வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து (நான்காம் நாவல் – அரசூர் நாவல் வரிசை)
எமிலி பிறந்த ஒரு வருடத்திலேயே சிறு சிறு அற்புதங்கள் நிகழ்த்த வல்லமை படைத்தவளாக இருந்து வருகிறாள். பள்ளியில் படிப்பதிலும், எறிபந்து விளையாட்டிலும் கூட ஆற்றல் மிகுந்தவள். பள்ளி நாட்களில் அற்புதம் நிகழ்த்தாமல் விடுமுறை தினங்களில் மட்டும் நடைபெற வைப்பதால் அவளுக்குக் கல்வியிலும் விளையாட்டிலும் இருக்கும் ஈர்ப்பும் அவற்றின் மேல் வைத்திருக்கும் மதிப்பும் புலனாகும்.
நினைத்த மாத்திரத்தில் கையில் இருந்து பூ இதழ்களை உதிர்ப்பது, சிறு நிலப்பரப்பில், அது சில சதுர அடிகள் பரப்பளவு கொண்டதாக இருந்தாலும் சரி, அந்த இடத்தில் மட்டும் மழை பொழிய வைப்பது, மழைக்கு நடுவே ஒரு சிறு இடத்தில் மட்டும் மழை இன்றி வைப்பது, நடக்கும் போது செவ்வெறும்புகள் குறுக்கிட்டால் அவை அனைத்தும் அப்புறம் போய் வரிசையாக அசையாமல் நின்று மரியாதை செலுத்தச் செய்வது போன்ற அற்புதங்களை எமிலி நிகழ்த்தி வருகிறாள். புற்றில் இருந்து ஈசல்களை வெளி வரச் செய்யும், பரவலாகக் கோரிக்கை வைக்கப்பட்டு நிகழ்த்தும் மற்றொரு அற்புதம் அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிவந்த ஈசல்களை அரிசி கலந்து வறுத்துத் தின்பதால் ஈசல் இல்லாத நாட்கள் வரும் என்பதாலேயே அந்தத் தடை. ஈசல் இல்லாத மழைக்காலங்கள் குறைந்த அதிர்ஷ்டம் தரக் கூடியவை அன்றோ.
வாசல் கதவு மறுபடி திறக்க, வெளியே நின்று கருத்து வடிவாகத் தடித்த வனப்புள்ள ஓர் இளம் பெண் அதிகாரி நந்தினியை வணங்கினாள்.
நீங்கள் கேட்ட சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்க வந்திருக்கிறார் என்று ஆண் அதிகாரி சொன்னார். என்ன சந்தேகம் என்று நந்தினிக்கு மறந்துவிட்டது. இந்தச் சிறுமியின் பெரிய தகப்பனார் பற்றி என்று அடியெடுத்துக் கொடுத்தபடி அவர் புதிதாக வந்த பெண் அதிகாரியைப் பார்க்க அவள் தலையைக் குனிந்து மீண்டும் வணங்கி உள்ளே வந்தாள்.
உள்ளறையில் பெண் அதிகாரி கண்கள் தரையை நோக்கி இருக்க மெல்லிய குரலில் நந்தினியிடம் கூறியது –
ஆணும் பெண்ணும் இணை விழைந்து ஈடுபட்டு முடிந்ததும் அவனால் வெளியேற முடியாமல் அவளுக்குள்ளேயே சிறை வைக்கச் செய்யும் மந்திரவாதத்தில் இந்தச் சிறுமியின் பெரிய தகப்பனார் வல்லவர். திருமணம் மீறிய உறவுகள் அதிகமாக இருக்கும் சூழலில், வேலி தாண்டி வெளியே போன ஆண்களை உடனே பிடித்து, மிக வலுவான தடயத்தின் அடிப்படையில் தண்டிக்க இதுவே சிறந்த வழி என்று நாட்டில் பலரும் எண்ணுகிறார்கள். அறுவை சிகிச்சை நடத்திக் கூட அவனைப் பிரித்து வெளியே எடுக்க முடியாது.
அந்தப் பெண் அதிகாரியை வாஞ்சையாகத் தோளில் தட்டி விடை கொடுத்தாள் நந்தினி. எழுந்த போது கண் இருண்டு வர, சுவரில் கை வைத்து அழுத்தியபடி. அங்கேயே நின்றாள்.
நந்தினியைச் சுற்றி இருளும் ஒளியும் கலந்து நிகழும் ஓவியமாகக் காட்சி விரிந்து கொண்டிருந்தது.
வைத்தாஸே, அடே வைத்தாஸே. ஜூஜூ மந்திரவாதம் செய்யப் போறேன். நீ வந்ததும் சிறைப் பிடிக்க வேணும். உடனே வந்து சேர். உள்ளே வந்த பின்னாடி நானாக விடுவிக்கும் வரை நீ திரும்பிப் போகவே முடியாது. அனுபவிக்கணும் வாடா கழிசடையே என் காது மடலைச் சுவைத்துக் காதல் செய்ய வா. உடல் சூட்டில் காட்டெறும்புப் புற்று சாம்பலாகட்டும்.
புகையோடு எழும் மாடிப்படி வளைவில் தோளில் குரங்குக் குட்டியோடு நின்றிருந்த பெண் நந்தினியைத் திரும்பிப் பார்க்கிறாள். பக்கத்தில் வைத்தாஸ் அந்தப் பெண்ணைக் காமம் நனைந்த குரலில் விளிக்கிறான் –
வீராவாலி வா. என் ரதியே, நான் மூழ்கிக் கரைய வா.
வீராவாலி என்ற அந்தப் பெண் மோகம் தலைக்கேறச் சிரிக்கிறாள். இருகை கொண்டு அவளைத் தூக்கி இடுப்போடு அணைத்து, அவளுடைய உடலின் வியர்வை மணத்தை ஆசையோடு முகர்கிறான் வைத்தாஸ்.
வைத்தாஸே திருடா, அந்த அழுக்குச் சிறுக்கி உனக்கு ரதியா? சீக்குப் பிடிச்சு நீ அழுகி உதிர்ந்து போகப் போறே.
வைத்தாஸ் சிரிக்கிறான். அவன் வீராவாலியின் மார்பகங்களை ஆசையோடு வருடியபடி சொல்கிறான் –
மன்னிக்கணும். நான் வைத்தாஸ் எழுதும் நாவலில் வரும் வைத்தாஸ். இவளோடு சுகித்துக் கிடப்பது தவிர, என்னைப் படைச்ச வைத்தாஸ் எனக்கு வேறு எந்த வேலையையும் தரலே.
அவன் சொல்லியபடி நிதானமாக, இருளில் கிடந்த மாடிப்படி ஏறுகிறான். மேல் படியில் நின்று திரும்பப் பார்க்கிறான். இறங்கி வருகிறான்.
குரங்குக் குட்டியை விட்டுட்டு வா.
வைத்தாஸ் படைத்த வைத்தாஸ் வீராவாலியின் தோளில் இருந்து குரங்குக் குட்டியை இறக்கி விட்டு அவள் இடையைத் தழுவிக் கொள்கிறான். குரங்குக் குட்டி அறைக்கு வெளியே ஓடுகிறது.
வைத்தாஸின் வைத்தாஸும் வீராவாலியும் நந்தினியின் கட்டிலில் சரிகிறார்கள்.
பின்னால் ரெட்டைக் கட்டிலில் ஆதி மனிதனும் மனுஷியும் வெறியோடு கலக்கும் வாடை அறையெங்கும் நிறைய, முன்னறைக்கு மெல்ல வந்தாள் நந்தினி. ராணுவ அதிகாரி மயக்கமடைந்து சோபாவில் கிடந்தார். ஒரு சதுர அடிப் பரப்பில் ரோஜாப் பூ வாசனையோடு அடர்த்தியான தூறல் விழுந்து கொண்டிருக்க, காத்திருந்த சிறுமி குரங்குக் குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.
காப்பி சாப்பிடலாம் வா.
நந்தினி அந்தப் சிறுமியை அருகில் அழைத்தபோது சுவரில் மாட்டியிருந்த ஓவியத்தில் இருந்த மயில் ஆட ஆரம்பித்திருந்தது