வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கு= தொகுதி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்க்ஸ் வெளியீடு – அடுத்த சிறுபகுதி
மாதம் ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்கும், வட்ட டிபன் பாக்ஸில் அவல் உப்புமா எடுத்துப் போய் மத்தியான சாப்பாடு முடிக்கும் டைப்பிஸ்டுப் பெண்கள் மழைக் காலத்துக்குச் சற்றே முந்திய தூறல் சாயங்காலங்களில் அப்சரஸ் ஆவார்கள் என்று திலீப் நினைத்தான். அவன் கரம் பிடித்து வருகிற இவள் அவர்களில் கிரேட் ஒன் நிலை அப்சரஸ். நிமிஷத்துக்கு இருபது வார்த்தை சுருக்கெழுத்தும், பத்து வார்த்தை தட்டச்சும் செய்யும் இந்தத் தேவதை திலீப்புக்கு வசப்பட்டவள். காலில் ரப்பர் செருப்பு தவிர மற்றப்படி யட்சி போல வசீகரிக்கும் அணங்கே தான் அகல்யா.
வழியை விட்டு விலகிச் சற்றே நடந்து ஈரம் பூரித்துக் கிடந்த மணலில் அமர்ந்தார்கள்.
அரசூர்லே முப்பது வருஷமா ராமாயணம் சொன்ன ஒருத்தர் பரலோகம் போனாலும் கதை சொல்றதை விடலியாம். செம்புத் தண்ணியிலே அவரை ஆவாஹனம் செஞ்சு வச்சதும், விட்ட இடத்திலே இருந்து கதையை ஆரம்பிச்சு தொடர்ந்து போயிட்டிருக்காம்.
அம்புலிமாமா கதை சொல்லும் சுவாரசியத்தோடு தொடங்கினாள் அகல்யா.
எங்கே விட்டுப் போனாராம்? திலீப் கேட்டான்.
காட்டுக்குப் போற ராமன் எல்லோர் கிட்டேயும் சொல்லிட்டுப் போற இடம். இந்த மூணு மாசத்திலே ராமன் உள் தெருவெல்லாம் சொல்லி, கோட்டை மதிலுக்குப் பக்கத்துத் தெருவுக்கு வந்தாச்சாம்.
ரொம்ப வேகமாகத் தான் கதை நகர்றது.
திலீப் சிரிக்க, வேணாம் கிண்டல் எல்லாம் செய்யக் கூடாது என்று கண்டித்தாள் அகல்யா.
கதை சொல்ற போது பாத்திரத் தண்ணிக்குள்ளே வந்த அந்த ஆகாச வாணிக்குப் பக்கமா யாரெல்லாம் உண்டாம்?
திலீப் சுவாரசியம் தட்டுப்படாமல் மீண்டும் கேட்டான். ஆனாலும் இது சுவாரசியமானதுதான்.
பாகவதரோட சிஷ்யகோடிகள் தான். தினசரி அவருக்கு மாலை மரியாதைன்னு செம்புக்கு சூட்டறதாம். தட்சணையை முன்னாடி பட்டுத் துணியிலே எல்லோரும் போட்டு அப்புறமா குவிச்சு எடுத்துக்கறதாம்.
அகல்யா அதிசயம் கேட்ட குரலில், குரல் கீச்சிட, கைக்குட்டையால் வாயை அவ்வப்போது பொத்தியபடி கதை சொன்னாள்.
செம்பாவது, குரல் வரதாவது. எல்லாம் ப்ராட். பக்கத்துலே இருக்கப்பட்ட சிஷ்யகோடி ஏதாவது வெண்ட்ரிலோகிஸ்டா இருப்பான். வாயைத் திறக்காம பேசற கலை அது.
திலீப் சொல்ல நிறுத்தச் சொல்லிச் சைகை காட்டித் தொடர்ந்தாள் அகல்யா.