வாழ்ந்து போதீரே -நான்கு நாவல் அரசூர் தொகுப்பில் நான்காம் நாவலிலிருந்து அடுத்த ஒன்று\
அவன் சொல்லிப் பதினைந்து நிமிடம் சென்று அழகான நெட்டி, மற்றும் சன்னமான மர வேலைப்பாட்டோடு ஒரு படகு வீடு கம்பீரமாக மிதந்து வந்து படகுத் துறைப் பலகைக்கு அடுத்து நின்றது.
ஏறிக் கொண்டார்கள். அடுத்த மழை ஆர்ப்பாட்டமாக நானும் வருகிறேன் என்று சேர்ந்து கொண்டது.
படகு புறப்பட்டபோது படகுக்காரன் சங்கரனையும் கொச்சு தெரிசாவையும், கூரை இறக்கி வேய்ந்த படகின் அமரத்தில் இட்டு வைத்திருந்த நாற்காலிகளில் ஓய்வாக உட்காரச் சொன்னான்.
மழை அடர்ந்த காயலையும், காயல் நிறம் பகர்த்திய மழையையும் எந்தக் குறுக்கீடும் இன்றி பார்த்துக் கொண்டே பொழுதைக் கரைக்க அந்தப் படகு முனை தவிர வேறே இடம் இருக்க முடியாது.
இந்த நாள், இந்த நிமிடம், இந்த நொடி ஏற்கனவே நிச்சயப்படுத்தியபடி உருவாகிக் கடந்து போகிறது.
கொச்சு தெரிசா தனக்குள் சொல்லிக் கொண்டாள். யார் நிச்சயித்தபடி என்று தெரியாது. கயிற்றில் ஆடும் தோல்பொம்மைகளாக இயங்குவது தவிர அவளுக்கும் சின்னச் சங்கரனுக்கும் இப்போது வேறே காரியம் ஏதும் இல்லை.
அவள் மனதை எதிரொலிப்பது போல் பார்த்த சங்கரன் அவள் அருகே நெருங்கி அமர்ந்து கையைப் பற்றிக் கொண்டான். அவனுடைய வெப்ப மூச்சு அவளுக்குப் பரிச்சயமாகி இருந்தது.
இதெல்லாம் சரிதானா? இல்லாவிட்டால் தான் என்ன? கொச்சு தெரிசா சங்கரனையே பார்த்தபடி இருந்தாள். முசாபர் ஒரு வினாடி அவள் நினைப்பில் எழுந்து காயல் அலைகளில் கலந்து காணாமல் போனான்.
காயல்லே மழை காலத்தில் படகு விட்டுப் போகிறது பற்றி எங்க தீபஜோதிப் பாட்டி சொல்லியிருக்காங்க.
அவள் உற்சாகமாகச் சொன்னாள். சங்கரன் அவளையே பார்த்தபடி இருந்தான். நீர்த் தாவரம் எதுவோ படகோடு வருவதைப் பார்த்து விட்டு மறுபடியும் தலை உயர்த்தினாள் கொச்சு தெரிசா.
தீபஜோதி பாட்டித் தள்ளை, எங்க கிரான்மா. இவங்க தான்.
ஃபேம்லி ட்ரீ படத்தைக் கைப்பையில் இருந்து எடுத்து அவன் விரல்களோடு பிணைந்திருந்த தன் கை கொண்டு படத்தில் சுட்டினாள் கொச்சு தெரிசா. அந்த எழுத்துகளில் தோல் சுருங்கி மூத்த தீபஜோதியைக் கண்டிருந்தாள் அவள்.
பாட்டித் தள்ளை அவங்க அப்பா கண்ணூர் புரபசர் வேதையன், அம்மா பரிபூரணத்தம்மா, வீட்டிலேயே இருந்த உறவுக்காரர் துர்க்கா பட்டன் அம்மாவன். தீபஜோதி முத்தச்சி எல்லோரையும் பற்றி நிறையச் சொல்லி இருக்கா. அந்தப் பழைய வீடு பற்றியும்.
அவளுக்கு பாட்டியின் வார்த்தைகள் முழுக்க நினைவு இருந்தன. அந்த மொழியும் இப்போது சட்டென்று மனதிற்குள் திரும்ப வந்திருந்தது.
அவள் குழந்தை தீபஜோதியானாள். சங்கரனின் தோளில் தலை சாய்த்து, மழை ஆதரவாகத் தாளம் கொட்டச் சொல்லத் தொடங்கினாள் –
ரெண்டு பக்கமும் காய்த்துக் குலை தள்ளி இருந்த வாழை மரங்களுக்கு நடுவே துர்க்கா பட்டன் தவழ்ந்து கொண்டிருந்தான்.
ஆன, ஆன, கொம்பன் ஆன. வேகம் போ ஆன. திருசூர் பூரம் போ ஆன.
இது பேசுகிற ஆனை. குழந்தை கூடச் சேர்ந்து கொம்மாளி கொட்டிச் சிரிக்கிற ஆனை.
வேதையனின் பெண் குழந்தை தீபஜோதி அவன் முதுகில் உட்கார்ந்து பூக்குடலையைக் கவிழ்த்த மாதிரிச் சிரித்தது. அவன் வயிற்றில் சின்னக் காலால் மிதித்தது. ஆனையைத் தோட்டத்து வடக்கு மதில் சுவர் பக்கம் நகர்ந்து போகும்படி அடம் பிடித்துக் கொண்டிருந்தது அது.
வேதையன் வீட்டுத் தோட்டத்தில் வாழை மரங்களின் வரிசை முடிந்து இனி தென்னை, பலா, மா அப்புறம் பூச்செடிகள். ஆனை போக முடியாத ஒற்றையடிப் பாதையை அடுத்து சின்ன வாய்க்காலாக கிணற்றுத் தண்ணீர் பொசிந்து கொண்டிருந்தது. கடைகால் கடைகாலாக கிணற்றில் இருந்து நீர் சேந்தி அந்தச் சாலில் செலுத்திய படிக்கு வீட்டுப் பணிக்காரன் ஒருத்தன் தோட்ட வேலையில் கருத்தும் காரியமுமாக இருந்தான்.
பட்டரே, குஞ்ஞம்மையைக் குப்புறத் தள்ளிடாதேயும். தென்னை நட வெட்டி வச்ச குழி உண்டு அங்கே. பின்னே நீரும் கூடி அதிலே விழுந்து வைக்கப் போறீர். கண்ணு தொறந்து ஆனை நடக்கட்டும்.
பணிக்காரன் தண்ணீர் இறைப்பதை நிறுத்திச் சொன்னான். பட்டன் முதுகில் உட்கார்ந்து ஆனையை முன்னால் செலுத்திக் கொண்டிருந்த மூணு வயசுப் பெண் குழந்தை தீப ஜோதி மழலையில் அவனை அதட்டியது.
சும்மா போ தோமச்சா.
எண்டெ பொன்னு குஞ்ஞம்மே. தோமச்சன் சும்மாவும் போகும். சுகமாயிட்டு பாரம் சுமந்தும் போகும். விதிச்சது தீர்ந்தால் பின்னே குரிசுப்பள்ளி உண்டல்லே கிடக்க.
அவன் முடிப்பதற்குள் துர்க்கா பட்டன் குழந்தையை லாகவமாக இடுப்பில் இருந்து இறக்கி தோளில் சுமந்தபடி எழுந்து நின்றான்.
தோமச்சா. குஞ்ஞுக் குட்டியோடு சம்சாரிக்க வேறே விஷயம் ஒண்ணும் கெடக்கலியா உனக்கு?
அவன் குழந்தை நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வைக் கீற்றைத் தன் மேல் முண்டால் பதமாகத் துடைத்தான். குழந்தை நெற்றியில் மெலிசாக முத்தம் இட்டபோது அது அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு திரும்ப கூச்சலிட்டது.
அம்மாவா, ஆன, ஆன.
அம்மாவனு வல்லாத்த ஷீணம் குஞ்ஞே. ஒரு கவளம் சோறு கழிச்சு வந்நு ஆனக் கொம்பன் திருச்சூர் பூரம் காணான் இறங்கும். சரியா.
ஞானும் வயும். மன்னி, பூயம். பூயம்.
குழந்தை ஓட்ட ஓட்டமாக அம்மாவிடம் அனுமதி வாங்க ஓடியது.
கொச்சு தெரிசா பூயம் என்றாள். அவள் பிடரியில் முகம் புதைத்து முத்தியபடி சங்கரன் பூரம் என்றான்.
கொச்சு தெரிசாவின் வரியோடிய உதடுகளைத் தன் இதழ் கொண்டு மூடித் திறந்தான்.
அவளுடைய நாவைப் பரிசித்துச் சொன்னான் –
நமுக்கு பூரம் காணான் பூவாம்.
அவளுக்குள் இருந்து எழுந்து வாயின் மேலன்னத்தில் மோதி எதிரொலித்து வந்த குரலாக இருந்தது அது. கொச்சு தெரிசா உடல் சிலிர்க்க முதுகு குறுக்கி அவனோடு ஒட்டிக் கொண்டாள்.
இதெல்லாம் சரிதானா? சரியில்லை என்றால் என்ன போச்சு? புண்ணியம், பாவம், நல்லது, கெட்டது கூட்டிக் கழித்து யாரிடமும் கணக்கு ஒப்பிக்க வேண்டியதில்லை.
அவள் அந்தக் கணத்தில் கரைந்தாள்.
படகுக் காரன் சாயாக் கோப்பைகளை முக்காலியில் வைத்துவிட்டு ஒன்றும் பார்க்காத, எதையும் கேளாத பாவனையில் உள்ளே போனான்.
கண்ணூர் வீட்டுக்கு நான் போயிருக்கேன்.
சங்கரன் சொன்னான்.
மாமா படிச்சிட்டிருக்கார். முன்வசம் போகாதேன்னு ஒரு ஸ்தூல சரீரப் பெண், சொல்றது நினைவு வருது. அவளை வல்யம்மாவின்னு கூப்பிடுவோம்.
கொச்சு தெரிசாவின் உதடுகளில் திரும்ப முத்தமிட்டுச் சொன்னான் சின்னச் சங்கரன்.