நேபாள மகாராஜா ராஜ மரியாதை செய்தால் நமக்கென்ன நோப்பாளம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கில் நாலாவது -அடுத்த சிறு பகுதி

 

அவரும் தன்னால் இயன்ற வரைக்கும் நேருவைப் பற்றி தனக்கு உசிதமான தகவல்களைப் பேப்பரில் படித்ததாகவும், புத்தகத்தில் படித்ததாகவும் சொல்லிப் பரப்ப முயற்சி செய்து வருகிறார். அவர் படிக்கிற புத்தகங்கள் காந்தி, நேரு, அந்த மனுஷனுடைய தகப்பன் மோதிலால் நேரு, விபின் சந்த்ர பால், தாங்குதூரி பிரகாசம் என்று நிறையப் பேரைச் சகல கெட்ட குணங்களுக்கும் துர்நடவடிக்கைகளுக்கும் ஊற்றுக்கண்ணாகவும் உறைவிடமாக விவரித்தாலும், மற்ற துஷ்டர்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், நேருவை முதலில் உண்டு இல்லை என்று ஆக்கி விடலாம் என்று தியாகராஜ சாஸ்த்ரிகள் சதா யோசித்தபடி இருப்பார். சமீபத்தில் செத்த கிராதகன் என்பார் அவர் ஜவஹரை.

 

புதுசாக நேரு விரோதத் தகவல் ஏதும் ஒரு மாதத்துக்கு வராவிட்டால் அவரே விடிகாலை எழுந்து காலைக் கடன் முடித்து, குளிக்கக் கிளம்பும் முன்னால் மேற்கு நோக்கி உட்கார்ந்து நேருவும் கவர்னர் ஜெனரல் சம்சாரமும் சிநேகிதமாக இருந்தது, கட்டிப் பிடித்தபடி ஃபோட்டோ எடுத்துக் கொண்டது, நேருவும் இன்னொரு பெண்பிள்ளையும் கை கோர்த்தபடி நடந்தது, வேறோடு பெண்ணோடு ஒரே சிகரெட்டை மாற்றி மாற்றிப் புகைவிட்டது என்று அதீத கிளர்ச்சி உண்டாக்கும் கதைகளை உண்டாக்கி விட்டு உடனே உடல் அசுத்தம் நீங்கக் குளித்து விடுவார். அந்த மாதிரி ஒரு ஐம்பது கதைகளைப் பரப்பி அதில் நான்கைந்து அவர் தேடி வாசிக்கும் புத்தகங்களில் கூட அச்சடித்து வந்ததில் தியாகராஜ சாஸ்திரிக்கு அலாதிப் பெருமை.

 

என்றாலும் இந்த நேரு லீலைக் கதைகளை உற்பத்தி செய்ய நிறையப் பெண்களை அந்த மனுஷரோடு பந்தப்பட்டவர்களாகக் கொண்டு வந்து நிறுத்த வேண்டியிருந்தது. இந்தி சினிமா நடிகைகள் பெயர்களைத் தெரிந்து மனதில் இருத்திக் கொள்ள லைபிரரியில் அபூர்வமாகத் தட்டுப்படும் ஆங்கில சினிமா பத்திரிகைகளைக் கருத்தோடு படிக்க வேண்டி இருந்தது. தமிழ் சினிமா நடிகைகள் பற்றிக் கற்பனை செய்யலாம் தான். ஆனால் இவ்வளவு தேக புஷ்டியுள்ள பெண்கள் நேருவுக்குப் பிடித்திருக்கும் என்று தியாகராஜ சாஸ்திரிகளுக்குத் தோன்றவில்லை. என்னதான் கதை என்றாலும் கதாபாத்திரத்துக்கு உகந்தது இல்லாததை அதுவும் ரதிக் கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் வலிந்து புகுத்துவது தவறாச்சே.

 

இந்தக் கதாநாயகிகள் பற்றிய விவரம் சேகரிப்பது தவிர, இந்த மாதிரி கேளிக்கைக் கதைகளைக் கட்டியமைக்கும்போது ஏற்படும் கிளர்ச்சி எவ்வளவு நேரம் வென்னீரில் குளித்தாலும் மனதை விட்டுப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தது. பச்சைத் தண்ணீரில் குளித்தால் போய்விடும் என்று தோன்றினாலும், அது பீனிசத்திலும் ஒற்றைத் தலைவலியிலும் கொண்டு போய் விடும் அபாயத்துக்கு, கிளர்ச்சி எவ்வளவோ தேவலை. சைக்கிளில் போகும் போதும் திவச வீட்டில் நுழையும் போதும் அது மனதில் அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள பதிமூன்றாம் வாய்ப்பாடை முழுக்க மனதில் சொல்வதை அவர் சீலமாகக் கொண்டிருந்தார்.

 

சிருங்கார நேரு வேண்டாம் என்று வலுக்கட்டாயமாக மனதில் ஒதுக்கி வைத்துக் கொலைகாரனும் சதிகாரனுமான நேருவைக் கற்பிக்கக் கொஞ்சம் எளிதாக இருந்தது. காந்தியில் தொடங்கி, ஏன் அவருக்கு முன்பே கோபால கிருஷ்ண கோகலேயில் ஆரம்பித்து எத்தனையோ தேசியத் தலைவர்களை ஒழித்துக் கட்ட நேரு சதி செய்ததாக அவ்வப்போது புத்தகத்தில் வந்த தகவல் என்று எடுத்து விடுவது சமயத்தில் அபாயகரமாகக் குடை சாய்ந்ததும் உண்டு.

 

வினோபா பாவேயை  நேரு கொன்றாரா, வினோபா இன்னும் இருக்காரே என்று கேட்டுப் பேய்முழி முழித்த டிஸ்ட்ரிக்ட் கோர்ட் அமீனா ஒருத்தனிடம் வாய்சாலகமாகச் சமாதானம் சொல்ல வேண்டிப் போனது –

 

இவ்வளவு சதி நடந்தாலும் அந்த மனுஷர் வினோபா சப்தரிஷி ஆசிர்வாதத்தால் பூர்ண ஆயுளோடு இன்னும் ஆரோக்கியமாக இருக்கார் போல. நேருக் கடன்காரனுக்கு சாவு பிஸ்டுலா வந்தாம், மகா அடைப்பு அது பின்னாடி பிருஷ்டத்துலே. வயறு வீங்கித்தான் போய்ச் சேர்ந்தது. உமக்குத் தெரியுமோ?

 

ஸ்வாமி என் மூலக் கடுப்பே வேஷ்டியில் ரத்தமாகக் கசிந்து கஷ்டப்படுத்துகிறது. நேருவுக்கும் எலிசபெத் மகாராணி புருஷனுக்கும் வேறே தீத்தாராண்டிக்கும் எங்கே எது வந்தால் எனக்கென்ன உமக்கென்ன என்று அங்கலாய்த்தபடி அந்தாண்டை போனான் அந்த அமீனா. ஆனாலும், யார் பெயரையும் நேருவுக்கு எதிர் வரிசையில் நிறுத்த கொலைச் சதிக் கட்டமைப்பு பயன்பட்டது. கதைகளைக் காற்றில் தூவி விடும் தியாகராஜ சாஸ்திரிகள் அதற்கான உத்தியைப் பற்றி மூச்சு விடுவதில்லை.

 

அது கிடக்கட்டும். என்ன தான் நேருப் பைத்தியமாக இருந்தாலும் புரபசர் மருதையன் நல்ல மனுஷன். கைலாச பதவி அடைந்து வருஷம் கழித்தும் அவர் தியாகராஜ சாஸ்திரிகளின் கண்ணைக் கட்டுகிற மாதிரி இன்னும் அரசூர்த் தெருவிலும் வீட்டிலும் தட்டுப் பட்டால் அவர் சாஸ்திரி மேல் வைத்திருக்கிற பேரன்பு புலனாகும். அப்படி வந்து அவர், இந்தப் பெண்ணுக்கு உதவி செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டபோது தியாகராஜ சாஸ்திரியால் தட்ட முடியவில்லை.

 

அவருக்கும் தியாகராஜனுக்கும் ஒரே ஒரு விஷயத்தில் ஒரே அபிப்ராயம் – செம்பு நீருக்குள் இருந்து நடத்துவதாகச் சொல்லப்படும் இந்த பஞ்சாபகேச சிரௌதிகளின் தினசரி கதைப் பிரசங்கம் தான் உண்டாக்கிய, நேருவும் யாரோ பெண்ணும் பங்கு பெறும் கதைகள் போல, அதைவிட நீளமாக முடியாமல் நீளும் விஷயம் என்று தியாகராஜ சாஸ்திரிகள் நினைப்பதுண்டு.

 

புரபசருக்கு அந்தக் கதையாடலைக் கூடச் சகித்துக் கொள்ள முடியும். சிஷ்ய கோடிகளின் பிரதாபங்கள் தான் அவரை எரிச்சல் படுத்தியவை.

 

நேபாளத்திலே இருந்து மகாராஜாவே பத்து வருஷம் முந்தி இங்கே நம்ம சிரௌதிகள் அண்ணாவைத் தேடி வந்துட்டா. ஆயிரத்தொண்ணு ஸ்வர்ண புஷ்பமும் ஐயாயிரம் ரஜத புஷ்பமும் காணிக்கை வச்சு, அண்ணா காலைப் பாலும் தேனும் ஊத்தி அலம்பி ரோஜாப்பூ க்ரீடம் வச்சு அவருக்கு கதாபிரசங்க சக்ரவர்த்தின்னு பட்டம் கொடுத்துட்டுத் தான் வேறே வேலை பார்க்க நகர்வேன்னு அவர் ஒரே பிடிவாதம் பிடிச்சார் பாருங்கோ அண்ணா பட்டம் எல்லாம் வேணாம்னுட்டார். பட்டம் கொடுத்தா கதை சொல்றதுலே சிக்கல் வந்து கதையோட பீமனும் கடோத்கஜனும் உள்ளே வந்துடலாம்னு அபிப்ராயப்பட்டார். அதுக்கு என்ன போச்சு, ரெண்டு கதையையும் ஜாயின் பண்ணிக்க ரெண்டு மூணு ஷண்டிங் பாயிண்ட் இருக்கேன்னு மகாராஜா கேட்டார். அதெல்லாம் ஆதிகவிக்கும் மத்தவங்களுக்கும் ப்ரீதி ஏற்படுத்தாத விஷயம்னுட்டார் ஸ்ரௌதிகள். .

 

இப்படி ஒரு பிரகிருதி எடுத்து விட, புரபசர் கடுப்பாகி அவனோடு மல்லுக்கட்டியதைச் சொன்னது தியாகராஜனுக்கு நினைவு வந்தது.

 

ஓய் நேபாள மகாராஜா வந்ததை நீர் பார்த்தீரா என்று புரபசர் அவன் வாய் நாற்றத்தையும் சகித்துக் கொண்டு சட்டையைப் பிடித்து உலுக்குகிற நெருக்கத்தில் நிற்க அந்த சோழப் பிரம்மஹத்தி ஸ்வரம் இறங்கி வளைத்து உருட்டி வார்த்தையால் ஜிலேபி பிழிந்தான் –

 

நேபாள மகாராஜான்னா மகாராஜா தானா? வடக்குலே இருந்து வர்ற முக்கியஸ்தர். மகாராஜாங்கறது ஒரு சீலம் தானே. வடக்குலே தெற்கை விட எல்லா சீலமும் கிரமமா அனுஷ்டிக்கறதாலே நேபாள மகாராஜாவே மரியாதை செய்யறவங்க யாரோ அவங்க மகாராஜாவுக்கு நேர் தானே.

 

மடியில் நாலு ஓட்டைக் காலணாவை முடிந்து கொண்டு வந்த யாராவது பேர்வழி கதையைச் சீக்கிரம் முடிக்கச் சொல்லி பட்டம் சூட்டுங்கய்யா என்று குரல் கொடுத்ததாகக் கேள்வி. அது தான் ஏகத்துக்குத் திரிந்து நேபாள மகாராஜா கதையாச்சு என்பார் புரபசர். அதுக்கு நமக்கென்ன நோப்பாளம் என்று நினைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தார் தியாகராஜ சாஸ்திரிகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன