சொரிய முடியாத இடத்தில் அரிப்பு தோன்றுவது போல் சின்ன அசௌகர்யம்

வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவல்-அடுத்த சிறு பகுதி

கொச்சு தெரிசாவுக்கு மட்டும் கேட்கிற மாதிரி தமிழ் கலந்த ஓட்டை இங்கிலீஷில் மெதுவாகச் சொல்லியபடி அவர் பின்னால் உட்கார்ந்தார்.

 

இந்த ஊருக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தாள் கொச்சு தெரிசா. ஒரு வேளை அந்தப் பெயரோடு இங்கே யாராவது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ. அப்புறம், கட்லே போவன் என்றால்? போர்ச்சுகீஸ்காரர்கள் இங்கே யாரும் அந்தப் பெயரோடு உண்டா?

 

தியாகராஜ சாஸ்திரிகள் சொந்த சகோதரியை, மகளைப் பார்க்கும் பிரியத்தோடு கொச்சு தெரிசாவை நோக்கினார். இதெல்லாம் முன்பே திட்டமிடப்பட்டவை. அவருக்கு நடப்பது இப்படித்தான் என்று தெரியும்.

 

இந்தப் பெண்ணுக்குத் தன்னாலான உதவியைச் செய்ய வேண்டுமென்று அவருக்கு மனதில் பட்டது முதல் தடவை இல்லை என்று நிச்சயமாக நம்பினார் தியாகராஜ சாஸ்திரிகள். மூன்று நாள் முன்பே, நடுப் பகலில் திவசச் சாப்பாடு சாப்பிட்டு விட்டுத் தூங்கியபோது இந்தப் பெண்ணில் முகம், இவள் நிறையப் படி உள்ள மண்டபத்தினுள், படைக்கிற வெய்யிலில் படி ஏறி வருவதாகப் படிந்து இருந்தது.

 

தியாகராஜனின் அருமைச் சிநேகிதன் சின்னச் சங்கரனின் பிரியமான புரபசர் மருதையன் மாமா நேற்றுத் தியாகராஜன் அரசூர் குடும்ப வீட்டைக் கடந்து சைக்கிளில் போனபோது வாசலில் நின்றிருந்தார்.  அவர் இறந்து ரெண்டு வருஷம் ஆனாலும் சைக்கிளில் தியாகராஜன் அந்தப் பக்கம் போகும்போது வாசலில் உட்கார்ந்து செய்தித் தாள் படித்த படியோ, தெரு முனையில் இருந்து பச்சைப் பசேல் என்று சாளூர்க் காய்கறி வாங்கி வந்து கொண்டிருப்பவராகவும் அவர் தியாகராஜ சாஸ்திரிக்குக் கண்ணில் படுகிறார்.

 

சொரிய முடியாத இடத்தில் வந்த வேர்க்கூறு போல தியாகராஜனுக்கு எரிச்சல் தர வைக்கிற ஒரே பிரச்சனை என்ன என்றால், புரபசருக்கு நேரு என்ற பெயர் நாகப்பட்டணம் மிட்டாய்க் கடை நெய் ஜாங்கிரி சாப்பிடுகிறது போல் அவ்வளவு பிரியமானது. அந்தக் குல்லாக் கடன்காரனைத் துதித்துப் பரவசப்படும் கும்பலைக் கண்டாலே தியாகராஜ சாஸ்திரிகளுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. ஒரு பொக்கைவாய்க் கிழவனைப் பரவசத்தோடு துதிப்பதைக் கூட அவர் சகித்துக் கொள்வார். ஆனால் வழுக்கைத் தலையில் தொப்பி தரித்த காஷ்மீரப் பண்டிதரை அவரால் சுபாவமாகவே சற்றும் பொறுக்க முடியாது போனது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன