வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – அடுத்த சிறு பகுதி
இதெல்லாம் சரிதானா? இல்லாவிட்டால் தான் என்ன? வசந்தி அவன் நினைப்பில் ஒரு வினாடி எழுந்து, அடர்ந்து நெய்த மழைத் திரிகளில் கரைந்து போனாள்.
சங்கரன் கொச்சு தெரிசாவை அணைத்துக் கொண்டான்.
காயலும் வானமும் நீர்த் திரையால் இணைய அடர்ந்த மேகங்கள் நின்று சுரக்க, மழை சீராகப் பெய்த வண்ணம் இருந்தது.
வாழ்ந்து போதீரே அத்தியாயம் இருபத்தொன்பது
எல்லாம், மழை வலுத்து வரும் காயலில் இருந்து படகு திரும்பத் துறைக்கு வந்ததோடு தொடங்கியது.
இருண்டு ஆர்பரிக்கும் கடல். அது தொட்டு விடும் தூரத்தில் என்றாலும் படகை எல்லாத் திசையிலும் சுழல வைக்கும் நீர்ப் பெருக்கும், மழையோடு கலந்த காற்றுப் பெருக்கும் கடலோடு செல்லாமல் திரும்பச் சொல்லி வற்புறுத்த, படகுத் துறைக்குத் திரும்பியபோது சங்கரனுக்கும் கொச்சு தெரிசாவுக்கும் பகல் நேர வயிற்றுப் பசியாக இந்தப் பொழுது தலையெடுத்தது.
புறப்பட்டுப் போன மற்றப் படகுகள் அருகே தீவில் ஒதுங்கியிருப்பதாகவும், அவை வந்து சேர மாலை ஐந்து ஆகி விடலாம் என்றும் படகுத்துறை ஊழியர் சங்கரனிடம் தகவல் தெரிவித்தார். பசி உச்சத்தில் அதைப் புறம் தள்ளினான் அவன்.
நாலு நாள் மாநாடு அமைச்சர் முடிவுரை நிகழ்த்தாவிட்டாலும் முடிந்துதான் போகும். ஆப்பிரிக்க நாட்டுத் தூதுவரும், இங்கிலீஷ் எழுத்தாளருமான வைத்தாஸ் இக்வனோ ரெட்டிக்கு யானைத் தந்தத்தில் செய்த கதகளி ஆட்டக் குழு ஆடி நிற்கும் சிற்பத்தை முதலமைச்சர் அன்பளித்து, மாலை அணிவித்து நாலு வார்த்தை உபசாரமாக மலையாளத்திலும் இங்கிலீஷிலும் சொல்லா விட்டால் என்ன? தூதருக்கு, அவர் இன்னும் இங்கே இருக்கும் பட்சத்தில் சிற்பத்தை ஓட்டல் அறையிலேயே மழைக்கு நடுவே கொடுத்து விடலாம். இன்று விடிகாலையில் அவர் திருவனந்தபுரம் போய் அங்கிருந்து இன்னேரம் தில்லி திரும்பியிருந்தால், சிறப்பு அலுவலர் மூலம் தில்லிக்குச் சிலையை அனுப்பலாம்.
தூதர் வைத்தாஸின் மனைவி அவருடைய நாட்டின் அதிபராம். அவளும் இங்கே வர வேண்டும் என நேற்றுக் காலை தில்லிக் காரியாலயத்தில் இருந்து இரைச்சலுக்கு நடுவே தேய்ந்து ஒலிக்கும் தொலைபேசி அழைப்பும், ஸ்டாப் என்று அங்கங்கே போட்டு பத்து வரியில் வந்த தந்தியும் சொன்னதாம். சங்கரன் தொழுது நிற்கும் அமைச்சர் அவனிடம் நேற்று விழாப் பந்தலில் விளக்கினார்.
அது மட்டுமில்லை, அந்த அமைச்சர், ஜரூராக இன்னொரு காரியமும் செய்திருந்தார்.
மலையாளக் கரை முழுக்க இப்போது மும்முரமாக மழை பெய்கிறது. அறிவிக்காமல் முன் கூட்டியே வந்த தென்மேற்குப் பருவ மழை இது. இன்னும் ஒரு மாதம் மழை நீடிக்கும். ஆப்பிரிக்க தூதர் வைத்தாஸ் ரெட்டி பங்கு பெறும் விழாவும் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இந்தச் சிறிய ஊருக்கு ஆப்பிரிக்கத் தலைவர் வந்தால் அந்த அம்மையாருக்குப் பாதுகாப்பு அளிப்பது சிரமமாக இருக்கும். இங்கே அவரைத் தங்க வைக்கவும் அவருடைய தகுதிக்குப் பொருத்தமான, நம் நட்பு நாட்டின் மிகச் சிறந்த விருந்தாளிகளுக்குத் தர வேண்டிய உபசரிப்பை அளிக்க இயலாமல் போகலாம். எனவே, அந்த மேன்மைக்குரிய அம்மையார் தில்லியில் இருப்பதே நல்லது. அவருடைய அன்புக் கணவர் தூதர் வைத்தாஸ், விழா இனிதே முடிந்து இன்று தில்லி வருவார்.
சங்கரன் கொச்சு தெரிசாவோடு ஓட்டலுக்குத் திரும்பிய போது அமைச்சர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். உற்சவத்தில் எழுந்தருளிய திருச்சூர் சிவபெருமான் வடக்கும்நாதனுக்குப் பிடித்த மாதிரி ஆகப் பெரிய வண்ணக் குடையோடு அவரை நடத்திப் போய்க் கொண்டிருந்தார்கள். செண்டை மேளம் மட்டும் இருந்தால், முன்னால் நிற்க யானையும் இருந்தால், உற்சவர் என்ன, கருவறைக் கடவுளாகவே ஆகியிருப்பார் உயரம் கூடிக் கருத்து மெலிந்த அந்த அமைச்சர்.
ஊருக்குப் போய்ட்டிருக்கேன். தொகுதியிலே ஒரு அவசர வேலை வந்திருக்கு.
அவர் பார்வை சங்கரனோடு நெருக்கமாக நகர்ந்து வந்த கொச்சு தெரிசாவின் மீது பதிந்தது. அடுத்த வினாடி சங்கரனைப் பார்த்துச் சிரிப்போடு கேட்டார் –
மேடம் தங்கி இருக்க இடம் கிடைச்சுதா? புகார் எதுவும் இப்போ இல்லையே?
அந்தச் சிரிப்பு வேறே மாதிரி சங்கரனுக்கு அர்த்தம் சொன்னது. போகிறது, நல்ல மனுஷர். கூட ஒரு அழகான பெண் இருந்தால் பார்த்தவர்களுக்கு எப்படி எல்லாமோ பேசத் தோன்றும். அதுவும், பூசியது போல் வனப்பாக சற்றே உடல் பெருத்த, மேற்கத்திய உடை அணிந்த, கருவிழிகள் கொண்ட கறுத்த பெண். நல்ல குரலில் அழகாக இங்க்லீஷ் பேசுகிறாள். விந்திய மலைச்சாரலுக்குத் தெற்கே அழகு இதுதான்.
அமைச்சர் பொறாமைப் பட்டாலும் சரி, இன்றைக்கு சங்கரனின் நாள். தில்லியில் அவரைப் பார்க்கும் போது இதையெல்லாம் மறந்து போகட்டும்.
நீங்களும் வர்றீங்களா? கார்லேயே மதுரை போகிறோம். உங்க ஊர் கூட அங்கே தானே.
இல்லே சார், நான் இப்படியே தில்லிக்குப் போய்க்கறேன். வீட்டிலேயும் ஆபிசிலும் முடிக்க வேண்டிய வேலை ஒருபாடு இருக்கு.
அது என்ன ஒருபாடு? மலையாள பூமி உங்களையும் மாத்திடுச்சா?
இக்கு வைத்து மறுபடி பேசியபடி அமைச்சர் புறப்பட்டுப் போக கொச்சு தெரிசாவோடு பகல் உணவுக்காகப் போனான் சங்கரன்.
பெருமழை, புயல் சின்னம், சூறாவளி சுழன்றடிக்க வாய்ப்பு என்ற காரணங்களைச் சுட்டிக் காட்டி நாட்டுப்புறக் கலை விழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கும் சுற்றறிக்கையை டவாலி அணிந்த சேவகர்கள், எதிர்ப்பட்டவர்கள் அனைவருக்கும் காட்டிக் கையொப்பம் வாங்கிக் கொண்டு போனார்கள்.
சோற்றைப் பிசைந்து சாப்பிட இருந்த நிலையில் சங்கரனும் அவர்களால் கையெழுத்து இடும்படி கோரப்பட்டான். கொச்சு தெரிசா சார்பிலும் கணவர் என்று எழுதிக் கையொப்பமிடச் சொல்லிக் கேட்டார்கள். கையில் எடுத்த முள்கரண்டியும் கத்தியுமாகச் சாப்பிட உட்கார்ந்த அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
June 2 2024