வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி
நூல் வெளியீடு – ஸீரோ டிகிரி பப்ளிஷிங்
==============================================================
அகல்யா தாய்
அகல்யா எழுந்து நின்று கை கூப்பினாள். சிரிப்பு குமிழிட்டு வரச் சொன்னாள் –
சார், நான் உங்க பெண்ணு வயசு. தாய்ன்னு கூப்பிட்டா எங்க அம்மாவைக் கூப்பிடற மாதிரி இருக்கு.
அவர் வாஞ்சையோடு அவளை நோக்கினார்.
நீ என் அம்மாவுக்கே அம்மா என் மகளுக்கு மகள், குழந்தே. மதராஸி ஆனா என்ன, மராட்டி ஆனா என்ன? பெண்ணை மதிக்கற சமூகம் ரெண்டுமே.
பரிசு வாங்குவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஏதோ திரைப்படத்தில், கிளைமாக்ஸுக்கு முந்திய காட்சியைச் சாம்பிராணிப் புகைக்கு நடுவே இருந்து பார்ப்பது போல் கண்ணைக் கட்டியது திலீப்புக்கு. திரையரங்கில் கதவு திறந்து சாதரோடு நுழைந்த முதிய முகம்மதியர், உனக்குத் தான் வெற்றி என்று சொல்லியபடி நகர்ந்தார்.
பெரியவர் திலீப்பைக் கூர்ந்து பார்த்தார் –
அகல்யாம்மா, உன் சிநேகிதர் விவரம் எல்லாம் ஓகே. அவர் முழு. மதராஸின்னாலும் பிரச்சனை இல்லே. மாடுங்காவிலேயோ, முலுண்ட்லேயோ நிக்க வச்சுடுவேன். இல்லேன்னா கல்யாண் முனிசிபாலிடி எலக்ஷன் ஏப்ரல்லே இருக்கு. மதராஸின்னாத்தான் ஓட்டு விழும் அங்கே. நிச்சயம் ஜெயிப்பார்.
அகல்யா சட்டென்று குனிந்து அவர் பாதத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள, திலீப்பும் அப்படியே செய்தான். அவனுக்கும் அகல்யாவுக்கும் கல்யாணம் முடிந்து அவர் ஆசியைப் பெறுவதுபோல் இருந்தது.
ஜீத்தே ரஹோ.
வாழ்த்திய பெரியவர் மெதுவான குரலில் தொடர்ந்தார்.
மற்ற கட்சி எல்லாம் பெரிசு. ரொம்பவே பெரிசு. ஒவ்வொரு கேண்டிடேட்டுக்கும் கட்சி நிதி எலக்ஷனுக்கு செலவழிக்கக் கிடைக்கும். இங்கே பணம் இல்லே. நீங்க தான் தரணும். நன்கொடை இல்லே. பேங்குலே டிபாசிட் மாதிரி. தேர்தல் வேலைக்கும், கட்சியில் பொதுவாக தேர்தல் நிதியாகவும் ஒரு தொகை ஒவ்வொரு வேட்பாளர் கிட்டேயும் வாங்கிக்கறோம். அப்புறம் பத்து வருஷத்துலே நிதி நிலைமை சீரானதும் நிச்சயம் திருப்பிக் கொடுத்திடுவோம். நான் இறந்து போனாலும், இவங்க எல்லாம்.
அவர் சின்னவரையும் மற்றவர்களையும் சுண்டிக் கைகாட்டி ஜன்னல் மாடத்தில் இருந்து புகைக் குழாயை எடுத்துக் கொள்ள, எல்லோரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து, முறையிட்டார்கள் –
நீங்க நூறு வயசு இருப்பீங்க. இது என்ன பேச்சு.
திலீப்பும் மனப் பூர்வமாக அவர்களோடு சேர்ந்து கொண்டான். அவனுடைய அப்பா, அவனுக்காக எதுவும் செய்யாவிட்டாலும், எங்கே போனார் என்று தெரியாவிட்டாலும், அவரும் நூறு வருஷம் சௌக்கியமாக இருக்கட்டும்.