வாழ்ந்து போதீரே -அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி
கொச்சு தெரிசா மேல் இருந்து வந்த மெல்லிய யுதிகோலன் வாடை சங்கரனுக்குப் பிடித்திருந்தது. இங்கிலாந்தில் மீன் பஜ்ஜி விற்கிற பெண். அழகானவள். அவனுக்கு உறவு வேறு. அவனை ஈர்க்கிறவள். அவனால் ஈர்க்கப்படுகிறவள். தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட மோகம் அது. தானே வந்து கவிவது. பற்றிப் பிடிக்கக் காத்திருந்த மாதிரி மழை நாளில் மேலோங்கி எழுகிறது. அவனுக்கு வேண்டியிருக்கிறது. அவளுக்கும்.
இங்கே இருந்து, கடலோரமாகப் படகில் போகலாம் என்று சொன்னார்களே. யாரையும் காணோமே.
கொச்சு தெரிசா விசாரிக்க, சங்கரன் சிரித்தான். உறங்கிக் கிடந்த போது எல்லோரும் எழுந்து, குளித்துப் பசியாறிப் படகுத் துறைக்குப் போயாகி விட்டது. திரும்பப் படகு வந்து அழைத்துப் போகாது.
படகு இங்கே வராவிட்டால், நாம் அதைத் தேடிப் போனால் என்ன?
தீர்வு கண்ட நிம்மதியோடு கொச்சு தெரிசா சங்கரனிடம் கேட்டாள்.
இங்கே சும்மா மோட்டுவளையையும், மழையையும் பார்த்துக் கொண்டு இருப்பதைவிடப் படகு தேடிப் போவது சுவாரசியமானதாகவே இருக்கும் என்று சங்கரனுக்குப் பட்டது. ஆயுசில் எத்தனை தடவை இப்படிப் படகையும் ஓடத்தையும் தேடி, ஓர் அழகான கருத்த பெண் கூட வர நடக்கக் கொடுத்து வைத்திருக்கிறது?
வரு பூவாம் என்றான் சுமாரான மலையாளத்தில். அவளை மரியாதை விலக்கி உரிமையோடு ஒருமையில் விளித்து, அதைச் சந்தோஷமாகத் தெரியப்படுத்திச் செயல்படுவது இந்த வினாடியில் அவனுக்கு உகந்த செயலாக இருந்தது.
கோவிலைக் கடந்து கொஞ்ச தூரம் போனால் படகுத்துறை வரும் என்று யாரோ எப்போதோ சொன்னது சங்கரன் நினைவில் உண்டு. அது கொஞ்ச தூரமாக இல்லாவிட்டாலும் சரிதான். இவளோடு நடக்கவும், பேசவும் நேரம் கிடைக்கிறதே.
தூறல் சிறுமழையாக அடர்ந்து கொண்டு வந்தது. கொச்சு தெரிசா கையில் எடுத்து வந்திருந்த பூப்போட்ட குடையை விரித்தாள். சங்கரன் குடைக் கம்பி மேலே படாமல் விலகி நடக்க, மழை இன்னும் வலுத்தது.
கொச்சு தெரிசா குடையை சங்கரனிடம் கொடுத்து விட்டு அவனுக்கு இன்னும் அருகில், குடைக்குக் கீழ் நடக்கத் தொடங்கினாள். சங்கரனுக்கு இது போதும் இப்போது.
போட் ஜெட்டி என்று இங்கிலீஷிலும், கீழே படி பொண்டன் என்று பிரஞ்சிலும் அதன் கீழ் மலையாளத்திலும் எழுதிய பலகை வைத்த இடம். வலது புறம் காட்டும் கை இங்கிலீஷிலும், இடது வசம் சுட்டும் கை பிரஞ்சிலும் வரைந்திருந்தது. மலையாளத்தில் கைக்கு இடமில்லை.
இங்கிலீஷோடு போவோம் என்று கொச்சு தெரிசாவிடம் சொன்னான் சங்கரன். அவன் நினைத்தபடி அந்தப் பாதை காயலோரமாக, படகுத் துறையில் முடிந்தது.
எல்லாப் படகும் காயலோடு போயிருக்க, வெறுமையாகக் கிடந்த துறையில் சங்கரனும் கொச்சு தெரிசாவும் நின்றபோது மழை விடை பெற்றுப் போயிருந்தது. படகுத் துறைக்காரன் இவர்களைப் பார்த்து நின்றான்.
சங்கணாச்சேரி படகுக்கு வந்தீங்களா?
மரியாதை விலகாமல் சங்கரனைக் கேட்க அவன் இல்லை என்றான்.
காயலில் கொஞ்ச நேரம் போய் விட்டு வரலாம்னு நினைச்சேன்.
அதுக்கென்ன? போகலாமே என்று படகுத்துறைக்காரன் சிரித்தான்.
போகலாம்னா, தண்ணீரிலே நடந்தா போகணும்?
கொச்சு தெரிசா கற்றுக் கொண்டிருந்த மலையாளத்தில் கேட்க, அதெதுக்கு என்றான் படகுத்துறைக்காரன்.
வர்க்கீஸேட்டன் படகு வர ரெடியா இருக்கு. இன்னிக்கு காயல்லே போக வேணாம்னு காலையிலே சொன்னான். ஒரு மணி நேரத்துலே முடிவை மாத்திக்கிட்டான். குடிக்க காசு குறையுதாம். வாங்க. புண்ணியமாகும்.
பெருக்கெடுத்து ஓடும் காயலின் கரையில் நின்று அவன் குரல் கொடுத்தான். கூவென்று கூவும் குரலாக வர்க்கியேட்டனுக்குப் போகும் அழைப்பு. கொதும்பு வள்ளம் என்ற சிறு ஓடமும், சரக்கு கொண்டு போகும் படகு ஓட்டுகிறவனும், வலை காயப் போட்ட மீனவனும் ஏற்று வாங்கி எதிரொலிக்க, அது நாலைந்து முறை துறை முழுக்க எதிரொலித்துக் கடந்தது.
அப்புறம் குருவி சலசலக்கும் ஓசையும் மரங்கொத்தியின் இடைவிடாத கூச்சலும் ஒலிக்க, அவற்றோடு சேர்ந்து தொலைவில் இருந்து தேய்ந்து ஒலிக்கும் குரல் ஒன்று.
வரும் ஒலியை மகிழ்ச்சியோடு செவிகொடுத்தவன் தலையசைத்துச் சொன்னான் –
வந்துக்கிட்டிருக்கான்.