இறக்கை முளைத்த பசுக்கள் பறக்கும் பத்திரிகையில் வரும் நேற்றைய செய்தி

வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவலிலிருந்து அடுத்த சிறு பகுதி

[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[

கீழ்ப்பாத்திக் கண்மாய் வக்கீல்களுக்கு இல்லை என்பது எழுதாத விதி. அங்கே குமாஸ்தாக்களும், வேலை வெட்டி இல்லாத ஊர்ப் பெரிசுகளும் மட்டுமே சுருட்டோடும் புது வம்போடும் போய்க் குந்துவது வழக்கம்.

 

வக்கீல்கள் காலையில் வீட்டு வாசலில் வந்து விழும் ஆங்கிலப் பத்திரிகைகளில் விளையாட்டு பற்றிய பக்கத்தைத் திறந்தது, அதன் கீழ்ப் பகுதியில், யாரெல்லாம் செத்துப் போனார்கள் என்று புகைப்படங்களோடு அச்சடித்து அறிவிப்பு வந்திருப்பதைப் படித்ததும், கிரமமாகக் காலைக் கடன் கழிக்க அவரவர் தேகத்தைத் தயார் செய்து வைத்திருந்தார்கள்.  அதை விட விரசாகக் கழிவு நீக்க ரேடியோ சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

 

வக்கீல்கள் காலை ஏழரை மணிக்கு, ஆகாசவாணி, செய்திகள், வாசிப்பது என்று பத்து நிமிடம் வாசிக்கும்  செய்தி அறிக்கை கேட்டு முடியும் போது அவர்களுக்கு வயிறு சந்தோஷ சமாசாரம் சொல்வது நடப்பானது.  தினசரிப் பத்திரிகை வராத தினங்களிலும் ஆகாசவாணி உண்டென்பதால் நிலைமை சீராக இருந்தது.

 

அச்சமூட்டும்படி கூட்டம் கூட்டமாக வந்து இறங்கி ராப்பகல் பாராது, மழையும் வெய்யிலும் குளிரும் ஏற்படுத்திய காலநிலை வித்தியாசத்தை உணராமல் சதா மயில் ஆடிய வண்ணமாக இருந்தது போய், கழுகுகள் மட்டும் கூட்டமாகப் பறந்து கோயில் குருக்கள் மேலும் வக்கீல்கள் மேலும் தினசரி எச்சமிட்ட நேரம் அது. நடப்பதெல்லாம் நல்லதுக்குத் தானா என்று ராமாயணக் கதையை இன்னும் சுத்த ஜலம் நிறைத்த செம்பில் இருந்து தினமும் சொல்லி வரும் பஞ்சாபகேச சிரௌதிகளிடம் கேட்டார்கள். அவர் இதெல்லாம் நல்லதுக்கு இல்லை என்று தெரியப்படுத்திப் பரிகாரமும் சொன்னார்.

 

நமக்கு மூத்த குடியினர், முன்னூறு ஐநூறு வருஷம் முன் பயன்படுத்தாத, அதனால் நமக்கு அந்நியமான எல்லாவற்றையும் பகிஷ்கரித்தாலே போதுமானது என்றார் சிரௌதிகள். வக்கீல்கள் தவிர வேறே யாருக்கும் அதை எடுத்துச் செய்ய நேரமும் சிரத்தையும் கிட்டவில்லை.  அவர்கள் புதுப் பழக்கத்தைப் பகிஷ்கரிப்பதற்காக டிகிரி காப்பி குடிப்பதையும் ஆங்கிலப் பத்திரிகை வாங்குவதையும் நிறுத்தி வைக்க வேண்டிப் போனது. முட்டைகோசும் காரட்டும் உருளைக் கிழங்கும் இதே நியாயத்திற்கு உட்பட்டு சாப்பிடுவது விலக்கப்பட வேண்டும் என்றாலும், செம்புத் தண்ணீருக்குள் பஞ்சாபகேசன் ஆவாஹனமாகாத நாளில் அவருடைய பெண் சிஷ்யை இந்த சாத்வீகமான காய்கறிகளைப் புசிக்க எந்தத் தடையும் இல்லை என்று நாலு ஸ்லோகங்களையும், பாரசீக, ஜப்பானிய, சீனப் பாடல்களையும் தலா ரெண்டடி பாடி நிரூபித்தாள். பஞ்சாபகேசன் செம்பில் இறங்கி இருந்தாலும் அதே தான் சொல்லியிருப்பார் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை. விரைவிலேயே சிக்கரி கலக்காத காப்பிக்கும், இறக்கை முளைத்த பசுவின் படத்தோடு கூடிய இங்கிலீஷ் செய்தித் தாளுக்கும் அதேபடி விலக்கு கிடைத்தது.

 

ஒயிட் லெக்கான் கோழியும், முட்டையும் சாப்பிடத் தகுதி வாய்ந்தது தானா என்று ரயில்வே ஷ்டேஷன் மாஸ்டர் ரெட்டியார் பஞ்சாபகேசன் சிஷ்யையிடம் தகவல் கேட்க, அவள் ரயில் வராத தினங்களில் அப்படிச் செய்யலாம் என்று அபிப்பிராயம் சொன்னாள். ரெட்டியார் வெளியூருக்குப் போனாலும் அந்த விதிவிலக்கு உண்டு என்று கொசுறாக இன்னொரு சுலோகம் சொல்லி எடுத்துரைத்தாள். ரெட்டியார் வாரம் மூன்று தடவையாவது பத்து கிலோமீட்டர் கடந்து போய் விட்டு வருவதற்குக் காரணம் ஏதும் யாரிடமும் கூறுவதில்லை. கோழியும் முட்டையும் வாய்க்கு ருசியாகச் சமைத்துப் பரிமாறவும், கூட இருந்து சிரம பரிகாரம் செய்ய ஒத்தாசை  பண்ணவும் அங்கே ஏற்பாடு செய்துவிட்டார்.

 

ரேடியோவை முன்னோர் உபயோகிக்காத பட்டியலில் சேர்த்து அதன் உபயோகத்தை நிறுத்தி விடுவதை வக்கீல்கள் விரும்பாததால் அதைப் பற்றி சர்ச்சை இல்லாமல் போனது. கரண்டில் இயங்கும் எதுவும் சக்தி ஸ்வரூபமாக முன்னோர் ஆசியோடு உபயோகிக்கிறதால், தாராளமாக அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பஞ்சாபகேசன் வகையறாக்கள் எடுத்துரைத்தார்கள். சிக்கல் இல்லாமல் போன ரேடியோ நடவடிக்கையை லைசன்ஸ் இன்ஸ்பெக்டர் சிக்கலானதாக்கி விட்டார். இவ்வளவுக்கும் வக்கீல்கள் எல்லோரும் வருடம் பத்து ரூபாய் செலுத்தி அவரவர் வீட்டு ரேடியோவுக்கு லைசன்ஸ் எடுக்கிறவர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன