நேசமான மனைவி கணவனைப் பின் தொடர்வது போல் வாய்ப்பாட்டை வார்த்தை விடாமல் சொல்லிப் போகும் வயலின்

வாழ்ந்து போதீர் – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவதிலிருந்து

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

வாழ்ந்து போதீரே  அத்தியாயம்  இருபத்திரெண்டு –   

          

வைத்தாஸ் அறைக்குள் நுழைந்தபோது அங்கே சந்தன மணம் தூக்கலாக  வந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். கொத்தாகக் கொளுத்தி ஜன்னல் பக்கம் வைத்த ஊதுபத்திகளின் ஒட்டு மொத்த நறுமணம் அது. கூடவே, மேஜை மேல் வைத்த டேப் ரிக்கார்டரில் இருந்து தரன்னன்னா என்று நிறுத்தி நிதானமாக ஆனால் வார்த்தைகள் தெளிவில்லாமல் பாடும் ஓர் ஆண் குரல் ஒலித்தபடி இருந்தது. சுழலும் ஒலி நாடாவோடு அந்தக் குரலும் சுற்றி வளைத்து உயர்ந்து ஊதுபத்தி வாடையோடு சூழ்ந்து கொண்டிருந்தது. நெற்றியில் பட்டையாக வெண்பொடி தரித்த, தட்டுச் சுற்றாக வேட்டி அணிந்த அமைச்சர் முன், வைத்தாஸ் போல சூட் உடுத்த அதிகாரி ஒருவர் நாற்காலியில் தொடுக்கியது போல் உட்கார்ந்திருந்ததும் வைத்தாஸ் கண்ணில் பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, அறை நல்ல வெளிச்சமாக இருந்தது. இந்திய அமைச்சகங்களில் அமைச்சரின் அறைக்குள் முழுக்க இருள் பரத்திக் கொண்டு மடிப்பு மடிப்பாகத் தொங்கிக் கொண்டிருக்கும் துணித் திரைகள் பலவும் காணாமல் போயிருந்தன.

 

வைத்தாஸ் இந்த அறைக்குள் வந்திருக்கிறான். அது பதினெட்டு மாதங்களுக்கு முன் நடந்தது.. அதற்கு அப்புறம் தான் இங்கே ஒரே ஒரு முறை அமைச்சர் மாற்றமும், அவனுடைய சொந்த நாட்டில் பதினோரு தடவை அரசாங்க மாற்றமும் நடந்து விட்டிருந்தது. திரும்பவும் அதிகாரபூர்வமான தூதராகப் பதவியேற்று இங்கே இப்போது தான் வருகிறான். மாறித்தான் இருக்கிறது எல்லாம்.

 

அறையில் சந்தன மணமும் மற்றதும் தவிர, அமைச்சரின் மேஜையும் முன்னால் இருந்த திசைக்கு நேர் எதிரே பார்த்துப் போடப் பட்டிருந்தது. இந்தி எழுத்துக்கள் நிறைந்த கேலண்டரும், சுவரில் ஜவஹர்லால் நேரு படம் போட்டு இந்தியில் எழுதிய வாசகமும் காணோம். தென்னிந்தியக் கோவில் கோபுரம், இறகு விரித்து ஆடும் பறவை, அதை அணைத்துச் சாய்ந்திருக்கும், கையில் வேல் பிடித்த கடவுள் படம் என்று முழுக்க மாற்றம் தெரிந்தது. வட இந்தியாவில் இருந்து தெற்கு திசைக்கு நகர்ந்திருக்கிறது அந்த அறை.

 

வைத்தாஸ் நுழைந்ததும் அமைச்சர் எழுந்து நின்று கை கூப்பி வரவேற்றார். ஆறு அல்லது ஆறரை அடி உயரம் அவர். வைத்தாஸை விட ஒரு குத்து அதிகமாகவே நெட்டையாக வளர்ந்தவர். அவனை விட இளையவர். நெற்றி நிறையப் பூசி இருந்த வெண்பொடி மேல் அவசரமாக இட்ட கீற்றாகச் சிவந்த சிந்தூரம். அவர் மேஜையில் வாடிய வெற்றிலை நறுக்கில் அதுவே இருந்தது.

 

வருக, வருக என்று அன்போடு சிரித்தார் அமைச்சர். கூடவே எழுந்து நின்ற அதிகாரியும் வைத்தாஸைப் பார்த்துக் கை குவித்து வணங்கினார்.

 

வெளிநாட்டு தூதர்களை அமைச்சர்கள் சந்திக்கும்போது மூத்த அதிகாரிகளோடு சேர்ந்து அதை நிகழ்த்துவதை வைத்தாஸ் இங்கே கவனித்திருக்கிறான். அவர்கள் எல்லாருமே தலை நரைத்த அல்லது முழுக்க வழுக்கை விழுந்தவர்கள். ரிடையர் ஆகப் போகிறதை முகத்தின் சுருக்கங்கள் சொல்லும் வட இந்திய முதியவர்கள். கருத்த இந்த அதிகாரி நடுவயதில் அடியெடுத்து வைத்திருப்பான். வட இந்தியச் சாயல் இல்லாத அதிகாரிகள் இங்கே அபூர்வம் என்பதை வைத்தாஸ் அறிவான். நெற்றியில் தாராளமாக வெண்பொடி மூன்று பட்டைகளாகத் தரித்த அமைச்சரும், அதைச் சிறு கீற்றாகப் பூசியிருந்த மூத்த அதிகாரியும் தெற்கிலிருந்து வந்தவர்கள் என்பது வைத்தாஸுக்கு ஆச்சரியகரமான விஷயம். இவர்களுக்கு இந்தி தெரியுமா?

 

அறிமுகச் சடங்கு முடிந்த பிறகு அந்த அதிகாரி மறுமுறையும் எழுந்து நின்றார். வாடிய இலை நறுக்கை மேஜையில் இருந்து எடுத்து வைத்தாஸ் முன் நீட்டினார். வைத்தாஸ் அதில் இருந்து வெண்பொடியை எடுத்து நெற்றியில் அணிந்து கொள்ள எதிர்பார்ப்பு இருந்ததை உணர்ந்து கொண்டான்.

 

பழனி கோவில் சந்தனாதி வீபுதி. முருகன் கோவில் அது. உங்க ஊர்லேயும் முருகன் கோவில் இருக்குமே. மொரிஷியஸ்லே இருக்கு. போயிருக்கேன்.

 

அமைச்சர் ஏற்கனவே அறிந்ததை உறுதிப் படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு சொன்னார். ஒரு வினாடி வைத்தாஸ் தயங்க, முன்னால் நின்ற அந்த அதிகாரி மன்னிப்புக் கேட்கும் தோரணையில் சங்கடமாகச் சிரித்தார். சங்கரன் என்ற பெயருள்ளவர் அந்த அதிகாரி என்றும், அமைச்சகத்தில் சங்கரன் என்ற பெயருள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதால் இவர் சின்னச் சங்கரன் என்று அழைக்கப் படுகிறார் என்றும் அறிமுகமாகும் போது தகவல் சொல்லியிருந்தார் அமைச்சர்.

 

சின்னச் சங்கரனை மேலும் சங்கடமடையச் செய்ய வேண்டாம் என்று நினைத்த வைத்தாஸ் சங்கரன் போல் சிறு கீற்றாக அணிந்து கொண்டான்.

 

சரியாக வைத்துக் கொண்டிருக்கிறேனா திரு சின்ன சின்ன

 

அவனுக்கு அதிகாரியின் பெயர் அதற்குள் பாதி மறந்து போயிருந்தது. பெயரைத் தப்பாக உச்சரிக்கும் கெட்ட பழக்கம் வைத்தாஸின் நாட்டில் சபிக்கப்படுவதாகும். ஒவ்வொரு முறை அப்படித் தவறாக உச்சரிக்கப் படும்போதும், ஏற்படுத்தப்பட்ட மொத்த வாழ்நாளில் ஒரு நாள் குறைக்கப்படும் என்ற நம்பிக்கை வலுவாக அமைந்த நாடு அது. கடவுளின் மூத்த சகோதரி, வீட்டு முன்னறையில் ஆடும் பறவை போன்ற சமீபத்திய படிமங்கள் போல் இல்லாமல் வழிவழியாக வருகிற நம்பிக்கை இது. கடவுளின் மூத்த சகோதரி நந்தினியும், கடவுளின் மைத்துனனான வைத்தாஸும் நிகழ்கலையிலும் பாரம்பரிய ஓவிய முறையிலும் அற்புதம் கலந்த பிம்பங்களோடு காலக்கிரமத்தில் நிரந்தரப் படுத்தப்படலாம்.

 

உங்களை நான் எப்படி அழைக்க?

 

மரியாதையோடு வைத்தாஸ் கேட்க, சின்னச் சங்கரன் உதவிக்கு உடனே வந்தான்.

 

சங்கரன் என்றே கூப்பிடலாம்..

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன