வாழ்ந்து போதீரா நாவலின் அடுத்த சிறு பகுதி
இனிஷியல்கள் மட்டும் வைத்துக் குறிப்பிடுவது இங்கே வழக்கம் இல்லையோ?
ஆமாம். இனிஷியல்கள் மட்டும் போதும் என்றால் என்னைக் கழுதை என்று அழைக்கலாம்.
சங்கரன் சொல்லி விட்டுச் சிரிக்க அமைச்சரும் கலந்துகொண்டார்.
வைத்தாஸ் தான் ஏதும் தவறாகப் பேசிவிட்டோமோ என்று உள்ளார்ந்த பயத்தோடு மன்னிப்பு கேட்கும் தோரணையில் மறுபடி சங்கரனை வணங்கினான். இப்படி வணக்கமும் மறு வணக்கமுமாக இந்தச் சந்திப்பு முடிந்து விடும் என்று அவனுக்குத் தோன்றத் தொடங்கியது.
அரசூர் சுவாமிநாதன் சங்கரன் என்பதை ஏ எஸ் எஸ் என்று சுருக்கி, சூப்ரண்டெண்ட் ஏ எஸ் எஸ் கவனத்துக்கு என்று எனக்கு முன்பெல்லாம் குறிப்புகள் வரும்.
இன்னொரு அலை சிரிப்பு உயர்ந்து அடங்கி உட்கார்ந்த பிறகு தான் வைத்தாஸுக்கு நினைவு வந்தது. கையில் எடுத்து வந்த சரிகை ஆடையை அமைச்சருக்குப் போர்த்த மறந்து விட்டது. அவன் நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு அருகே பூக்கடையில் தென்னிந்தியப் பாணியில் அடர்த்தியாக ஜவந்திப் பூக்களை வைத்துத் தொடுத்த மலர் மாலைதான் வாங்கி எடுத்து வருவதாக இருந்தான். ஆனால் தூதரக உதவி அதிகாரிகள் தற்போதைய மோஸ்தரில் கதர் நூல் மாலையோ, சரிகைத் துண்டோ தான் கவுரவப் படுத்தத் தேவையெனத் தெரிவித்து சரிகைத் துண்டு வாங்கி வந்திருந்தார்கள்.
பொன்னாடையை அமைச்சருக்குப் போர்த்தி மரியாதை தெரிவித்ததும் சின்னச் சங்கரன் அதைத் திரும்ப வாங்க அமைச்சரிடம் கைநீட்டினான். இருக்கட்டும் என்று தடுத்த அமைச்சர் அதைப் போர்த்திய படிக்கே புன்சிரித்தார். பெண்மைச் சாயலைச் சற்றே பூசிய சரிகைத் துண்டு அது.
தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ் பேசும் மதராஸ் மாகாணத்தில் எங்கே போனாலும் சந்தன வாடைதான், சவ்வாது வாடை தான், உயர்ந்த சங்கீத வாடை தான். வாழ்க்கையில் உன்னத விஷயங்களை நேசிப்பவர்கள் நாங்கள்.
அமைச்சர் பெருமையோடு பொன்னாடையைத் தோள்களுக்கு மேல் இழுத்து விட்டுக் கொண்டு சொல்ல, சின்னச் சங்கரன் ஒரு சிரிப்போடு ஆமோதித்ததைக் கவனித்தான் வைத்தாஸ். அது மறுபடியும் சங்கடத்தோடு கூடிய சிரிப்பாக இருந்ததையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.
மரியாதை கருதி, இரண்டு கைகளையும் நாடக பாணியில் உயர்த்தி, தமிழ் பேசும் உங்கள் மாநிலம் பற்றி உலகமே அறிந்திருக்க உங்கள் மொழியும் கலாச்சாரமும் உயர்ந்த ரசனையுமன்றோ காரணம் என்று அரைக் கண் மூடிச் சொன்னான் வைத்தாஸ். அமைச்சருக்கு இந்தத் தூதனைப் பிடித்துப் போனது.
உங்கள் அறை இதமான இந்திய வாசம் பூண்டுள்ளது குறித்து வாழ்த்துகள் என்றான் வைத்தாஸ். ஒரு நாளைக்கு இருபத்துநாலு மணி நேரமும் சந்தனம் மணக்க, இந்த சங்கீதத்தைக் கேட்டபடி தான் தென்னிந்தியாவில் காலம் போகிறது என்று அவனுக்கு நம்பக் கடினமாக இருந்தாலும், அதில் ஈடுபட்டு, கொஞ்சம் பொறாமையும் கொண்டவனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே தற்போது செய்ய வேண்டியது என்று உணர்ந்தான் வைத்தாஸ்.