வாழ்ந்து போதீரே = அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவதில் இருந்து அடுத்த சிறு பகுதி
உள்ளே வா. நீயும் வாம்மா. வலது கால். ஆமா அதுதான். முன்னால் அது வரட்டும். விழுந்துடாதே. பையை என்னத்துக்கு தூக்கிண்டு வரே? சுமக்க இனிமேல் தான் நிறைய வரும். இப்போ அக்கடான்னு இரேன். உன் பேரென்னம்மாடி குழந்தே?
கற்பகம் பாட்டி வரிசையாகச் சீனச்சரப் பட்டாசாகக் கேள்வி கேட்டபடி கதவுக்கு அந்தப் பக்கம் நின்றாள்.
அகல்யா அணை உடைந்து பொங்கிய அழுகையை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டு அவள் காலில் விழுந்து நமஸ்கரித்தாள்.
ஏய் நீலகண்டன் பொண்டாட்டி, ரெண்டு அடி அடிச்சுடு.முதல்லே நல்ல வார்த்தை சாவகாசமாச் சொல்லு. நீ மட்டும் சொல்லலே.. பார்த்துக்கோ.
திலீப்பும் செல்லமாக மிரட்டியபடி கற்பகம் காலில் விழ அவள் ரெண்டு பேரையும் எழுப்பித் தழுவியபடி ஆசி சொன்னாள்.
ஏண்டா திருட்டு படுவா, பலசரக்குக் கடையிலே ஒரு வீசை சக்கரை வாங்கிண்டு வரேன்னு போற மாதிரி திடுதிப்புனு குண்டி வேஷ்டியோடு கிளம்பி ஓடிப் போய் கல்யாணம் பண்ணிண்டு வந்து நிக்கறியே. வெக்கமா இல்லே. நான் இருக்கேன்னு நினைவே இல்லியா? உன் தங்கை ஜனனிக்குச் சொன்னியா? லண்டன் தான் கொல்லைப் பக்கம் ஆயிடுத்தே. ஒரு போஸ்ட் கார்ட் அவளுக்குப் போடலாமில்லே? உங்க பெரியப்பாவுக்கு? சியாமளாவுக்கு? அண்டா முழுங்கி மாதிரி அமுக்கமா இருந்து இவளையும் இழுத்துப் பிடிச்சுக் கூட்டிண்டு வந்துட்டே? ஆந்தைக் கண்ணா, வாய்லே என்ன கொழக்கட்டையா?
திலீப் எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில் தான் சிரிப்பில் சொன்னான்.
உங்கிட்டே பேசறதே தண்டம் சோழப் பிரம்ம சொருபமே. ஏண்டியம்மா கொழந்தே, இந்த கர்த்தபத்தை எப்படி செலக்ட் பண்ணினே?
அகல்யா, பாட்டி என்ன கேக்கறான்னு புரியறதா?
கர்த்தபம்னா என்ன கற்பூரமா?
அகல்யா திருப்பிக் கேட்க, கெட்டுது குடி என்று இன்னொரு தடவை சிரித்தான் திலீப். கல்யாண வீடு இப்படித்தான் உற்சாகமாக இருக்கும். இவர்கள் எல்லோருக்கும் சொல்லி அழைத்து விட்டு அகல்யாவைக் கைப்பிடித்திருக்கலாமோ என்று தோன்றியது அவனுக்கு.
மழையிலே நடந்து வந்தியாடி பொண்ணே என்றாள் பாட்டி அடுத்ததாக.
நானா? இல்லையே. இவரோடு கூட ஃபியட் கார் டாக்சியிலே வந்தேன் பாட்டி
அப்பாவியாகச் சொன்னாள் அகல்யா.
என்ன குசும்புடி கிழவி இந்த வயசிலே. நீ ஒரிஜினல் தஞ்சாவூர்க்காரின்னு சொல்லாமலேயே உலகத்துக்குப் புரியும்..
திலீப் இப்போது சிரித்தது மழைச் சத்தத்தோடு போட்டியிட்டு உயர்ந்தது. கற்பகம் பாட்டியும் அவனோடு சேர்ந்து சிரிக்க, சூழ்நிலை லேசாகிப் போனது. அது உணர்ச்சி மேம்பட்டு, கோபமோ, ஒதுக்குதல் பற்றிய ஆத்திரமோ மேலேறி வர இருக்கும் என்று திலீப் நினைத்ததில்லை.
தமிழ்லே ஓடறதுன்னா தெரியுமில்லையோ? வீட்டுலே சொல்லாமக் கொள்ளாம வந்து ரகசியமாக் கல்யாணம் செஞ்சுக்கறது. பாட்டி குசும்பா கேட்கறா நீ படு சீரியஸா பதில் சொல்லிண்டிருக்கியே.