சிறு ரோகங்களோடும், மெனோபாஸ் கோபங்களோடும், தலைமுடிக்கான சாயத்தோடும் வயோதிகத்தில் அடியெடுத்து வைத்தவள்

சிறு ரோகங்களோடும், மெனோபாஸ் கோபங்களோடும், தலைமுடிக்கான சாயத்தோடும் வயோதிகத்தில் அடியெடுத்து வைத்தவள்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி இங்கே

அரசூர் நாவல்கள்

1.அரசூர் வம்சம்

2. விஸ்வரூபம்

3. அச்சுதம் கேசவம்

4.வாழ்ந்து போதீரே

 

= ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு

=========================================================================

ஒன்பது மணிக்கு வந்தவர் இரண்டாம் கட்ட ராணுவத் தலைவர். ஓங்கு தாங்காக வளர்ந்த கெச்சலான இளையவர். இன்னும் விடலைப் பருவம் நீங்காமல் முகம் முழுக்கப் பருக்களாக வெடித்து வாரிக் கிடந்தது. இந்த வயதில் ராணுவத்தில் தொடக்க நிலை உத்தியோகங்கள் தான் தரப்படுவது வாடிக்கை. இவன் செயற்கரிய செயல் ஏதாவது செய்து இந்தப் பதவி உயர்வு கிட்டியிருக்கலாம்.

கைகளை விறைப்பாக வைத்து அசையாமல் சிலை போல நின்றபடி இருந்தவனை உட்காரச் சொன்னாள் நந்தினி. பெயர் கேட்டாள், தன் சரித்திரத்தை இரண்டு நிமிடத்தில் மரியாதை விலகாத குரலில் ஒப்பித்தான் வந்தவன். அவன் சோபா நுனியில் விழுவது போல் உட்கார்ந்திருந்தான்.

 

இன்னும் பத்து வருடம் இந்த அமைதி நிலைத்திருக்கும் என்பது உண்மைதானா?

 

நந்தினி அவனிடம் விசாரித்தாள். அரசு ஆரூடக்காரர்கள் உறுதியாகச் சொன்னாலும் அவள் இன்னும் முழுக்க நம்பாத செய்தி அது.

 

பத்து வருடம் தான் அம்மா. பெரிய காலவெளி அது. பத்து வருடத்தில் என்னென்னவோ கடவுளின் சகோதரியின் அருளால் நடந்தேறுமல்லவா?

 

வந்தவன் கேட்டு விட்டு நந்தினியைப் பார்த்து மரியாதை விலகாது சிரித்தான். சொல்வதைக் கருணையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற யாசித்தல் அவன் பார்வையில் தட்டுப்பட, நந்தினி ஆமாம் என்கிறதாகத் தலையாட்டினாள்.

 

இந்த ஆப்பிரிக்க அரசு தாக்குப் பிடித்து இன்னொரு பத்து வருடம் ஆட்சியைத் தொடரலாம். பத்து வருடத்தில் அந்த நாடே உலக வரைபடத்தில் காணாமல் போகலாம். பத்து வருடத்தில், யார் கண்டது இங்கே இந்தக் கண்டம் முழுவதும் உண்மையான ஜனநாயகம் கூட ஏற்பட்டு விடலாம். நந்தினிக்கு இன்னும் பத்து வயது கூடி ஐம்பதுக்களில் சிறு ரோகங்களோடும், மெனோபாஸ் கோபங்களோடும், தலைமுடிக்கான சாயத்தோடும் அவள் வயோதிகத்தில் அடியெடுத்து வைப்பாள். அது நிச்சயமானது.

 

உன் பிரார்த்தனைகளைக் கூறு.

 

கடவுளின் மூத்த சகோதரி கீழ்ப்பட்டவர்களை விரிவாகப் பேசக் கோரும் மரபுப்படி கேட்டாள் நந்தினி.

 

அவன் பேசிக் கொண்டே போனான். கேட்பது தவிர குறுக்குக் கேள்விக்கு இடம் இல்லாத பேச்சு அது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன