லைசன்ஸ் இல்லாத ரேடியோக்களை உடைக்க,சாமிவேலுக்கு அதிகாரம் பற்றி

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவலில் இருந்து அடுத்த பகுதி


சிரிப்பு அவர்கள் வீடு போகும் வரை கூட வர வைத்த ரேடியோ இன்ஸ்பெக்டருக்கு அவர்கள் மனசார நன்றி சொல்லிக் கலைந்தார்கள்.

 

சாமுவேலோ சாமிவேலோ, அவர்களை வயசேறிய விடலைகள் ஆக்கியதில் அந்த மனுஷர் முழு வெற்றி பெற்றிருந்தார். அவர்கள் மட்டும் என்று இல்லை, ஒரு வாரமாக எல்லாப் பேச்சும் இதில் தான் போய் நிற்கிறது.

 

செட்டியூரணியில் இருந்து குடிதண்ணீர் சுமந்து போகும் பெண்கள், ரேடியோ லைசன்சுக்கார கழிச்சாலே போவான் சுக்கு நூறாகச் சிதறுத் தேங்காய் போல உடைத்துப் போட்ட ரேடியோப் பெட்டிகளில் இருந்து கரண்ட் தரையில் பரவி, வீட்டுத் தரை விரிசல் கண்டதாக உரக்கப் பேசி, தண்ணீர் சிலும்பி மேலே வழிந்து வளமான மாரிடம் நனைந்து, உடலில் வடிவாக ஒட்டிப் படிந்த சேலையோடு அதிரூப சுந்தரிகளாகக் குடம் சுமந்து போகிறார்கள்.

 

தணிந்த குரலில், அந்த மின்சாரம் பரவிய தரையில் இறுக்கப் பிணைந்து கிடந்து சுகிக்கும் ராத்திரி உறவின் போது நிறைய நேரம் ஈடுபட முடிவதாகச் சிரிப்புகளுக்கு இடையே தகவல் பகிர்ந்து கொள்கிறார்கள்.

 

ராத்திரிகளில் சப்தம் தாழ்த்தி வைத்த வானொலியில் ஒலிபரப்பாகும் அகில பாரத நாடகத்தில் குப்தாஜி, உங்கள் ஆசனத்தை உள்ளே கொண்டு வந்து, வாயை இனிப்பு ஆக்குங்கள் என்பது போன்ற வசனங்களைக் கேட்டபடிக் கலவியில் உச்சம் தொட்டதை விடத் தரையில் கசிந்த மின்சாரத்தால் வரும் சுகம் அதிகம் என்று அவர்கள் சொன்னாலும், அதற்காக ரேடியோ பெட்டியை உடைக்கக் கொடுப்பது தவறான நடவடிக்கை என்பதையும் கூடவே குறிப்பிடத் தவறுவதில்லை.

 

நவராத்திரி விடுமுறைக்கு அடைத்த நீதிமன்றங்கள் திறந்து, கேஸ் கட்டுகளை கேரியரில் வைத்துக் கொண்டு உற்சாகமாக உந்து வண்டி மிதித்துப் போன வக்கீல் குமாஸ்தாக்கள் மத்தியில் ரேடியோ உடைப்பு விதம் விதமாகச் சர்ச்சை செய்யப்பட்டது. அவர்களில் ஒருத்தர் ரேடியோ இன்ஸ்பெக்டர் வேலைக்கு சீமையில் தான் போய்ப் படித்து வரவேண்டும் என்றும் சர்க்கார் உத்தியோகங்களிலேயே, கலெக்டருக்கும், டிஸ்ட்ரிக்ட் கோர்ட் ஜட்ஜுகளுக்கும் கிடைக்கும் சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி சேர்த்து, இவர்களுக்கும் கிட்டும் என்றும் சொன்னார். எந்த வீட்டைக் கடந்து போகும்போதும் உள்ளே ரேடியோ இருக்கிறதா என்று ரேடியோ இன்ஸ்பெக்டர்களுக்குத் தெரிந்து விடும் என்றும் இதைக் கண்டுபிடிக்க, இடது கையில் தகடு கட்டி இருப்பார்கள் என்றும் இன்னொரு குமாஸ்தா தெரிவித்தார். லைசன்ஸ் இல்லாத ரேடியோக்களை மாசம் இவ்வளவு என்று இலக்கு நிர்ணயித்து உடைக்க அவர்களுக்கு உப ஜனாதிபதி மூலம் வருடம் இரண்டு முறை இந்தியில் எழுதிய தாக்கீது வரும் என்றார் அவர்.  லைசன்ஸ் இல்லாத ரேடியோ கேட்பது பிரிவினை வாதம் செய்வது போன்ற தேச விரோத நடவடிக்கை என்று சட்டம் சொல்கிறதாம்.

 

வக்கீல்களுக்கும் நேரடியாக இல்லாவிட்டாலும் ரேடியோ லைசன்ஸ் பிரச்சனை மூலம் மறைமுகமாகப் பாதிப்பு இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன