வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவலில் இருந்து = ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு
=============================================================================
அரசூர் தெரியுமா? அகிலா கேட்டாள்.
சிறிய சமோசாவைக் கடித்துக் கொண்டு தலையை இல்லை என்று ஆட்டினான் திலீப். இரானி ஹோட்டலில் மழைக்காக ஒதுங்க வருகிறவர்களின் கூட்டம் மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது.
மழை தொடங்கப் போகிறது என்று பூஜை செய்த பிள்ளையாரைச் சதுர்த்தி முடிந்து விசர்ஜன் நேரத்தில் கடலில் இடும்போதே எல்லோருக்கும் தெரியும். கணபதியைக் கரைத்ததும் மேகம் திரண்டு தென்மேற்குப் பருவ மழை ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கையில் கையில் குடையோடு கணபதி பப்பா மோரியா பாடிக் கொண்டு வரும் சில வயதான மராட்டிய ஆண்களை, ஏன் பெண்களையும் கூடத் திலீப் பார்த்திருக்கிறான். அவர்களுக்காகவே ஏற்படுத்தியது போல சில சமயம் மழையும் பொழிந்து நின்றிருக்கிறது.
அரசூரா?
திலீப் அசிரத்தையாகக் கேட்டான்.
மெட்ராஸில் இருந்து ராமேஸ்வரம் போகிற ரயில் இருக்காம். போட் மெயில்னு அழகான பெயர் அதுக்கு. அந்த ரயில் போற பாதையில் இருக்கப் பட்ட ஊர் அப்படீன்னு கேட்டேன். அங்கே ஒரு விசேஷம், தெரியுமா?
அகல்யா தரையில் விழுந்த கைக்குட்டையை எடுத்து உதறி இடுப்பில் செருகியபடி சொன்னாள்.
மழைக்காக ஒதுங்கிய எல்லோரும் சின்ன சமோசாவும், டீயும் சாப்பிட்டுப் போக உடனடியாக உத்தேசித்தவர்களாகவே இருந்தார்கள். டீ தவிர ஓவல்டின், கோக்கோ மால்ட் போன்ற பானங்களும், இறுக்கமாக மூடிய உயரமான கண்ணாடி ஜாடிகளில் மைதா மாவு பிஸ்கட்டுகளும் விற்பனைக்கு இருந்தாலும், ஒற்றை விருப்பமாக டீயும் சமோசாவும் தான் விற்றாகிறது.
இவர்களில் ஆண்கள் எல்லோரும், வியர்வைக் கசகசப்பும் மழைத் தூறலும் நனைத்த முழுக்கைச் சட்டையைத் தோள்பட்டைக்கு ஏற்றி மடித்து விட்டபடி, சபர்பன் ரயிலில் தொங்கிக் கொண்டு, அவரவர் குடித்தனத்துக்குப் போனதும் மர ஸ்டூலைத் தேடுவார்கள். பரணில் போட்டு வைத்த மழைக் கோட்டும், குடைகளும், கம் பூட்ஸ்களும் தொப் தொப்பென்று தூசியோடு தரையில் விழ துடைத்துப் போட்டு மழைக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராவார்கள்.
மழையை முன் வைத்தே இனி மூன்று மாதம் எங்கே போனாலும் வந்தாலும் பேச்சு இருக்கும் என்பது திலீப்புக்கு நிம்மதியான விஷயமாகப் பட்டது. நிறைய யோசித்துத் தினமும் எத்தனையோ தடவை பேசப் புதிதாக எதையும் கண்டெடுக்க வேண்டிய கவலை தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
நான் ஒரு விசேஷம் பத்தி பேச ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷமாச்சு. ஊம் கொட்டவாவது செய்யலாமில்லே. மனசெல்லாம் எங்கே? பெரிசு பெரிசா மலையாளப் பாச்சிக்கு நடுவிலே போய் உக்கார்ந்துடுத்தா?
அகல்யா அவன் தோளில் அடித்தாள்.
உஸ் அந்த ஆளுக்குத் தமிழ் அர்த்தமாகும்.
ஜாக்கிரதையாகக் கோப்பையை ஏந்தி அதை விட சர்வ கவனத்தோடும் டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு ஆறடி சர்தார்ஜியைக் கண்ணால் காட்டிச் சொன்னான் திலீப்.
அவனுக்குத் தமிழ் தெரிந்திருந்தால் தான் என்ன போச்சு?
அகல்யா மென்மையாகச் சிரித்தபோது அவளுடைய புது மூக்குத்திப் பொட்டு ஒளிர்ந்ததைப் பார்த்த திலீப் மெல்ல நாசி முனையில் வருடினான்.
வேணாம் கை எடுக்கலாம். இல்லாட்ட தாறுமாறா கீழே இறங்கிடும்
அவள் குற்றப்படுத்தினாலும் அதில் எதிர்பார்ப்பும் தெரிந்ததைச் சிரிப்போடு கவனித்தான் திலீப்.
என்ன கேட்டே?
கேள்வியை மறந்த மாதிரி கேட்டான். அவள் வாயால் மலையாள சௌந்தர்யம் திரும்ப நினைவு கூரப்பட அவனுக்கு இஷ்டம்தான்.
அரசூர் தெரியுமான்னு கேட்டேன்.
அகல்யா ஆதி கேள்விக்குப் போயிருந்தாள். அவளுக்கு கேரள வனப்பு தேவையில்லாத விஷயம். திலீப்புக்கும் அதே படி. ஆனால் அகல்யா இல்லாத நேரத்தில் அது தவிர யோசிக்க உருப்படியாக ஏதும் இல்லைதான்.