வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது-அடுத்த சிறு பகுதி
ஜாக்கிரதையாக பாதிரியாரின் நலம் விசாரிக்க, கன்னத்தில் குழி விழச் சிரித்த கொச்சு தெரிசா என்ற அழகுப் பெண் சொன்னாள் –
அமேயர் பாதிரியாருக்கு வாடிகன் மாநகரில் போப்பரசருடைய புனித வசிப்பிடத்தில் தங்கி இருந்து தேவ ஊழியம் செய்ய வாய்ப்புக் கிடைத்து இத்தலி போக இருக்கார். இனி திரும்ப இங்கிலாந்தோ இங்கேயோ வருவாரான்னு தெரியலை. பிதாவுக்கு ஸ்தோத்திரம்.
அவசரமாகத் தன் மார்பில் குரிசு வரைந்தான் சங்கரன். பக்கவாட்டில் நகர்ந்த கை அவளுடைய திரண்டெழுந்த நெஞ்சில் இடித்ததைத் கொச்சு தெரிசா கவனிக்கவில்லை. சங்கரன் மயில்களின் உலகத்தில் மிதந்தான்.
உங்க மனைவி ஒரு இனிய பெண்மணி.
புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வந்தாள் கொச்சு தெரிசா. வசந்திக்குச் சொன்னால் சந்தோஷப் படுவாள். அவள் இல்லாததால் தான் பார்வையும் கவனமும் இப்படி அந்நிய ஸ்திரி பேரில் கள்ளக் கண்ணாகவும் இனிப்பு தடவிய வார்த்தைகளாகவும் பொழிகிறது. பிடார் ஜெயம்மா இருந்தால் கண்டிப்பாள்.
உங்கள் மனைவி போல, பொட்டு வைத்தால் அழகுக்கு அழகு செய்யும் வேறே ஒரு முகத்தைப் பார்த்ததில்லை என்றாள் தொடர்ந்து கொச்சு தெரிசா. வசந்தியை வாழ்த்திப் பாடி சங்கரன் மனதில் இடம் பிடிக்க என்ன தேவை அழகுப் பெண்ணே? உன் அண்மையும் குரலும் சிரிப்புமே போதாதோ. சங்கரன் வியந்தபடி, மறுபடி காற்றில் சிலுவை வரைய சந்தர்ப்பம் நோக்கியிருந்தான்.
அவள் வைத்திருந்த மஞ்சள் குறும் பொட்டு சங்கரனுக்குள் போதையை மெல்ல ஏற்றிக் கொண்டிருந்தது. அவன் குறும்பாகப் பதில் சொல்ல வேண்டிய நேரம் இது. பேச்சு மூலமே இந்த நட்பு வலுவாக இறுகட்டும்.
பொட்டு வைக்கும் எல்லாப் பெண்ணுமே அழகுதானே என்று அவள் கண்ணைக் கூர்ந்து பார்த்து சங்கரன் சொல்ல கொச்சு தெரிசா லயிப்போடு சிரித்தாள். வீடு விட்டுத் தனியாக வந்த அதிகாரி. கம்பீரமாக இருக்கிறவன். நிச்சயம் கொச்சு தெரிசாவுக்கு உதவி செய்வான். அதற்கு மேலும் செய்யக் கூடும்.
ஒரு வருஷமாக இங்கே என்ன செய்யறீங்க?
உண்மையான ஆர்வத்தோடு சங்கரன் கேட்டான். இந்த ஊரும் கோவிலும் என்னை ஈர்த்து இங்கேயே இருந்து விடச் சொல்லுது என்றாள் கொச்சு தெரிசா.
வேறே எங்கேயும் போகலையா என்று விசாரித்தான் சங்கரன்.
பந்தலில் இருந்து உரத்த குரலில் அர்ஜுன நிருத்தத்துக்கான பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. மேடை பக்கவாட்டில் இருந்ததால் சங்கரன் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தே நடனக் கலைஞர்களின் அசைவைப் பார்க்க முடிந்தது.
தமிழ் பேசுகிற பிரதேசம் முழுக்கப் போய் வந்தேன். என் கொள்ளுப் பாட்டனார் தமிழில் இயற்றின ஏசு கீர்த்தனைகளைப் புத்தகமாக்க முயற்சி செய்யறேன். கூடவே இன்னொரு நல்ல காரியமும் இப்போ ஏற்பட்டிருக்கு
அவள் சொல்லும்போது மேளங்களின் கூட்டமான ஓசை வெளியை முழுக்க நிரப்பி அதிர்ந்தது. கொச்சு தெரிசாவும் சங்கரனும் ஒன்றும் பேசாமல் பக்கவாட்டில் திரும்பி ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபடி அருகருகே அமர்ந்திருந்தனர்.
அர்ஜுன நிருத்தமாக ஒரு முதிய ஆண் கலைஞர் ஆடிக் கொண்டிருந்ததை சங்கரன் பார்வை பதித்து நோக்கத் கொச்சு தெரிசா மீண்டும் பேசினாள் –
கொஞ்சம் வித்தியாசமான உடுப்பு இல்லையோ, வெறும் மயில்பீலியை மட்டும் கோர்த்து உடுத்துக்கிட்டு?
கொச்சு தெரிசாவுக்கும் மேடை கண்ணில் பட்டிருக்கிறது. அவனிடம் குறும்பான பதிலை மீண்டும் எதிர்பார்க்கிறாள் என்று பரபரப்பான நரம்புகள் மூளைக்குச் சேதி சொல்லிக் குதித்தன.
ஆமா, தோகை உதிர்ந்து விழுந்தால் கஷ்டம் தான். அதுதானா என்னமோ, பெண்கள் இந்த நடனத்தை ஆடுவதில்லை. உடுத்தி வந்தா ஒரு அழகு. உதிர்ந்து விழுந்தா இன்னொரு அழகு. எனக்கு ரெண்டும் பிடிக்கும். அனுபவிக்கத்தான் கொடுப்பினை இல்லை.
May 18 2024