந்த நாலைந்து வரியை எழுதவே அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது.
வயோதிகம் தான் காரணம். அமேயர் பாதிரியாருடைய அறிவின் ஒரு கோடியில், இப்படிச் சுணங்கியதற்குக் காரணமாக வயது சொல்லப்பட்டது.
எனில், பசிக்கும் போது ஆகாரம் இவ்வளவு போதும் என்று தோன்றும் வரை சாப்பிடவோ, தேத்தண்ணீர் பெரிய குவளையில் அளவாகச் சர்க்கரை சேர்த்து நல்ல சூடாக வழங்கச் சொல்லிக் கோரிக்கை விடுத்துக் காத்திருக்கவோ எந்த விதமான தாமதமும் குறுக்கே வருவதில்லை என்பதையும் பாதிரியார் நினைத்துப் பார்த்தார்.
அதை எல்லாம் இயக்கும் இன்னொரு பகுதி மூளையில் இருந்தால் அதுவும் வயோதிகத்தால் தளர்ந்திருக்கும் இல்லையா? இல்லையே. பசியும் தாகமும் தீர்க்கத் தீர்க்க அதிகமாகிறதே தவிர, கொஞ்சமாவது குறைந்திருக்கிறதா?
பாதிரியாருக்குத் தெரியவில்லை. இதை எல்லாம் இன்னும் அதிகமாக ஆராய்ந்து புத்தகம் போட்டால், வாடிகனில் இருந்து சீரிய சிந்தனையாளர் என்று எழுதிய காகிதக் கிரீடத்தோடு வந்து யாரும் அவருக்கு அணிவித்து வாழ்த்திப் போகப் போவதில்லை.
அப்பன், சாயா எடுத்துக் கொள்ளணும். உங்களுக்காக இந்திய மோஸ்தரில் பாலையும் டீத் தூளையும் தனித் தனியாகச் சுட வைத்துக் கலந்தது.
கால்டெர்டெல் மார்க்கெட்டில் கசாப்புக்கடை வைத்திருக்கும் பெர்ணாந்தஸ். அமேயர் பாதிரியாருக்கு அன்போடு ஒரு குவளை தேநீர் தர முன் வந்தான்.