பிரார்த்தனை நேரத்தில் பியானோ வாசித்தவர்களும் ப்லூட்டோ கிரகத்தை கண்டுபிடித்தவர்களும்

வாழ்ந்து போதீரே பதிவுத் தொடர் தொடர்கிறது

கால்டர்டேல் குரிசுப் பள்ளியில் ஒரு நூற்றாண்டு முன்னர் பியானோ வாசித்து வந்த ஒரு ஊழியக்காரன் சின்னஞ்சிறு கிரகமான யுரேனஸைக் கண்டுபிடித்தது உண்மையன்றோ. அதற்காக போப்பாண்டவரின் பாராட்டு பத்து வருஷம் கழித்து வந்து சேர்ந்தபோது அந்த ஊழியன் சர்ச் வளாகத்தில் அந்திம உறக்கத்தில் இருந்தான். இங்கிலீஷிலும் லத்தீனிலும் கடிதம் எழுத ஆள் தேடுவதில் தாமதமானதாக அப்போது அறிவிக்கப் பட்டது. அமேயர் பாதிரியாருக்கான திருச்சபை கடிதம் எழுத தெக்கே பரம்பில் போல் அங்கே எல்லா மொழியும் தெரிந்த பாதிரியார்கள் அருகே இருக்க வேண்டும்.

 

இந்த அக்கப்போர்கள் அல்லாமல் ரெண்டு மாசத்தில் கால்டர்டேலில் வேறு எந்த மாற்றங்கள் உண்டு என்பதை முதலில் அவதானிக்க வேணும். அதெல்லாம் இனி அவர் ஊழியம் செய்ய இருக்கும் முறையை மாற்றி வைக்க வழி செய்யக் கூடும். இல்லாவிட்டாலும் வம்புக்கு படி ஏறும் மந்தையின் மூத்த ஆடுகளோடு பேச விஷயத் தீவனம் தரும் அதெல்லாம்.

 

கசாப்புக் காரன் பெர்னாந்தஸ் சொன்னபடிக்கு, யார்க்‌ஷயர் நெடுக இந்த ரெண்டு மாசத்தில் ஒரு கொடூரன் உலாவி வந்தானாம். ராத்திரி வீடு புகுந்து கழுத்தில் ரேசர் பிளேடால் கீறி ரத்தம் வர வைத்துப் போவதே அவன் செய்ததாம். யாரும் ரத்தப் போக்கால் மரிக்கா விட்டாலும், சன்னமாகக் கழுத்தில் கீறி வந்த நாலைந்து துளி ரத்தத்தை அவன் தன்னுடைய ஆள்காட்டி விரலில் பூசிப் போனதாகக் கதை பரவியதாம். அப்புறம் கால்டர்டேல் நகர மன்றம் கூட்டம் கூடி, பாதிக்கப் பட்ட நூறு பேரை அழைத்து நாலு கதவையும் சார்த்தி வைத்து நல்வழி காட்ட வகுப்பு எடுக்கப் பட்டதாம். அது முடிந்து ஆளுக்கு பத்து பவுண்ட் காசும், நாலு மரக்கால் கோதுமையும், ரெண்டு ராத்தல் ஆட்டு இறைச்சியும் அளிக்கப்பட்டதாம்.

 

இப்படி வெகுமதி வாங்கிய அவர்கள் எல்லோரும் ஒருத்தர் போல் மற்றவர் கீசுக் கீசென்று கழுத்தில் யாரும் அவர்களைக் கிழிக்கவில்லை என்றும் ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் அவர்களே வீட்டில் இருந்த பழைய பிளேடு, பியர் பாட்டில் திறக்கும் சின்ன அறம் இவற்றால் தம்தம் கழுத்திலும் கையிலும் முதுகிலும் கீறிக் கொண்டதாகவும் அறிவித்தனர்.  இறந்து போன இரண்டு பேர் விஷயம் இன்னும் வினோதமானது. கழுத்தில் பிளேடோடு மாடத்தில் இருந்து குதித்துச் சவப்பெட்டியில் நேரே விழுந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காகத் அவர்கள் தாங்களே பெட்டிக்குள் விழுந்து மூடிக் கொண்டதாகச் சிலர் சொன்னார்கள். அவர்கள் சவப்பெட்டியின் சவுகரியத்தை விட்டுத் திரும்ப வெளியே வர முடியாது என்று சொல்லி விட்டார்களாம். எது எப்படியோ ரேசர் பிளேட் ராட்சசர்கள் இல்லாமல் போனதில் அமேயருக்கு ஆசுவாசம் கொஞ்ச நஞ்சமில்லை. அவர்களோடு சாத்தானும் ஒழிந்து போனான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன