வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது- நூலில் இருந்து
எதிரே மோத வந்த மோட்டார் சைக்கிளைத் தவிர்த்து பிளாட்பாரத்தில் ஏறி நடந்தான் திலீப். வீட்டுக் கதவு திறந்து தலையில் சீப்போடு வந்த பெண் தெருவில் எறிந்த முடிக் கற்றை அவன் காலைச் சுற்றி விலகிப் போனது. அவள் கதவில் ஒயிலாகச் சாய்ந்து, நான் குளிச்சுட்டு ஃப்ரஷ்ஷா வரேன் உள்ளே வந்து இரு என்றாள் திலீப்பிடம் ரொம்ப நாள் பழகியது போல் அந்நியோன்யமாக. புத்த பூர்ணிமா தினத்தில் நடுப் பகல் நேரம் தான் சுகம் தேடுவதில்லை என்று பதில் சொல்லியபடி திலீப் நடந்தான்.
வாக்கேஷ்வர் சாலை வழியாக மலபார் ஹில் போகும் டவுண் பஸ், நிறுத்தத்தில் அவனுக்காகக் காத்திருந்தது. பெரியப்பாவை அவன் சந்திக்க எல்லாம் கூடி வந்திருக்கிறது. சண்டை போட வேண்டாம். சும்மா பேசினால் போதும்.
அவன் பெரியப்பாவிடம் சுமுகமாக, வம்சத்துச் சொத்து பற்றி விசாரிப்பான். அதோடு தொடர்பு இல்லாமல் கல்யாணம், சின்னதாக சிஞ்ச்போக்லியில் ஒரு பேக்கரி ஆரம்பிக்க உத்தேசம், செட்டில் ஆக அவசரம், அம்மாவின் உடல்நிலை என்று தகவல் பகிர்வான். பெரியப்பா பணம் கொடுத்தால், அது கூடக் குறைய இருந்தாலும் பரவாயில்லை, அவன் வாழ்க்கை முழுக்க அவரை நினைத்துத் தொழுவதாக வாக்குத் தத்தம் செய்வான். ஏற்கனவே மாசாந்திரச் சம்பளத்துக்கு வழி செய்த பெரியம்மாவைத் தினம் மனதில் நெற்றி அம்பலப்புழை தூசி படிந்த தரையில் பட நமஸ்கரித்து எழுவதாகச் சொல்வான். பிஸ்கட் சாஸ்திரிக்கும் பெரியப்பா சொன்னால் சாஷ்டாங்கமாக நமஸ்காரமோ, வாய், மெய் உபச்சாரமோ செய்யத் தயாராக இருப்பதாகவும் அறிவிப்பான் அப்போது.
பெரியப்பாவின் மினிஸ்டர் மாளிகை.
வாசலில் வழக்கம் போல் பாரா சேவகன் யாரையும் காணோம். புத்த பூர்ணிமா. ஊரோடு விருந்துச் சாப்பாடு முடித்துப் பகல் தூக்கத்தில் இருக்கும் நேரம். மலபார் ஹில் மட்டும் விதிவிலக்கா என்ன?
படியேறி உள்ளே போகும் போது வாசல் அறையில் பெரியப்பா குரல் காதில் விழுந்தது –
நேரு பற்றிய நினைவுகளை நெஞ்சின் உள்ளறைகளில் இருந்து பிரியத்தோடு கெல்லி எடுக்கச் சலிப்பதே இல்லை.
அடுத்து அதைப் பிரதி செய்தபடி ஒரு பெண் குரல், சலிப்பதே இல்லை என்றது, டைப்ரைட்டர் ஒலிக்கு நடுவே.
அப்புறம் சத்தமே இல்லை.
திலீப் கதவை மெல்லத் தள்ள, சோபாவில் பெரியப்பாவின் காரியதரிசியான கொங்கணிப் பெண்மணி கையிரண்டையும் உயர்த்தியபடி மலர்ந்து கிடப்பது கண்ணில் பட்டது. எதிரே தரையில் மண்டியிட்டு அமர்ந்து, பெரியப்பா அவளுடைய நெஞ்சின் உள்ளறையில் இருந்து நேரு நினைவுகளைப் பிரியத்தோடு கெல்லி எடுத்துக் கொண்டிருந்தார்.