மாலை கொண்டுவர மறந்து பெரிய சிரிப்பை முகத்தில் ஒட்டி வந்தவன்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்குநாவல் தொகுதியில் நான்காவதில் இருந்து ஒரு சிறு பகுதி

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

 

மாலை கொண்டு வராததற்காகத் தன்னையே சபித்துக் கொண்டாலும் கதவில் முட்டுகிறது போல் உள்ளே போனபோது திலீப் முகத்தில் மிகப் பெரிய சிரிப்பு ஒன்று ஒட்டி இருந்தது.

 

கதவு பக்கம் போட்டு வைத்திருந்த ஸ்டீல் மேஜையில் காகிதங்களைப் பரத்திக் கொண்டு அகல்யா உட்கார்ந்திருந்தாள். இவனைப் பார்த்ததும் மராத்தியில் கேட்டாள்

 

என்ன தேவ் ஆனந்த், லோக்சபா எலக்‌ஷனுக்கு சீட்டா? போய்ட்டு அடுத்த வருஷம் வாங்க.

 

அவள் டென்ஷன் எதுவும் இல்லாமல் வேலையில் இருப்பதை அனுபவித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க திலீப்புக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அவளுக்குப் பின்னால் நாலு கட்சி முக்கியஸ்தர்கள் நிற்க, அறையின் அந்தக் கோடியில் சின்னவர் மட்டுமில்லை, பைப் புகைத்தபடி பெரியவரும் நின்று கொண்டிருந்தார்.

 

‘நம்ம கோட்டையிலே இப்போ மதராஸிக் கொடி தான் பறக்குது’

 

பெரியவர் சொல்ல, மற்றவர்கள் என்ன மாதிரி எதிர்வினை செய்வது என்று புரியாமல் நின்றார்கள். சின்னவர் ஆரம்பித்து வைக்க ஒரு பெரிய சிரிப்பு அறை முழுக்கச் சூழ்ந்தது. பைப்பை விலக்கிப் பிடித்தபடி பெரியவரும் புன்னகைத்தார்.

 

மாநகராட்சித் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் காரியத்தின் இறுக்கம் சற்றும் இல்லாத அந்தச் சூழலைத் திலீப்  சந்தேகத்தோடு எதிர்கொண்டான்.

 

இது அவனுக்காக நடத்தப்படுகிற நாடகமா? அகல்யாவும் நடிக்கிறாளா? அவளை அவர்கள் விலைக்கு வாங்கி இருப்பார்களோ? எதைக் கொடுத்து?

 

உங்க தகப்பனார் காணாமல் போனது பற்றி மனப் பூர்வமா வருந்தறேன் தம்பி. ரொம்ப படிச்ச மார்க்சிஸ்ட்னு சொன்னாங்க. என் நண்பர்கள் எல்லோரும் மார்க்சிஸ்ட் தான். நான் மட்டும் பத்திரிகைக்குப் போகாட்ட, தாடி வளர்த்துட்டு, ரணதிவே, ரங்கனேக்கர் பின்னாடி தான் செங்கொடி பிடிச்சுட்டு சுத்திட்டு இருப்பேன். உங்கப்பாவை பரிசயம் ஆகியிருக்கும்னு மனசு சொல்லுது. ஆனா, அவர் இல்லையே, நான் சொல்றதைக் கேட்டு ஆமா, இல்லேன்னு சொல்ல.

 

பெரியவர் பேசி நிறுத்த, மற்றவர்கள் மௌனமாக அவனையே பார்த்தார்கள். அகல்யா ஒரு காகிதத்தை சின்னவரிடம் மரியாதையோடு கொடுத்தாள்.

 

வேட்பாளர் மனு. போன மாசமே கொடுத்திருக்கார்.

 

அவள் சொல்லும்போது திலீப்பைப் பார்த்து அழகாகச் சிரித்தாள். கூப்சூரத் மத்ராசி சோக்ரி. அவளே திலீப் சார்பில் தயாரித்து அவன் கையெழுத்தையும் அவன் ஒப்புதலோடு ஆபத்துக்குப் பாவமில்லை என்று போட்டு வைத்திருக்கிறாள்.

 

திலீப்புக்கு அவளை மேஜை கடந்து போய்க் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. பெரியவர் சம்மதிக்காவிட்டாலும் சின்னவர் கோபப்பட்டாலும் பரிவார தேவதைகள் முகம் சுளித்தாலும் அவளை உதட்டிலும் தாடையிலும் முத்தமிட வேண்டும்.

 

இந்தக் காதல் சாஸ்வதமானது என்று முகம்மது  ரஃபி குரலில் சோகம் இழையோடப் பாடுகிறவனாகத் தன்னைக் கற்பித்துக் கொண்டான். அப்பா ரசித்த அதிபயங்கர அழுகை ராகமான சிவரஞ்சனியில் அல்லது அதன் தாயாதி, பங்காளி ராகமான நீலமணியிலோ , விஜயநாகரியிலோ பாடுகிறவன்.

 

சின்னவர் கையில் வாங்கிய வேட்பு மனுவைப் படித்துக் கூடப் பார்க்காமல் பெரியவரிடம் கொடுத்தார். அடர்ந்த ஹவானா புகையிலை மூக்கில் குத்தும் கறாரான வாடையோடு புகைக்கும் குழாய் வெடித்துச் சிரித்ததுபோல் மேகத் தொகுதியாகச் சாம்பல் நிறப் புகையை வெளியேற்ற, பெரியவர் கண்ணாடி அணியாத கண்ணைச் சிறுத்து சில வினாடிகளில் அந்த மனுவைப் படித்து முடித்து விட்டார்.

 

திலீப் ஆவலாக அவர் என்ன சொல்ல்ப் போகிறார் என்று காத்திருக்க, பெரியவர் அவன் பக்கம் கூடத் திரும்பவில்லை. அவர் பைப்பை ஜன்னல் மாடத்தில் வைத்து விட்டு, நேரே அகல்யாவின் நாற்காலிக்கு அருகே வந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன