உடுத்தியதில் ஒரு சிறகு உதிர்ந்தால் ஒரு அழகு, ஆடும்போது உ;டலில் ஒட்டி இருந்தால் வேறொரு அழகு

வாழ்88ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியின் நான்காம் புதினம். அதிலிருந்து –

, தோகை உதிர்ந்து விழுந்தால் கஷ்டம் தான். அதுதானா என்னமோ, பெண்கள் இந்த நடனத்தை ஆடுவதில்லை. உடுத்தி வந்தா ஒரு அழகு. உதிர்ந்து விழுந்தா இன்னொரு அழகு. எனக்கு ரெண்டும் பிடிக்கும். அனுபவிக்கத்தான் கொடுப்பினை இல்லை.

 

May 18 2024

அவன் முகத்தை நாலு கிலோ பனை நுங்கு மேலே அழுத்தும் நிதானத்தில் நிறுத்திச் சொன்னான். கண்கள் சிக்கென்று உடுப்பு இடையில் பொருந்தி மார்பை உயர்த்திக் காட்டும் அவளுடைய வனப்பில் ஈடுபட்டுத் தரை தாழ்ந்தன.

 

அவள் சிரித்தாலும் அந்த பதிலைத் தான் அவனிடம் எதிர்பார்த்தாள் என்று சங்கரனுக்குத் தெரியும். கொச்சு தெரிசா சண்டை போட வந்தவள் இல்லை. அவள் உரக்கப் புகார் சொல்லிக் கொண்டு வந்தது? என்னோடு உடல் கலக்க வா என்று பெண் மயில் தாபம் தழைத்தேறிய குரல் கொண்டு அகவித் தோகை இல்லாமல் ஒய்யாரமாக நடந்து இணையை அழைப்பது போலத் தானோ?

 

எதுவோ இருக்கட்டும். இன்னும் கொஞ்சம் அவளைப் பேச வைக்க வேணும்.

 

சரி, அப்புறம் எங்கே எல்லாம் போனீங்க?

 

அப்புறம் நாங்க அரசூர் போனோம் என்றாள் கொச்சு தெரிசா. சங்கரனுடைய மனம் அர்ஜுன நிருத்தமாகத் துள்ளியது. மனதைச் சுற்றி உடுத்த நாசுக்கும் ஜாக்கிரதையுமான மயிற்பீலி உதிரட்டும். சங்கரனுக்காக விடிந்த நாள் இது.

 

நீங்க ஏன் பந்தலில் இல்லாமல், இங்கே இருக்கீங்க? கொச்சு தெரிசா விசாரித்தாள். உன்னோடு தனியாக இருக்கத்தான் என்று அதிரடியாகப் பதில் வந்தால் என்ன சொல்வாள்? மத்திய சர்க்கார் அமைச்சரக உயர் அதிகாரி அப்படிச் சொல்ல முடியாது. இந்தியில் பேச வைக்கவே விடாப்பிடியாகக் கேள்வி  கேட்கிறவர்களுக்குப் பதில் தரும் போது அப்படிச் சொல்லலாம் தான். அவர்கள் மொழியைப் பற்றித்தான் கவலைப் படுவார்கள். பதிலை இல்லை.

 

பந்தலில் ஒலிபெருக்கி இரைச்சல் மறுபடி எழுந்தது. தொடர்ந்து கணீரென்ற குரல் –

 

இப்போது மாலை நாலு மணி. ஏழு மணி வரை நாட்டுப்புறக் கலைகள் பற்றிய முதல் நாள் கருத்தரங்கு நடக்கும். இன்றைய கலை நிகழ்ச்சிகள் ஏழு மணி முதல் இரவு பத்து வரை தொடரும். மான்ய மந்திரிஜி கிருஷ்ணன் நீலகண்டான் அங்ஙேயையும், மான்ய மந்திரிஜி கோட்டைச்சாமி அத்தேஹத்தையும் நிகழ்ச்சியை நடத்தித் தர அன்போடு மேடைக்கு அழைக்கிறேன்..

 

இந்த அறிவிப்பைச் செய்தது திருவனந்தபுரம் செக்ரெட்டேரியட்டில் முக்கிய அதிகாரியான வெர்கீஸ் சாண்டி. சங்கரனோடு மதுரைக் கல்லூரியில் கூடப் படித்தவன். சாண்டி மூலம் தான் கொச்சு தெரிசாவுக்கு தங்குமிடம் பார்க்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எரணாகுளம் வரைக்கும் தேடச் சொல்லியிருக்கிறார்கள் மினிஸ்டர் கிருஷ்ணன் மற்றும் கோட்டைச்சாமி.

 

கிருஷ்ணன் நீலகண்டான் என்று சாண்டி அழைத்தது சங்கரனுக்கு வினோதமாக இருந்தது. நீலகண்டான் இல்லை நீலகண்டன் என்று குறுக்கச் சொல்லித் தரலாம் தான். சாண்டி அதை அப்படியே பிரயோகித்து கோட்டைச்சாமியையும் குறுக்கிக் கொட்டைச்சாமி ஆக்கி விடக் கூடும்.

 

இதில் யார் உங்க மினிஸ்டர்? நீல நீல

 

கொச்சு தெரிசாவின் புன்னகையில் ஒரு வினாடி மயங்கிய சங்கரன் நிலைப்படுத்திக் கொண்டு அவர் இல்லை இவர் என்றான் கை சுண்டி. அவள் பார்க்க சிரமப்பட்டு எம்பிப் பார்க்க, சட்டென்று கொச்சு தெரிசா கையைப் பற்றி சரியான திசையில் விரல் நீட்ட வைத்தான். மனசு லகரியில் மிதந்து கொண்டிருந்தது.

 

கிருஷ்ணன் பேச ஆரம்பிக்கும்போது ஆகிருதியான ஒரு நடுவயதுப் பெண் அவர் பக்கத்தில் நெருங்கி நின்று லெதர் அட்டையில் பொதிந்த ஒரு டயரியையோ, புத்தகத்தையோ அவரிடம் கொடுத்தாள். சாண்டி உடனே மைக் உயிர்த்திருப்பது கருதாமல், சொன்னது –

 

திருமதி கிருஷ்ணன், நீங்களும் மேடையில் அமரலாமே. அர்ஜுன நிருத்தம் ஆராய்ச்சிக் கட்டுரையை அடுத்து நீங்கள் தானே படிக்கப் போவது?

 

மினிஸ்டர் கிருஷ்ணன் தேவைக்கு அதிகமான பரபரப்போடு எழுந்து இவர் காரியதரிசி என்று விளக்கம் சொன்னது அணைக்காத மைக் மூலம் கேட்டது.  விழா ஏற்பாடுகளை முன்கை எடுத்துச் செய்த சியாமளா கிருஷ்ணன் எதுவும் பேசாமல் எழுந்து கலாசார ஆய்வு மையக் கட்டடத்துக்குள் கோபமும் அழுகையுமாக வந்து நுழைந்ததை கொச்சு தெரிசாவும் சங்கரனும் பார்த்தார்கள்.

 

கொச்சு தெரிசா எழுந்து நின்று மரியாதை தெரிவிக்கும் முன், சியாமளா தன் அறைக்குள் கதவடைத்துப் போய்விட்டாள். கொச்சு தெரிசா சங்கரனை என்ன விஷயம் என்று பார்வையால் கேட்க, அவன் அரைச் சிரிப்பும் ஒரு கண் சிமிட்டலுமாக மேடையிலும் அறையிலும் கண் பரத்திச் சேதி சொன்னான். கொச்சு தெரிசாவுக்கு அவன் நெருங்கி வந்து கொண்டிருந்தான் என அவளுடைய கள்ளச் சிரிப்பு சொன்னது.

 

ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டின் தூதுவரும் சிறந்த ஆங்கில எழுத்தாளருமான வைத்தாஸ் இக்வனோ ரெட்டி இப்போது ஆப்பிரிக்க, ஆசிய மக்கள் நிகழ்கலை வெளிப்பாடுகள் பற்றி உரை நிகழ்த்துவார்.

 

சாண்டியின் குரல் அழைக்க, போய்த்தான் கேட்போமே என்று தோன்றியது சங்கரனுக்கு. கொச்சு தெரிசாவை விட்டு எங்கும் போகப் போவதில்லை அவன்.

 

அரசூரில் அவள் தன் வீட்டைப் பார்க்கப் போனதையும், தியாகராஜ சாஸ்திரி உதவியால் மதுரைப் பண்டிதரச் சந்தித்ததையும் கொச்சு தெரிசா சொல்ல, சுவாரசியம் குன்றாமல், இடைவெட்டாமல் கேட்டபடி இருந்தான் சங்கரன்.

 

இதைப் பார்த்தீர்களா?

 

கொச்சு தெரிசா தோளில் மாட்டி இருந்த பையில் இருந்து எடுத்து நீட்டிய வம்சாவளி கூறும் குடும்ப மரங்களின் படங்களை நம்ப முடியாத ஈர்ப்போடு பார்வையிட்டான் சங்கரன்.

 

கடைசி படத்தில் வம்சாவளி கூறும் மரத்தின் வலப் பகுதி இறுதிக் கண்ணியாக கொச்சு தெரிசா முசாபர் என்ற பெயரைக் காட்டி இது நான் என்றாள் கொச்சு தெரிசா. இடப் பகுதி இறுதிக் கண்ணியாக அரசூர் சங்கரன் கொள்ளுப் பேரனும் அரசூர் சாமிநாதன் மகனுமான சின்னச் சங்கரன் என்ற பெயரில் தொட்டு இது நான் என்றான் சங்கரன்.

 

அதிசயங்கள் நிகழ்வது சகஜமென்பது போல் கைதட்டல் சத்தம் ஆர்பரித்துக் கொட்டி முழக்க, மின்சாரம் தடைப்பட்டது. இருட்டில் கொச்சு தெரிசாவின் தோளில் பற்றிய கரத்தை அவள் எதிர்பார்த்துக் கன்னம் பதித்துத் தோளோடு இறுக்கிக் கொண்டாள். அந்த அண்மை அவளுக்கு வெகுவாக வேண்டியிருந்தது.

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன