வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலின் அடுத்த சிறு பகுதி
உங்கள் நாட்டில் இருந்து ஒரு நாட்டியக் குழு உடனே வர முடியுமா?
அமைச்சர் ஆவலோடு விசாரித்தார்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக அரசியலில் நிச்சயமற்ற நிலை காரணமாக வைத்தாஸின் நாட்டில் இலக்கியமும் கலையும் கலை வெளிப்பாடும் சீர்குலைந்த நிலையில் தற்போது உள்ளதை வருத்தத்தோடு தெரிவித்தான் வைத்தாஸ். அடுத்த ஆண்டு நிலைமை சீரடைந்து விடும். அப்போது சகல கலைஞர்களையும் கூடவே அழைத்து வருவதாக வாக்குத் தத்தம் செய்தான்.
அமைச்சர் தங்கள் நாட்டுக்கு விரைவில் வருவார் என்று நம்பிக்கையும் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டான் வைத்தாஸ்.
அழைப்புக்கு நன்றி, அவசியம் வருகிறேன்.
அமைச்சர் உற்சாகமாக அறிவித்தார்.
வைத்தாஸுக்குக் கதவு திறந்து விட அவரே அறை வாசல் வரை அதிகாரி சகிதம் வந்தார். ஒரு வினாடி கதவைப் பிடித்துக் கொண்டு நின்று குரல் தாழ்த்தித் தரன்னன்ன இசையோடு இழைந்து சொன்னார் –
உங்கள் நாட்டு மந்திரவாதிகளையும் எங்கள் பக்கத்து மந்திரக்காரர்களையும் கூடிப் பேச விடலாமே. அங்கேயும் வைத்தியர்கள் மந்திரவாதம் செய்வார்களாமே.
அமைச்சர் திடீரென்று கேட்க அதிகாரியும் வைத்தாஸோடு சேர்ந்து ஆச்சரியம் காட்டினான்.
நாள் முழுக்க கலவியில் ஈடுபட மூலிகை மருந்துகளையும் மந்திர உச்சாடனங்களையும் ஆக்கித் தரக்கூடிய உங்கள் ஊர் மந்திரவாதிகளை நான் அங்கே வரும்போது சந்திக்க ஆசை. அது மட்டுமில்லை. கள்ளக் கலவியில் ஈடுபடும் ஆணை பெண்ணுக்கு உள்ளேயே சிறைப் பிடித்து வைக்க மந்திரம் செய்வார்களாமே உங்கள் நாட்டில். அப்படி ஒரு நிகழ்வையும் பார்க்க ஆசை.
அவர் குரலை திடீரென்று சற்றே உயர்த்தி, விரல்களைக் கத்தரிக்கோல் போல் அசைத்து அபிநயித்துக் கள்ளச் சிரிப்போடு தொடர்ந்தார் –
மந்திரம் போட்டு யாராவது உதிரச் செய்து விடுவார்கள். எதற்கும். உபரியாக இரண்டு குறிகளைக் கைப்பையில் பத்திரமாக வைத்து எடுத்து வர உத்தேசம்.
அமைச்சரின் சிரிப்பு வைத்தாஸ் லிஃப்டில் நுழையும் வரை கேட்டது.