ஜன சமுத்திரத்தில் நீந்தி, (காரை வாசலிலேயே அனுப்பி விட்டதால்) கல்பகோடி காலம் நடந்து புத்தகக் கண்காட்சியில் அறுபத்து மூவர் உற்சவத்தில் மாட்டிக்கொண்ட சம்சாரி போல சுற்றி வந்தேன்.
1) க்ளோஸ்ட்ரோபோபியா உள்ளவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய தலம் இந்த ஒய்.எம்.சி.ஏ கண்காட்சி.
2) பரபரப்பான ஸ்டால்களில் பில் போட்டுக் கொண்டிருந்த பையன்கள் ரொம்பக் கஷ்டப்படுகிறார்கள். கஸ்டமர்கள் வேறே கார்டை கெத்தாக நீட்டி.. தேய்த்துத் தேய்ந்து விரலே தேய்ந்து விடும். டிஸ்கவுண்ட் தப்பு என்று சண்டை போடுகிறவர்கள் அவ்வப்போது கண்ணில் பட்டார்கள்.
3) புத்தகம் வைக்க, பில் போட மேஜை இடவே இடத்தைக் காணோம். வாங்க வந்தவர்கள் உள்ளே போய் புரட்ட, திரும்ப சிரமம் அதிகம்.
4) பொது ஒலிபரப்பில் ‘தாம்பரம் தியாகராஜன் எங்கிருந்தாலும் கண்காட்சி அலுவலகம் வரவோம். அவர் மனைவி காத்திருக்கிறார்’ போன்ற அறிவிப்புகள். குழந்தைகள் சமர்த்து. காணாமல் போவதில்லை. கணவர்கள் தான் அசமஞ்சமாக புக்பேரில் தொலைந்து போகிறார்கள். பத்து ‘கணவர் வந்து சேரவும்’ அறிவிப்புகளுக்கு நடுவே, ‘கணவர் காத்திருக்கிறார், மனைவி எங்கிருந்தாலும் வரவும்’ ஒன்றே ஒன்று.
5) ப்ரபொஷனல் கூரியர்ஸ் ஸ்டால் போட்டிருப்பதால், புத்தகம் வாங்கி வெளியூருக்கு உடனே கூரியர் செய்ய வசதி.
6) அடுத்த வருடம் தீனிக் கடைகள் புத்தகக் கடைகளை விட அதிகமாக இருக்கும்.
7) காலச்சுவடில் (கண்ணன் கைக்கட்டோடு இருந்தார் – புத்தகம அடுக்கும்போது பலகை அறுத்துவிட்டது என்று சொன்ன நினைவு) மோகமுள் வாங்கினேன். கிழக்கில் ரெண்டு காப்பி விஸ்வரூபம் வாங்கினேன்.
8) சாகித்ய அகாதமியில் வழக்கமாகக் கிடைக்கும் அழுக்கு அட்டை மலையாள நூல்கள் மிஸ்ஸிங்
9) கும்பமேளா கூட்டம் போல் ஆணும் பெண்ணும் வழி நிறையத் தரையில் உட்கார்ந்திர்ந்தார்கள். பிளாஸ்டிக் நாற்காலி, அட் லீஸ்ட் முக்காலியாவது போடக்கூடாதா?
10) சர்க்கார் ஸ்டாலில் தான் ஆகக் குறைந்த விலை என்று நினைத்தால் தப்பு. ஆல் இந்தியா ரேடியோவில் பழைய கச்சேரிகள் (மதுரை மணி, ஆலந்தூர் சகோதரர்கள் ..) 190 ரூபாய்க்கு சிடி விற்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு மதுரை மணி போகவே கூடாது என்ற தீவிரம் தெரிகிறது. இசை மேதைகளின் கச்சேரி சிடிகளுக்கு சப்சிடி கொடுத்து பதினைந்து ரூபாய்க்கு விற்றால் என்ன குறஞ்சுடும்? பிரதிபா பட்டீல் கடைசி அரசாங்க பயணமா இங்கே இருக்கற செஷீல்ஸ் போக 28 கோடி ரூபாய் அழ முடியும்.. இதுக்கு முடியாதா?
**************************
புத்தகக் கண்காட்சிக்கு வெளியே சந்தித்த நண்பர் அரவிந்த் சுவாமிநாதனுக்கு நன்றி. ஆட்டோ பிடிக்கிற அவசரத்தில் கையில் பிடித்திருந்த துணிப்பையைத் திறந்து காட்டினார். ‘வாங்கிட்டேன் சார்’. விஸ்வரூபம்.
ஆன்லைனில் வாங்க முதலில் பதிந்த நண்பர் (எனக்குத் தெரிந்தவரை) ராம்குமார் நாராயணன். அவருக்கும் தேங்க்ஸ்.
அடுத்த நாவல் அச்சுதம் கேசவம் பிரதிகள் இவர்களுக்கு விலையின்றி வழங்கத் தீர்மானித்திருக்கிறேன்.