பரிப்பு வடையா, பருப்பு வடையா?
திலீப் குழப்பமாகக் கேட்டான்.
ஹெ, இந்தத் தரங்கெட்ட பாண்டிகள், என்றால் மதராஸ் மாகாணத் தமிழர்கள், ஒரு வார்த்தையையும் சரியாகப் பேசுவதில்லை. பருப்பு என்று பிழையாகச் சொல்வது அவர்களின் பரம்பரைக் கெட்ட பழக்கம் என்று புன்னகையோடு திலீப்பின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முனைந்தார் ஞானம் ஒளிர்ந்த நூலகர்.
புத்தறிவுத் தெளிவோடு அவனும் நடாஷாவும் இன்னொரு தடவை இன்னும் புராதனமான புத்தகங்கள் பற்றிக் கேட்க, அவருக்கு நினைவு வந்திருந்தது. பரிப்பு வடை ஞாபக சக்தி வலுவடைய உதவும் என்று சொன்ன நூலகர் தன் மரமேஜைக்குள் இருந்து ஒரு பழைய இரும்புச் சாவியை எடுத்து ஊழியரிடம் கொடுத்து உள்ளே கழிப்பறைக்கு முந்திய அறையில் உள்ள அலமாரிகளைத் திறந்து அவற்றில் என்ன உண்டு என்று பார்க்கக் கட்டளையிட்டார். கழிப்பறைக் கதவைத் திறக்க வேணாம், அங்கே பார்க்கத் தகுந்த பொருள் ஏதுமில்லை என்று நகைச்சுவை ததும்பப் பேசிய அவர் நடாஷாவைச் சிரிப்பில் இணைத்தார்.
பதினைந்து நிமிடம் கழித்து இரண்டு மாபெரும் கள்ளியம்பெட்டிகளை ஏழெட்டுப் பேர் சத்தமெழ நூலக மண்டபத்துக்குள் தள்ளிக் கொண்டு வந்தார்கள். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முன்னால் வந்த துணை நூலகரின் பார்வையிலும் நடையிலும் தீரச் செயல் செய்யும் மிடுக்கு இருந்தது.
இதெல்லாம் மிகப் பழைய புத்தகங்கள். சேரமான் பெருமாள் காலத்தில் வந்ததாக இருக்கலாம். அதற்கு முன்னும் ஆகலாம். கவனமாகப் பார்க்கவும்
அவர் பொறுப்பும் நிதானமுமாகச் சொல்ல, திலீப் அடக்க முடியாமல் கேட்டான் –
சேரர் காலத்தில் ஏது அச்சு யந்திரம்?
என்றால் ஓலையில் எழுதி வைத்தது. அதைப் பார்த்து அப்புறம் எழுதியானது. அவர்களுக்கு பின்னே ஆரோமல் உண்ணி தன் சொந்தம் கொட்டாரத்தில் இருந்து காகிதத்தில் எழுதிப் படிக்கச் செய்துவித்து ராஜ்ஜியம் பரித்தபோது.
மோட்சம் அளிக்கும் மதச் சடங்குகளில் ஓதும் பனிதச் சொற்கள் போல் நீட்டி இழுத்து அந்த இணை நூலகர் சொல்லியபோது காற்றும் நின்று போயிருந்தது.
இது எங்கே நீளும் என்று விளங்காததால் திலீப் உடனே நிறுத்திக் கொண்டு, கேட்க மட்டும் பிறப்பெடுத்த மராத்தி இளைஞனின் பிம்பத்தை அணிந்தான்.