ரேடியோ லைசன்ஸ் இல்லாமல் கச்சேரி பாட்டு கேட்டால் உடைபடும் ரேடியோ

வாழ்ந்து போதீரே [] அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது – அடுத்த சிறு பகுதி

சாமுவேல் என்று பெயர் சொன்னார். போன வாரம் வந்த போது சாமிவேல் என்று சொல்லியிருந்தார். அவருடைய பெயர் இந்த இரண்டில் எது என்று அரசூரில் ஒரு வாரமாகப் பலமான சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.

 

எந்தப் பெயரோ, கருத்து மெலிந்த ஒட்டடைக் குச்சி போல ஓங்குதாங்காக வளர்ந்த ஒரு நடு வயசு மனுஷர் அரசூரில் வீடு வீடாக அத்து மீறிப் புகுந்து ரேடியோப் பெட்டிகளை உடைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

 

ரேடியோ பெட்டி வைத்து கானங்களையும், நேரம் கெட்ட நேரங்களில் யார் யாரோ தில்ரூபா வாசிப்பதையும், தேசப் பற்றைத் தூண்டும் பிரசங்கம் செய்வதையும், வீட்டுக்குள் சாய்வு நாற்காலியில் ஓய்வாக இருந்தபடி கேட்பதை இது தடை செய்தது. கிரிக்கெட்டில் ஈர்ப்பு உள்ள பிள்ளைகளையும் அவர்களின் நெருங்கிய உறவினர்களையும் யார் எத்தனை ஓட்டம் எடுத்தார், யார் பந்து வீசி அவரை வீழ்த்தினார் என்று சதா அறிவுத் தேட்டத்தில் ஈடுபடுவதையும் இந்த ஒட்டடைக் குச்சி மனுஷர் நிறுத்திப் போட்டார்.

 

பெட்டி வைத்திருக்க லைசன்ஸ் எடுத்தாக வேண்டும்.

 

அவர் கொட்டையை நெருக்கிய பிறகு தான் ஊரில் பாதிப் பேருக்கு இப்படி ஒரு சங்கதி இருப்பதே தெரிய வந்தது.

 

சர்க்கார் கேட்கச் சொல்லி பிராணனை வாங்குகிற பாட்டைக் கேட்க சர்க்காருக்கு ஏன் காசு கொடுக்கணும்? சங்கீதத்தை முறையாக எல்லோருக்கும் சொல்லித் தர ஏற்பாடு செய்யாமல், ராத்திரி உறங்கும் நேரத்தில் குடும்பத்தோடு விழித்திருந்து சங்கீதக் கச்சேரிகளை கேட்கச் சொல்வதற்கு அவர்கள் தானே காசு கொடுத்தாக வேண்டும்? அப்படி விழித்திருக்கிற,  கம்பளி ஸ்வெட்டர் அணிந்த வடக்கத்தியக் குடும்பங்களைப் பத்திரிகை விளம்பரங்களில் மங்கிய புகைப்படமாகப் போட்டால் மட்டும் போதுமா?

 

ஊர்ப் பெரியவர்கள் கீழ்ப்பாத்தி கண்மாய்க் கரையில் விடிகாலை நேரம் கூடுவார்கள். விடிந்து விட்டது என்பதை நியாயப்படுத்துவதாக அவர்கள் கருதும் காரியம் முடிக்க அங்கே போய்க் குத்த வைக்கும் நேரம் அது. அப்போது புகைச் சுருட்டைச் செல்லமாகக் கடித்தபடி பேசத் தலை போகிற தகவல் கிடைத்தது.

 

ஏண்ணே, லைசன்ஸ் இல்லாட்ட பொட்டியை நடுத்தெருவிலே போட்டு உடைக்கறானாமே.

 

அதை ஏன் கேக்கறே’ப்பு? காளிமுத்தன் தெரு மாவன்னா ரானா வீட்டு ரேடியோவைப் இப்படி போட்டு உடைச்சு அது பத்து சுக்காகி தெரிச்சு விளுந்துச்சாம். ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஓரம் ஓடினதாம். இப்போ நடு ராத்திரியிலே  அவுக வீட்டுக் கிணத்துக்குள்ளே இருந்து ஐயங்கார் கச்சேரிப் பாட்டு பாடறது கேக்குதாம். மாடப் புறையிலே இருந்து மன்மத லீலையை வென்றாருண்டோ வருதாம். தோட்டத்திலே கீரைப் பாத்திக்கு உள்ளாற இருந்து குஜாலா கரகாட்டப் பாட்டு கேக்குதாமில்லே?

 

அது என்ன பாட்டு அண்ணே?

 

சனிக்கிளமை சாயந்திரம் சாயாக்கடை ஓரத்திலே வண்ண மணிக் குட்டி

 

கேட்டதே இல்லையே. அங்கனக்குள்ள இருந்துக்கிட்டே முளுக்கப் பாடும்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன