ஜூன் 25, 1975 என்ற பெயரில் காலண்டர் தேதி இல்லை

என் நாவல் 1975 -எமர்ஜென்சி காலம் பற்றிய நாவல் சிறு பகுதி


சமர்ப்பணம்

 

பெருந்தலைவர் காமராஜருக்கு

 

                         

 

 

                  சாற்றுகவி வெண்பா

 

 

 

”துயிலேறும் மாலும், மயிலேறும் வேலும்

கயிலையின் சூலமும் காப்பு  – ஒயிலான

கற்பகமும் சேர்ந்துமை காத்திடுவார், உம்கதையை

நற்பொருள் நாவல் சிறப்பு’’….!

                                                           கிரேஸி மோகன்

 

 

 

 


 

 

முன்னுரை

 

தன் வரலாறும் புனைவும் கலந்த பயோபிக்‌ஷன் நெம்பர் 40, ரெட்டைத்தெரு, தியூப்ளே வீதி என்ற இரு நாவல்களாக வெளிவந்ததும் அந்த உத்தியை இன்னும் சற்று நீட்சி அடைய வைத்து, புனைவின் சுதந்திரமும்,  நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி காட்டும் வரலாற்றின் தகவல் துல்லியமும், ஒருங்கமைதியும், செறிவுமாக ஒரு படைப்பு எழுதிப் பார்க்கத் தோன்றியது.

 

வழக்கம் போல் சிறுகதைப் பொறியைக் கற்பனை ஊதிப் பற்ற வைக்க அது, படர்ந்து பரவிய நாவல் நெருப்பானது. 1970-களில் நடந்து, என்னோடு சென்னை மேன்ஷனிலிருந்த நண்பர்கள் நினைவு  வைத்திருக்கும் நிகழ்ச்சி அது. பெருந்தலைவர் காமராஜர் மறைந்த தினத்தில் நிகழ்ந்தது. மேன்ஷன் அறைக்கு எங்கள் யாருக்கும் பரிச்சயமில்லாத ஒரு இளம் பெண் வந்து, வெளியே போகமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

 

அந்த வினோதமான அல்லது அபத்தமான சூழலை, நான்கு அரசூர் நாவல்கள் எழுதித் தீர்த்தபின் சாவகாசமாக ஒரு சிறுகதையாக எழுத உத்தேசித்தபோது மனதில் தோன்றிய சிந்தனை, அந்தக் காலத்தில் தானே எமர்ஜென்சி நடப்புக்கு வந்தது? எமர்ஜென்சி காலத்தில் நடப்பதாக ஒரு நாவல் எழுதினால் என்ன? 1975 நாவலின் எழுத்து மூலம் இதுதான்.

 

இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு இல்லை. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. எமர்ஜென்சி இல்லாமல் இருந்தாலும் இந்த நிகழ்வுகளில் பல நிகழ்ந்திருக்கும். ஆனால் அவற்றின் போக்கும் முடிவும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

 

வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். இறுதி அத்தியாயத்திலும் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். திடுமென்று வந்து திடுமெனக் காணாது போகிற இவர்கள் எல்லோரும் கதைப் போக்கை நகர்த்த ஒரு கை கொடுத்துத் தேர் இழுக்கிறார்களா என்றால் இல்லை. தன்னைச் சுற்றிச் சுழலும் உலகத்தில் இன்னார் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றோ, இயக்கம் எல்லாம் தன்னையே மையமாகக் கொண்டு நிகழ வேண்டும் என்றோ விதி செய்யப் போத்தியால் முடியாது. ஆடுவாரும், ஆடி முடித்து அள்ளிச் செல்லாமல் ஒதுங்குவாரும், ஆட வந்தவர்களுமாகக் கதை விரிவதிலும் ஒரு ரசம் உண்டு.

 

Character Arc என்ற கதாபாத்திரத்தின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ தட்டுப்படாதவர்கள் போத்தியும் மற்றவர்களும். கதைவெளியில் எமர்ஜென்சி தான் உருவாகி, வளர்ந்து, கலைந்து போகிறது.

 

எமர்ஜென்சி 1975-ஆம் வருடம் ஜூன் 25-ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்டது. 1977-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி விலக்கிக்கொள்ளப்பட்டது. இடைப்பட்ட இருபத்தோரு மாதங்களில் நிகழும் இந்த நாவலின் அத்தியாயங்களும் இருபத்தொன்றுதான்.

 

நாவலின் முதல் நான்கு அத்தியாயங்கள் சென்னையிலும், அடுத்த பனிரெண்டு அத்தியாயங்கள் தமிழகத்தில் ஒரு சிறு நகரத்திலும், இறுதி ஐந்து அத்தியாயங்கள் தில்லியிலும் நிகழ்கின்றன.  தில்லியிலும், சென்னையிலும், நான் பிறந்த சிறு நகரத்திலும் வாழ்ந்து பெற்ற என் வாழ்வனுபவங்கள் நாவலில் கலந்திருக்கின்றன.  வாழ்வனுபவத்தின் பின்பலம் இல்லாமல், வெளிநாடோ, உள்நாடோ, எந்த நிலப்பரப்பும் என் படைப்புகளில் இடம்பெற வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

 

பெருங்கதையாடல் இந்த நாவல் போக்கில் அயர்வு சேர்க்கக் கூடும் என்பதால் சிதறுண்ட கதையாடலாகக் கூறப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளின் நிகழ்ச்சித் தொகுப்பு நாவலாகிறது. எமர்ஜென்சியும் போத்தியும் இவை எல்லாவற்றையும்  ஒன்றிணைக்கும் சரடுகள்.

 

என் ஆருயிர் நண்பர் கிரேசி மோகன் வழக்கம் போல் நாவலின் முதல் பி.டி.எஃப் பிரதியைப் படித்து முதல் விமர்சகராக தினசரி தொலைபேசி, கருத்தும், மேம்படுத்த யோசனையும், பாராட்டும், கறாரான விமர்சனமும் அளித்தார். அவருக்கு என் நன்றி.

 

இந்தமுறை இன்னும் சில நண்பர்களும் நாவலின் சில பகுதிகளுக்கு நடைபெற்ற எடிட்டிங்கில் மகிழ்ச்சியோடு பங்குபெற்றார்கள். தகவல் ஒருங்கு இணக்கம் சரிபார்ப்பதில் இவர்களின் பங்கு சிறப்பானது. நாற்பது வருடத்துக்கு முற்பட்ட எமர்ஜென்சி கால வாழ்வு அனுபவமும், பணி இட அனுபவமும், இந்தக் கதை நிகழும் இடங்களில் வசித்த அனுபவமும், நல்ல வாசிப்பனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள்.

 

திருமிகு  அனுராதா கிருஷ்ணஸ்வாமி, ஸ்ரீவத்ஸ் நடராஜன், பரத்குமார் பாலசுப்பிரமணியன் ஆகிய இந்நண்பர்களுக்கு என் நன்றி. நண்பர் ரமேஷ் வெங்கட்ராமனுக்கும் என் நன்றி.

 

நாவலுக்குச் சாற்றுகவி வெண்பா அளித்த நண்பர் கிரேசி மோகனுக்கு மீண்டும் நன்றி.

 

என் அன்புக்குரிய வாசக நண்பர்களுக்கு என் வாழ்த்துகள். இனி நாவல் உங்களோடு பேச, நான் மௌனமாகிறேன்.

 

இரா.முருகன்

ஏப்ரல்  2018

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

                                                                  மதராஸ்

                      அத்தியாயம் 1                      ஜூன் 1975  

 

 

 நான் போத்தி. திருப்பணித்துறை சிவசங்கரன் போத்தி. திருப்பணித்துறையிலிருந்து தெற்குத் தமிழ்நாட்டுக்கு சாப்பாட்டுக்கடை நடத்த வந்த குடும்பம் எங்களது.   அது நடந்தது 1900-களில். சாப்பாட்டுக் கடை பற்றி இல்லை இங்கே எழுதப் போவது. 1975-ல் மெட்ராஸில் தொடங்கி அடுத்த இரண்டு வருடம் நடந்தது இது. போத்தியின் கதை மட்டுமில்லை. உங்களுடையதும் தான்.   

 

ஓராண்டு முன்பு எனக்கு சென்னை வங்கி ஒன்றில் இன்னும் பணி நிரந்தரமாக்கப்படாத இளநிலை மேலாளர் பணி கிட்டியது.

 

1975-ல் பெரும்பாலும் நிலவிய தமிழில் சொன்னால் – ஒரு வருடம் முன்னால் எனக்கு மெட்ராஸில் பேங்க் ஒன்றில் ஜூனியர் ஆபீசர் வேலை கிடைத்தது. புரபேஷனரி ஆபீசர்.

 

கிளார்க்குகளுக்கு எல்லாம் கீழ்ப்பட்ட குமாஸ்தா – அந்தச் சொல் 1975-லேயே பெரும்பாலும் வழக்கொழிந்து போனது. மேலும், நான் கடைநிலை ஊழியர்கள் எல்லோருக்கும் கடைப்பட்ட ஊழியன்.

 

மேனேஜர், அக்கவுண்டண்ட் போன்ற சிறு தெய்வங்கள் கிளார்க்குகளையும், கடைநிலை ஊழியர்களையும் வேலை வாங்க முடியாத கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டிப் பிரயோகிக்க, எல்லாத் திசையிலும் உதைபடும் பந்து.

 

வால்டாக்ஸ் ரோடோடு போனால் தட்டுப்படும் யானைக்கவுனி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கிழக்கே வங்கிக் கிளை. சுற்று வட்டாரத்தில் வேறே பேங்க் இல்லை என்பதாலோ என்னமோ, சிறு வர்த்தகர்கள் எல்லோரும் அங்கே கணக்கு துவக்கி, பொழுது விடிந்து பொழுது போக வசூலான தொகையாக செக், டிராப்டைக் கொண்டு வந்து கணக்கில் வரவு வைக்கக் கொட்டுவார்கள்.

 

தினசரி ஆயிரம் ரெண்டாயிரம் செக்குகளின் விவரத்தைப் பேரேட்டில் டீ குடித்தபடி எழுத வேண்டும். அவற்றை கிளியரிங்கில் ரிசர்வ் பேங்குக்கு அனுப்ப பேங்க் வாரியாக, டீ மேலே கொட்டாமல் குடித்துக் கொண்டே பிரித்து அடுக்க வேண்டும்.  நீள பட்டாவில் நம்பர் போட்டு விவரம் எழுதி, டீ குடித்துக் கொண்டே கூட்டிப் போட வேண்டும். அப்புறம் பட்டாவை எல்லாம் கூட்டினால், பேரேட்டில் பதிந்ததற்கு அடித்த தொகையோடு ஒத்துப் போக வேண்டும். உடனே ஆகாது. ஆச்சு என்றால் அப்புறம் என்ன வேலை இருக்கும்?

 

டீ குடித்துக் கொண்டே கணக்கை நேர் செய்ய வேண்டும்.  டீ குடித்தபடி அடுத்த கோப்பை டீயைப் பத்திரமாக மேஜையில் நகர்த்தி வைக்க வேண்டும். வால்டாக்ஸ் ரோடு கோல்டன் கஃபே டீ இருந்தால் வாழ்க்கை இனிது, இனிது. புரபேஷனரி ஆபீசராக இருந்தால் கூட அப்படித்தான்.

 

1975 ஜூன் 25 புதன்கிழமை மற்ற வேலை நாட்களோடு வித்தியாசம் இல்லாமல்,  கிளியரிங் பட்டாவில் பதினெட்டு பைசா வித்தியாசத்தோடு நகர்ந்து கொண்டிருந்தது.

 

”பதினெட்டு. ஒண்ணு. எட்டு. ரெண்டையும் கூட்டினா ஒன்பது. நிச்சயம் யாரோ ஏதோ செக்கை லெட்ஜரிலே பதியும்போது பைசாவில் உல்டா பண்ணியிருக்காங்க. முப்பத்தைஞ்சு பைசாவை ஐம்பத்து மூணு பைசாவா பதிஞ்ச மாதிரி. செக்கை வச்சுக்கிட்டு ஒண்ணொண்ணா பாத்துடலாம்”.

 

நான் நம்பிக்கையோடு சொன்னேன். காலை நேரத்துக்கான பரபரப்பு நிறைந்து வழியும் பேங்க் கவுண்டர்.

 

”நேத்து சுப்ரீம் கோர்ட் வெகேஷன் ஜட்ஜ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ன பண்ணினார் தெரியுமோ? இந்திராவை டிஸ்க்வாலிஃபை பண்ணின அலஹாபாத் ஹைகோர்ட் ஜட்ஜ்மெண்ட் இருக்கே, அதை முழுக்க ஸ்டே பண்ணமாட்டேனுட்டார். She is no more the Prime Minister, let alone a M.P”.

 

கரீம் அண்ட் ஹாத்திம் எண்டர்ப்ரைசஸ் கம்பெனி நிர்வாகி ஆராவமுதன், அப்துல் அஸீஸிடம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

 

அப்துல் அஸீஸ்,    ஐயங்கார் அண்ட் ஐயங்கார் தோல் பதனிடும் தொழிற்கூடத்தின் நிர்வாகி. இரண்டு நிறுவனங்களும் எங்கள் பேங்க் கிளையின் பெரிய கஸ்டமர்கள்.

 

காலையில் ஷட்டரை மேலே ஏற்றி ஆபீஸ் திறக்கும்போதே முதல், இரண்டாவதாக நுழையும் வாடிக்கையாளர்களாக நின்று கணக்கு வழக்கு சரிபார்த்துப் போவது இரண்டு பேருக்கும் வழக்கம்.

 

‘இங்கே அரசியல் பேசுவது கூடாது’ என்று எழுதிய பலகைக்குக் கீழே உட்கார்ந்து இரண்டு பேரும் தினமும் பேசுவது அரசியல் என்றாலும் யாரும் எதுவும் சொல்வதில்லை காரணம் அவர்கள் பேசுவது சர்வதேச நாட்டுநடப்பு.

 

அமெரிக்க ஜனாதிபதி ஜெரால்ட்  ஃபோர்ட் எகிப்து நாட்டுக்குப் போய் விமானத்திலிருந்து இறங்கும்போது விழுந்து அடிபட்டது பற்றியோ, பிரிட்டீஷ் பிரதமர் ஹெரால்ட் வில்சன் சோவியத் யூனியனின் ஒற்றரா என்பது பற்றியோ அவர்கள் விரிவாக அலச, அவர்களைச் சுற்றி சேவிங்க்ஸ், கரண்ட் அகவுண்ட், டோக்கன் நம்பர் எட்டு என்று அதுபாட்டுக்கு பேங்க் உலகம் சுழன்று கொண்டிருக்கும்.

 

இன்றைக்கு ஒரு மாறுதலுக்கு இந்திய அரசியல் பேசுகிறார்கள் போல என்று நினைத்தபடி பதினெட்டு பைசா வித்தியாசத்தில் மூழ்கியிருந்தேன்.

 

“கிளியரிங் செக் எல்லாத்தையும் அனுப்பி வைக்கற நேரம் வந்தாச்சு. சஸ்பென்ஸ் டெபிட் பண்ணி பதினெட்டு பைசாவை இப்போதைக்கு சரிக்கட்டுங்க. க்ளியரிங்க்லே வேறே ஏதாவது பேங்குக்கு இதே தொகை உதைக்கும். அப்போ பிடிச்சுடலாம்” என்றார் சீனியர் ஆபீசர் கணேசன்.

 

இதுபோல் டென்ஷன் ஆக்கக் கூடிய பல சந்தர்ப்பங்களைச் சந்தித்த அவர் இதைச் சொல்லி விட்டு, கவுண்டருக்கு அந்தப் பக்கம் போய், பெரிசுகளோடு பேச ஆரம்பித்தார்.

 

”ஹைகோர்ட் பிரதமரை பதவி நீக்கம் செஞ்சு, இன்னிக்கு கவர்மெண்டே இல்லாத நிலைமை சார். மிலிட்டரி டேக் ஓவர் செஞ்சா கூட ஆச்சரியப்பட மாட்டேன்”.

 

கணேசன் அரசியல் பேசிக் கேட்பது இதுதான் முதல் தடவை. ஆபீஸ் விஷயம் பற்றி இல்லாமல் மற்றதைப் பேசிக் கேட்பதும் முதல் முறைதான்.

 

பகல் நேரத்தில் லஞ்ச் டேபிளில் கணேசனிடம் நான் கேட்டேன்,

 

“சார், காலையிலே சொல்லிட்டிருந்தீங்களே, பிரதமரை ஹைகோர்ட் பதவி நீக்கம் செய்திருக்குன்னு, அதாலே நமக்கு என்ன பிரச்சனை? இந்திராவுக்கு பதவி இல்லேன்னா சஞ்சய் காந்தி பிரதமர் ஆகிடுவார் இல்லே? அவர் தானே லைன்லே அடுத்தது?”

 

கணேசன் ஏதும் சொல்லாமல் என்னைப் பார்த்துப் புன்னகையோடு தலையை ஆட்டியபடி ஒரு பப்படத்தை ஆசையோடு நொறுக்கி வாயில் போட்டுக் கொண்டார்.

 

நாலடுக்கு டிபன் செட் அவருடையது. அதில் மூன்று அடுக்கில், பொறித்த அப்பளமும் பப்படமும் அடைத்து வரும். மற்றதில் தயிர் சாதம். ஒரு பாட்டில் நிறைய சாம்பார். பப்படத்துக்குத் தொட்டுக் கொள்ள அது.

 

”போத்தி, இது ஜனநாயக நாடு. மன்னராட்சி இல்லே. அம்மா போனா, மகன் அரியணை ஏற முடியாது. அது இல்லே இப்போ விஷயம். டெக்னிகலா பார்த்தா இன்னிக்கு இந்திய அரசாங்கமே இல்லை. பிரதமரை பதவி நீக்கம் செய்ததாலே நாட்டுக்குத் தலைவரும் கிடையாது. மற்ற பல நாடுகளிலே இப்படி நிலைமை வந்தால், ராணுவம் ஆட்சிக்கு வந்துடும். இங்கே இதுவரைக்கும் இல்லை. இனிமேல் எப்படியோ”.

 

கணேசன் ஏதும் சொல்லாமல் என்னைப் பார்த்துப் புன்னகையோடு தலையை ஆட்டியபடி பப்படத்தை விண்டு மென்றார்.

 

“எப்போ வேணுமின்னாலும் எதுவும் நடக்கலாம். அதுவும் இன்னிக்கே”.

 

கணேசன் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டு சாம்பார் குடிக்கலானார்.

 

அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த யாரும் ஒரு சத்தமும் எழுப்பவில்லை. ஏதோ ஒரு கூட்டுப் பயம் பாதித்திருந்தது எல்லோரையும்.

 

என் மனதில் ராணுவம் கோல்டன் கஃபே வாசலில் துப்பாக்கியுடன் நின்று டீ குடிக்கப் போகும் என்னைச் சுடுவதற்கு இலக்கு நோக்குவதாகக் கற்பனை செய்து ஒரு வினாடி நடுங்கினேன்.

 

பிற்பகல் மூணு மணிக்கு பதினெட்டு பைசா புதிர் தீர்ந்து தவறுதலாகப் பதியப்பட்ட செக் கண்டுபிடிக்கப்பட்டு, எண்ட்ரி திருத்தப்பட எல்லாம் சுபம்.

 

திடீரென்று ரகோத்தமன் நினைவு வந்தது. தில்லியில் இருந்து வந்திருக்கும் நண்பன். அங்கே ஆகாசவாணி ரேடியோ ஸ்டேஷனில் உத்தியோகம்.  ஒலிபரப்பு பக்கம் போகாமல், மேஜை நாற்காலி போட்டு உட்கார்ந்து கிளார்க் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் போனவன்.

 

ரகோத்தமன் ஒரு வாரம் சொந்த ஊர் திருப்புல்லாணி போய் வந்து திரும்பும் நாள் இது. சென்ட்ரலுக்கு வெய்யில் தாழ ஒரு ஐந்து மணி சுமாருக்கு வந்தால், கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் 7 மணிக்குக் கிளம்பும் வரை அரட்டை அடிக்கலாம் என்று அவன் போஸ்ட் கார்ட் போட்டிருந்தான்.

 

ஐந்து மணிக்கு நான் சென்ட்ரல் போக ரெடி.

 

வால்டாக்ஸ் ரோடு வட்டாரத்தில் தான் ஆபீஸ் என்பதால் ஒரு பத்து நிமிடம் நடந்தாலே சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள் போய் விடலாம்.

 

கோல்டன் கஃபேயில் இன்னொரு பால் டீ சாப்பிட்டு விட்டு நடக்க ஆரம்பித்தேன். ஆறுதலான கடல் காற்று கூடவே வந்தது. கணேசன் பேச்சில் கடந்து வந்து என்னை ஒரேயடியாகப் பயமுறுத்திய ராணுவத்தினர்  வால்டாக்ஸ் ரோடு நெரிசலில் காணாமல் போனார்கள்.

 

ரயில் கிளம்பும் வரை, ரகோத்தமனுடன் நாஸ்டால்ஜியா அரட்டை தொடர்ந்தது. கணேசன் சொன்னது நடக்குமா என்று மத்திய அரசு ஊழியனான அவனிடம் கேட்டேன். அவனுக்கு கிருஷ்ண ஐயர் யாரென்றே தெரியவில்லை. அவர் பள்ளிக்கூட ஹெட்மாஸ்டரா என்று கேட்டான். நான் ஒன்றும் செய்யத் தோன்றாமல் அவனைப் பார்த்தேன்.

 

“ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஏன் கவர்மெண்ட் சர்வெண்டை வெளியே போகச் சொல்லணும்?”

 

அடிப்படைக் கேள்வியைக் கேட்டு என்னை நிசப்தனாக்கினான். அதற்கு அப்புறம் ராயர் கடையில் வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்ட பத்து வயது அனுபவத்துக்கு மேற்பட்ட எதையும் அவனோடு பேசவில்லை.

 

எந்த ஜென்மத்தில், எந்த ஊரில் எங்கே காண்போமோ என்று கண்ணில் நீர் மல்க, கட்டிப் பிடித்துக் கொண்டு ரகோத்தமனுக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு ஜெனரல் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்பில் பதினொன்றாம் நம்பர் பஸ் பிடித்து ஜி.என்.செட்டி ரோடு வழியாக உஸ்மான் தெரு வந்து சேர்ந்தேன்.

 

சிவா விஷ்ணு கோவில் எதிரே விரியும் தெருவில் எங்கள் மேன்ஷன். உஸ்மான் வீதியில் கூட்டமும் நெரிசலும் குறையவில்லை. காப்பிப்பொடி புதுசாக அரைத்து வாங்கவும், கோன் ஐஸ் சாப்பிடவும், சாத்துக்குடி ஜூஸ் குடிக்கவும், லிஃப்கோவில் இங்கிலீஷ் தமிழ் டிக்ஷனரி வாங்கிப் போகவும், மாம்பல ரயில்வே ஸ்டேஷன் அருகே ரங்கநாதன் தெருவில் காய்கறி வாங்கவும், நல்லியில் முகூர்த்தப் புடவை வாங்கவுமாக ராத்திரி நகரம் வாங்கி, தின்று, குடித்து இயங்கிக் கொண்டிருந்தது.

 

நாதன்ஸ் கஃபே ஃபுல் மீல்ஸ் பிரிவில் காகித டோக்கனை எச்சில் இலைப் பக்கம் வைத்துக் காத்திருக்க வேண்டியில்லாமல் போனதுமே இடம் கிடைத்தது.

 

வத்தல் குழம்பும், ரெண்டு சுட்ட அப்பளமும் போனசாகக் கிடைக்க, இந்தியாவை, பப்படம் கணேசனை, பதினெட்டு பைசா வித்தியாசத்தை மறந்து, அவரைக்காய் சாம்பாரும், தக்காளி ரசமும் கலந்து சூடான சாதம் வயிற்றில் நிறைய, எங்கே எங்கே என்று அசதியும் தூக்கமும் எட்டிப் பார்த்த நேரம். இரையெடுத்த பாம்பாக ஊர்ந்து நான் தங்கியிருக்கும் மேன்ஷன் வந்தாயிற்று.

 

மாடிப்படி ஏறி நடையில் திரும்ப, முதல், இரண்டாம் அறை கன்னட நண்பர்கள் பெல்காவியும் குல்கர்னியும் பெல்காவி அறை வாசலிலேயே டிரான்சிஸ்டருடன் நின்று கொண்டிருந்தார்கள்.

 

என்ன விஷயம்? ராணுவ ஆட்சியா?

 

“இன்னும் இல்லே. இந்திராம்மா அமைச்சர்களோடு ஆலோசனை செய்து ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதை சந்திக்க ராஷ்ட்ரபதி பவன் போயிருக்காங்களாம். அதுவும் ஆகாசவாணி ந்யூஸ் இல்லை. பி.பி.சி லண்டன் செய்தி. வாய்ஸ் ஆப் அமெரிக்காவும் அதே தான் சொல்றது”,

 

மர்ஃபி டிரான்சிஸ்டர் ரேடியோ குமிழியைத் திருகிக் கொண்டு சொன்னார் பெல்காவி. அவர் எனக்கு பிரியமான நண்பர். பெல்காவி என்பது கர்னாடகாவில் ஊர்ப் பெயரான பெல்காம் அடிப்படையில் வருவதாம்.

 

குல்கர்னி மூத்தவர். நகத்தைக் கடிக்காதே, தலை வாரிட்டு வா, வீபுதி எட்டுக்கோ என்கிற மாதிரி அண்ணா அவதாரம் அடிக்கடி எடுப்பார். அவரைத் தவிர நாங்கள் இங்கே அறைகளில் இருக்கப்பட்ட எல்லா பிரம்மசாரிகளும் இருபத்தைந்து வயதுக்குக் கண்டிப்பாகக் கீழ்ப்பட்டவர்கள் என்பதால் ஹள்ளிய அண்ணா எனப்படும் இந்தக் கிராமத்து அண்ணன் குல்கர்னியின் சொல் மதிப்புக்குரியது.

 

அறைக்கு நடந்தேன். உள்ளே போய்ப் படுத்தால் உலகோடு ஒரு தொடர்பும் இல்லாமல் அடுத்த எட்டு மணி நேரம் போகும். பூமியே புரண்டாலும் தான் என்ன?

 

பேண்ட் பாக்கெட்டில் ரூம் சாவிக்குக் கை விட்டேன். அது அங்கே இல்லை.

 

இரண்டு பாக்கெட், கைப்பை, இருக்க முடியாது என்று தெரிந்தாலும் சட்டைப் பை. பரபரப்பாகத் தேட அறைச் சாவியை எங்கேயும் காணவே காணோம்.

 

பூட்டு எதுவும் இல்லை. கதவிலேயே பதிந்த பூட்டு, கதவைச் சாத்தினால் பூட்டிக் கொண்டு விடும். சாவி போட்டால் திறக்கும் ஏற்பாடு.

 

காலையில் ஆபீஸ் போகிற அவசரத்தில் சாவியை எடுத்துக் கொள்ளாமல் வெளியே வந்து சாத்தி விட்டுக் கிளம்பியிருக்கிறேன். இனிமேல் கதவு திறக்க கோவிந்தன் தான் வரவேண்டும்.

 

கோவிந்தன் இந்த மேன்ஷனின் உரிமையாளர். எல்லா சாவிக்கும் பொதுவான, ஒரு மாஸ்டர் சாவி அவரிடம் இருக்கிறதாகக் கர்ணபரம்பரைக் கதைகளாக வதந்தி உலவுகிறது. அதில் நம்பிக்கை இனிமேலாவது வைத்தாக வேண்டும். கதவு திறக்காவிட்டால் எங்கே போய் உறங்க? நாளை எப்படி நான் ஆபீஸ் போக?

 

ஜன்னல் வழியே ஏக்கத்தோடு ரூமுக்குள் பார்த்தேன். என் பின்னால் கொரகொரவென்று பிபிசியோ வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவோ வேறே எதுவோ இந்த நாட்டு நிலைமையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

 

இந்திரா என்ன ஆனார்? என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். எங்கேயும் போகட்டும். நான் எப்படி அறைக்குள் மீண்டும் போகப் போகிறேன்?

 

“பக்ருதீன் அலி அகம்மது அவசரச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டுட்டாராம். நாட்டில் நெருக்கடி நிலைமை பிரகடமாகி இருக்காம். எமர்ஜென்ஸி”.

 

பெல்காவி டிரான்சிஸ்டரை உரக்க வைக்க,  எமர்ஜென்சி வந்ததைப் பரபரப்போடு மதராஸ் வானொலி நிலையத்தில் பத்மநாபன் சிறப்புச் செய்தி அறிக்கையாகச் சொல்கிற ஒலி.

 

பத்மநாபன் செய்தி சொல்லி முடித்து வீட்டுக்குப் போவார். தட்டியதும் கதவு திறக்கும். ஓய்வெடுத்துக் கொண்டு, குளித்து, சாப்பிட்டு வந்து நாளைக்கு இந்திரா காந்தி புகழ் பரப்பும் அடுத்த செய்தி சொல்வார்.

 

நான் ஆபீஸ் போக முடியாமல், அழுக்கு உடுப்போடு அறைக்கு வெளியே கையைப் பிசைந்து கொண்டு நிற்பேன்.

 

“என்ன ஆச்சு போத்தி, வாசல்லே நின்னு முழிச்சிட்டு இருக்கே?’

 

என் அறைக்குத் தெற்கே அடுத்த ரூம்காரரான நாராயணசாமி ஸ்கிப்பிங் கயிறில் தாண்டிக் குதித்துக்கொண்டு தன் அறைக்குள் இருந்தபடிக்கே விசாரித்தார்.

 

காலை ஏழு மணிக்கு எண்ணூரில் வேலைக்குப் போய் இரவு ஏழுக்கு வருகிறதால் ராத்திரி படுக்கும் முன் ஸ்கிப்பிங்க் ஆடுகிற உடல் பயிற்சி அவருக்கு விதிக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்.  ராத்திரியில் ஸ்கிப்பிங் ஆடி ஆடி அவர் நடக்கும்போதே குதித்துக் குதித்துப் போவதாகத் தான் தோன்றும். என்ன சாப்பிட்டாலும் சதையே போடாத பூஞ்சை உடம்பு அவருடையது. மூக்கு இந்திரா காந்தி மாதிரி நீளம். பழைய எகிப்து ஜனாதிபதி நாசர் கூட நீண்ட மூக்கர் தான். ஆனால் அவரை யாரும் பதவி நீக்கவில்லை. நாசர் சாவியைத் தொலைத்திருக்க மாட்டார். நாராயணசாமியும்.

 

“நாராயணசாமி சார், சாவியை ரூம் உள்ளே விட்டுட்டேன். என்ன பண்றது?”

 

பெல்காவி டிரான்சிஸ்டரைக் கட்டிச் சுமந்தபடி என் அறைக்குள் ஜன்னல் வழியே பார்க்க, குல்கர்னி பின்னாலேயே வந்து உள்ளே டார்ச் அடித்தார்.

 

“எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று அமெரிக்காவோ, பிரிட்டனோ உற்சாகமாகச் செய்தி சொல்ல, நான் குழப்பத்தோடு அறைக்குள் பார்த்தேன். கதவு ஓரமாக சின்ன மேஜையில் சாவி பத்திரமாக இருக்கிறது.

 

நாராயணசாமி வந்து ஜன்னல் கம்பிகளுக்குள் கையை நீட்ட குட்டி மேஜைக்கு நாலு அங்குல உயரத்தில் அவர் விரல் அலை பாய்கிறது. பழைய எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் மூக்கு போல் விரல் கொஞ்சம் நீளமாக இருந்தால் சாவியைக் கைப்பற்றி இருக்கலாம்.

 

நாராயணசாமியும் ஸ்கிப்பிங்க் கயிறை ஓரமாகப் போட்டு விட்டு அவருடைய டிரான்சிஸ்டர் ரேடியோவில் பிபிசி போடுகிறார்.

 

“மொரார்ஜி தேசாய் போயாச்சு”.

 

அவர் சொன்னதைக் கேட்க நடுக்கம் வருகிறது. அதுவும் அனாதையாக அறைக்கு வெளியே நின்று மொரார்ஜியை நினைக்கும் சோகம். சுட்டுட்டாங்களா அவரை? கொலையும் செய்வார் அந்தம்மாவா?

 

“எழுபத்தேழு வயசு. அவரை ஜெயில்லே போட்டுட்டாங்க. அநியாயம்”,

 

குல்கர்னி குரலில் ஆத்திரம் புலப்பட்டது. ரொம்ப சாந்தமான மனிதர் அவர்.

 

கோவிந்தனுக்கு ஃபோன் செய்து பார்க்கலாமா? நாராயணசாமி தன் பர்சில் தேடி ஒவ்வொன்றாக அவர் அறையில் தரையில் போட்ட பொருட்கள் – தினசரி காலண்டர் காகிதத்தில் மடித்த கோவில் வீபுதி.  எழும்பூர் ரயில்வே ஜங்க்‌ஷன் பிளாட்பாரம் டிக்கட்.  மின்சார ரயில் சீசன் டிக்கெட்.  கோளறு திருப்பதிகம் ஒன்றும் பின்னால் பனியன், ஜட்டி விளம்பரமுமாக சிறு அட்டை.  மடாதிபதி படம். நுணுக்கி அச்சடித்த புகையிலைக் கம்பெனி கேலண்டர். பஸ் டிக்கட். சின்ன, மினிக்கும் மினியாக பாக்கெட் சைஸ் நோட்புக்.

 

அதுதான் என்றார் நாராயணசாமி. எடுத்துப் பிரித்து கோவிந்தனை அழைக்க, அவருடைய டெலிபோன் அவுட் ஆப் ஆர்டர். நாசமாகப் போகட்டும் அதுவும் அவரும்.

 

“வாஜ்பாய் அரெஸ்டெட். அத்வானியும் உள்ளே தான்”. பெல்காவி சொன்னார்.

 

“கலைஞர் கருணாநிதி?”

 

அந்தக் குழப்பமான நேரத்திலும் எனக்குக் கேட்கத் தோன்றிய பெயர் அதுதான்.

 

“இன்னும் இல்லை” என்றார் நாராயணசாமி. அந்தப் பதில் மற்ற எதையும் விட மிரட்டலாக கதிகலக்க வைத்தது.

 

அது இருக்கட்டும். அறைக்குள் எப்படிப் போக? நாளைக்கு எப்படியாவது சமாளித்து, கோவிந்தன் வீட்டுக்குப் போய், எந்த அட்ரஸோ தெரியாது,  அவரைக் கெஞ்சிக் கூத்தாடிக் கூட்டி வந்தால் கதவு திறக்குமா? என் ஒரு வருடம் சம்பளம் முழுக்க அவருக்கு அபராதமாகத் தர வேண்டி வருமா? பாண்டி பஜாரில் ட்யூப்ளிகேட் சாவி பண்ணுகிறவர் கீதா கபே அருகே மரத்தடியில் உட்கார்ந்திருப்பாரே. அவரைக் கூப்பிட்டால் செய்து கொடுப்பாரா? பூட்டு இருந்தால் சாவி போடுவார். கதவிலேயே பதிந்த பூட்டுக்கு?  தப்புக் காரியமா அப்படி சாவி போடச் சொல்வது?

 

“ஆகாசவாணி. ஒரு முக்கிய அறிவிப்பு. நாளை, ஜூன் 26-ந்தேதி, வியாழக்கிழமை, காலை ஏழு மணிக்கு இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். ஆகாசவாணியின் அனைத்து நிலையங்களும் இந்த உரையை அஞ்சல் செய்யும். அடுத்த நிகழ்ச்சி, வாத்திய கோஷ்டி”.

 

நான் கதவில் சாய்ந்து கொண்டு நடையில் காலை நீட்டி ஓய்ந்து போய் உட்கார்ந்தேன். எமெர்ஜென்சி என்றால் இருப்பிடத்துக்குள் போக முடியாமல் தவிக்கிற ராத்திரி. இப்படித்தான் என் அகராதியில் எழுதப் படும்.

 

திடீரென்று ராத்திரியின் அமைதியைக் குலைத்துக் கொண்டு, தன் அறைக்கு உள்ளே இருந்து நாற்காலியைத் தூக்கிப் போட்டுச் சுவரில் அடித்து ஓவென்று அலறினார் குல்கர்னி. ”பாவி, மகா பாவி” தெரு வரைக்கும் அந்தத் தீனமான அலறல் எதிரொலித்தது. இந்திரா புகைப்படம் அட்டையில் போட்ட ஒரு கன்னட வாரப் பத்திரிகை உள்ளே இருந்து தரையில் வந்து விழுந்தது. அதை உக்ரமாகக் காலால் மிதித்தபடி அரைத்துத் தேய்த்து நசித்தார் குல்கர்னி.

 

“இட்ஸ் ஆல் ரைட், இட்ஸ் ஆல் ரைட்”, பின்னாலேயே பெல்காவி குரல் ஆதரவாக ஒலித்தது.

 

”ஜெயப்பிரகாஷ் நாராயண் உடல் நலம் சரியில்லை என்பதால் ஆஸ்பத்திரியில் காவலில் வைக்கப் படலாம்”. பெல்காவி எங்களுக்குச் சொல்லியபடி குல்கர்னி தோளில் தட்டி சமாதானப் படுத்தினார்.

 

நேரம் கெட்ட நேரத்தில் நிலைய வித்வான் தில்ரூபா வாசித்துக் கொண்டிருந்தார் ஏதோ ஸ்டேஷனில். மற்றப்படி எல்லா அலைவரிசையிலும் கொரகொரவென்று ஒரு சத்தம் வார்த்தையின்றி  பயமுறுத்தி எமெர்ஜென்சித் தகவல் கொடுத்தது.  அந்த ராத்திரி தொடங்கி பிபிசி, இந்தியாவின் பொய் சொல்லாத வானொலி ஆனது.

 

”போத்தி, உள்ளே வந்து படுங்க, காலையிலே பார்க்கலாம். உங்க ரூமுக்குள்ளே போக வழி பிறந்துடும். அது நிச்சயம். ஆனால், நாளைக்கு தேசம் என்ன ஆகுமோ, அது தெரியாது”.

 

நாராயணசாமி இன்னொரு முறை டிரான்சிஸ்டரின் குமிழைத் திருப்ப,  சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்கள் அசோக் மேத்தா, மது தந்த்வாதே அரஸ்ட் ஆனார்கள்.

 

“ஒவ்வொரு தடவை ரேடியோ வைக்கறபோதும் புதுசா யாராவது தலைவர் கைதான செய்தி. இனிமேல் நான் கேட்கப் போறதில்லே. விடிஞ்சுதான்”, என்றார் சலிப்போடு நாராயணசாமி.

 

நான் தூக்கம் பிடிக்காமல் அடுத்த சில மணி நேரங்கள் நாராயணசாமி சார் அறையில் வெறும் தரையில் புரண்டபடி கிடந்தேன்.  நாளைக்குக் காலை மாடிப்படி நிறைத்து, தெருவிலும் உஸ்மான் ரோடிலும் பஸ் ஸ்டாண்டிலும் ரங்கநாதன் தெருவிலும், மேற்கு மாம்பலத்திலும் அகஸ்தியர் கோவிலிலும் இந்தி பிரசார சபைக் கட்டடத்துக்குள்ளும், எதிரே லக்‌ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் இயங்கிய தீரர் சத்தியமூர்த்தியில் சுந்தரா மாளிகையிலும் ராணுவம் நிற்கும். நான் ஆபீஸ் போக ஸ்கூட்டருக்குப் போட பெட்ரோல் கிடைக்காது. பஸ் கிடைக்காமல் ராணுவம் அவற்றில் நிறைந்து வெங்கட்நாராயணா வீதியில் வீறிட்டு ஓடும். நடந்தே ஆபீஸ் போவேன். பச்சைச் சீருடை உடுத்திய சிப்பாய்கள் கத்தி பொருத்திய துப்பாக்கிகளைக் காட்டி வழியில் போக விடாமல் தடை செய்வார்கள். காமராஜர், மொரார்ஜி தேசாய், ஜெயப்ரகாஷ் நாராயணன் என்று முதியவர்களை விலங்கிட்டுத் தெருவில் இழுத்துப் போவார்கள்.

 

புரண்டு படுத்தேன். இடுப்பில் துண்டும் இளைத்த உடம்புமாக அறைக்கு வெளியே நிற்பது யார்? காந்தியா? தாடி வைத்த காந்தி. எல்லைக் காந்தியா? நாடே ஒழுங்கைக் கடைப்பிடிக்க நேரம் வந்து விட்டது என்கிறார் அவர். எழுந்து நிற்கச் சொல்கிறார் என்னை. எழுந்து நிற்க முயற்சி செய்கிறேன். முடியவில்லை. சோம்பலாக இருக்கிறது. தளர்ச்சியாக இருக்கிறது. பயமாக இருக்கிறது. விடியப் போகிறது என்று பல குரல்கள் சேர்ந்து ஒலிக்கின்றன.  அப்புறம் அதையே கூட்டமாகச் சேர்ந்து பாடுகின்றன. இருட்டில் புறாவின் இறகுச் சிலிர்ப்புகள். கைகளின் ஓரம் கழுகின் நகங்கள். அந்த நகங்களிடம் இருந்து தப்ப இன்னும் புரண்டு படுக்கிறேன். உடன் அனலாகக் கொதிக்கிறது.

 

நான் எழுந்தபோது விடிந்து வெகு நேரமாகி இருந்தது. மெல்ல அறைக்கு நடந்து கதவைத் தள்ளினேன்.

 

திறந்து கொண்டது.

 

நேற்று அதை யாரும் முயற்சி செய்யவில்லை. சாவி தேடுவதில் நேரம் தொலைந்து போனது. எமர்ஜென்சி பயத்திலும் என் நேரம் கடந்து போயிருந்தது. பயத்தைக் கொன்று போடு, எந்தக் கதவும் தடுத்து அடைத்து இருக்காது. தள்ளினால் திறக்கும் அதெல்லாம். நம்பிக்கை எழுந்து வந்தது.

 

”ஜெயப்ரகாஷ் நாராயணை இன்னிக்கு காலையிலே ரெண்டு மணிக்கு அரஸ்ட் பண்ணி தில்லி பார்லிமெண்ட் வீதி போலீஸ் ஸ்டேஷன்லே வச்சிருக்காங்களாம். வினாச காலே விபரீத புத்தி. நான் சொல்லலே. அவர் தான் சொன்னதா பிபிசி நியூஸ்”, குல்கர்னி படி இறங்கிப் போனார்.

 

வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த காலை ஏழு மணி. உள்ளே போய் டிரான்சிஸ்டரை ஆன் செய்தேன்.

 

“இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியவர்கள் இப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்”.

 

கேட்கத் தொடங்கினேன்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன