லைசன்ஸ் எடுக்காத ரேடியோக்களை உடைத்தெறியும் பணியும் கரை படியா கரங்களும்

வாழ்ந்து போதீரே –  அரசூர் நான்காம் நாவல் அடுத்த சிறு பகுதி

இது இப்படி இருக்க, ராமாயணக் கதை மெல்ல முன்னேறுவதற்குக் காரணம் என்ன என்று ஓய்வு பெற்ற முன்சீப் கோர்ட் நீதிபதி நீலமேகம் பிள்ளை தலைமையில் தாங்களாவே ஏற்படுத்திக் கொண்ட ஏழு நபர் குழு ஆராய்ந்தது. கதை நேரத்தை ஆருடம் கேட்கப் பயன்படுத்துவதே காரணம் என்று அந்தக் குழு தீர்மானத்துக்கு வந்தாலும் அதை முழுக்க எடுத்துச் சொல்ல அவர்களுக்குச் சந்தர்ப்பம் தரப்படவில்லை. இவர்கள் குறிப்பிட்ட ஆரூடம் தினசரி கதை சொல்வதற்கு முன்னால் கேள்வி பதில் ரூபத்தில் நிகழ்வது.

 

ஊர் நன்மையை உத்தேசித்து எழும் கேள்விகளில் ஒன்றாகப் போன வாரம் புதன்கிழமையன்று ரேடியோக்களை உடைத்துப் போடும் சர்க்கார் உத்தியோகஸ்தர் பற்றிச் செம்பு நீருக்குள் கேள்வி மரியாதையோடு தொடுக்கப்பட்டது. பஞ்சாபகேசனின் ஆதிகால சிஷ்யர்கள் கைத்தாளமிட்டும், ஜிங்குஜிங்கென்று கைக்கடக்கமான ஜால்ராக்களை ஓசைப்படுத்தியும் சந்தோஷ ஒலி எழுப்ப, தண்ணீரில் இருந்து வந்த பதில் இப்படி இருந்தது –

 

அந்த வெளியூர் மனுஷ்யர் சாமுவேலாக வரும் நாட்களில் நல்லவராகவும் சாமிவேலாக வரும் போது பிசாசு மேலேறியவராகவும் இருக்கிறார். பிசாசு தினங்களில் மட்டும் அவர் வானொலி உடைக்கிற துர்செயலில் ஈடுபடுகிறார். வீட்டு வாசல்களில் குங்குமம் பூசிய எலுமிச்சைகளை நிலைக்கு மேல் பொருத்தி வைத்தால் அவர் வீட்டுக்குள் நுழையாமல் இருப்பார். சர்க்காருக்குச் சேர வேண்டிய தொகையைச் செலுத்த எல்லோரிடமும் உபரியாகப் பணம் புழங்க, தினம் இங்கே உபரி சங்கீர்த்தனம் நடத்துவோம். எல்லோரும் புதிதாகப் பறித்த காய்கறிகளும், அரிசியும் பருப்பும், ரெண்டு ரூபாயிலிருந்து மேலே இஷ்டம் போலவும், உசிதம் போலவும், சுவர்ண புஷ்பமும் ரஜத புஷ்பமும், என்றால் கரன்சி ரூபாய் நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் சமர்ப்பித்து எல்லா விக்னமும் விலகி ரேடியோ கேட்கலாம்.

 

செம்பில் இருந்து மேலதிக வழிகாட்டுதல் உத்தரவு கிட்டாவிட்டாலும், சிஷ்யை சொன்னதின் பேரில், எட்டு நபர் குழுவொன்று ரேடியோ உடைக்கும் சர்க்கார் உத்தியோகஸ்தனை, கடந்து போன சனிக்கிழமை காலையில் தெப்பக்குள மேற்குக் கரையில் உள்ள தபால் ஆபீசில் சந்தித்தார்கள்.

 

ரேடியோ உடைக்காத நேரங்களில் அந்த மனுஷர் போஸ்ட் ஆபீசில் தாற்காலிகமாக மேஜை போட்டு, ஏற்கனவே எழுதிய சர்க்கார் சாணித்தாள் கோப்புகளில் எல்லாப் பக்கங்களிலும் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். போனவர்கள் ஆச்சரியத்தோடு அதைப் பார்த்தபடி நின்றார்கள்.

 

இவர்களை அன்போடு வரவேற்று தன் மேஜை ஓரங்களிலும் பகுதி நாற்காலியிலும் உட்காரச் சொன்னார் அந்த மனுஷர், ஏன் பழைய கோப்புகளிலும் உதிரிக் காகிதங்களிலும் கையொப்பமிட வேண்டும் என்று அவரிடம் விசாரிக்கப்பட்டது. கை விரல்கள் நெறி கட்டி வலிக்காமல் இருக்க அப்படிச் செய்யச் சொல்லி நகரத்தில் டாக்டர்கள் ஆலோசனை கூறியதாகவும் ஐம்பது வருடத்துக்கு முந்திய பழைய ஃபைல்கள் இங்கே நிறைய இருப்பதால் கை விரல்கள் தற்போது சரியாக இயங்குவதாகவும் தெரிவித்தார் அவர்.

 

கை விரல்கள் சரியாக இல்லாவிட்டால் லைசன்ஸ் வாங்காத ரேடியோ பெட்டிகளை உடைப்பது சிரமமான காரியம் என்று விளக்கி அவர் வந்தவர்களிடம் அங்கே வந்த காரணம் விசாரித்தார். அவர்களும் மென்று முழுங்காமல் அவர் செய்கிற இந்த நாசகாரச் செயலை உடனே நிறுத்திப் போட வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். கையொப்பம் இடுவதையா என்று அவர் கேட்க, ரேடியோவை உடைப்பதை என்று விளக்கினார்கள்.

 

அவர் எழுந்து நின்று பிரசங்கி போல் உயர்த்திய குரலில் கூறியது :

 

உங்களுக்கு நான் ஒண்ணு சொல்ல வேண்டியிருக்கு. எதோ நான் உங்க ஊருக்கு வந்து தான் பொழுது போகாம வீடு வீடாகப் போய் ரேடியோ லைசன்ஸ் கேட்கறேன்னு தானே நினைக்கறீங்க.? அது சரியில்லே.

 

பின்னே எது தான் சரி? ரேடியோ சரஸ்வதி இல்லையா? சரஸ்வதி தான் வாணி. ஆகாசத்திலே இருந்து இறங்கின சரஸ்வதி அவ சாஸ்வதமா இருக்கற இடம் ரேடியோப் பெட்டி. அதைப் போய் உடைக்கறது என்ன புதுப் பழக்கம்?

 

அவரோ, இது புதுசொன்றும் இல்லை என்றும் லைசன்ஸ் கட்டணம் வசூலிப்பதை சர்க்கார் மும்முரமாக்கி இருப்பதால் போன வருஷமே அவரையும், விலாசம் சரியாக எழுதப்படாத கடிதங்களைப் பட்டுவாடா செய்யும் இறந்த கடிதங்களின் பிரிவிலிருந்து இன்னும் பத்து பேரையும் இந்த வேலைக்காக உத்தியோக மாற்றம் கொடுத்து அனுப்பி வைத்ததாகச் சொன்னார். சொற்பமான சம்பள உயர்வும் உண்டு என்பதை அவர் சொல்லாவிட்டாலும் அதிகமாக அது இருக்கும் என்பதையும் உடைக்காமல் இருக்க அவர் கையூட்டு வாங்கலாம் என்றும் எட்டு நபர் குழு நம்பியது.

 

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, லஞ்சம் கொடுப்பது குற்றம் வாங்குவதும் குற்றம் என்று ரேடியோ அறிவிப்பாக அவர் தெரிவித்து, லைசன்ஸ் இல்லாத ரேடியோக்களை உடைத்துத் தகர்த்தெறியும் மன நிறைவான காரியத்தில் கை சுத்தமானவர்களே ஈடுபட முடியும் என்றும் இல்லையென்றால் மின் அதிர்ச்சியில் கை கருகி விழுந்து விடலாம் என்றும், அப்படியான ரேடியோக்கள் கேட்கும் போதே வெடித்து வீட்டுக்காரர்களுக்கும் துன்பம் தரும் என்றும் எச்சரித்தார்.

 

மலையாளக் கரையில் போன மாசம் வரை சர்க்காருக்காக இதே உத்தியோக கைங்கரியம்  தான் செய்து வந்ததைக் குறிப்பிட்டு விளக்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன