வேதத்தில் ஏறிய ஃப்ரான்சிஸ் தாணுவுக்குக் கிடைத்த புதையல்

பிரான்சிலிருந்து அந்தக் காலத்தை அடுத்து வந்த யாரோ நூல் நிலையத்துக்குக் கொடுத்திருக்கலாம் என்று கருத்துச் சொன்னாள் நடாஷா.  கதவு திறந்து சாயாவும் பரிப்பு வடைகளும் இன்னொரு முறை அன்போடு பரிமாறப்பட்டன.

 

அவர்களைக் கனிவுடன் பார்த்தபடி, முதலிரவுக்குப் புதுமணத் தம்பதியரை அனுப்பி வைத்து வெளியே கதவு அடைக்கும் அன்பான சுற்றமும் நட்பும் போல நூலக ஊழியர்கள் சாந்தமும் புன்சிரிப்புமாக வெளியேறினார்கள்.

 

திலீப் எழுந்து ஏதோ தேடினான். என்ன வேணும் என்றாள் நடாஷா. டாய்லெட் போகணும்.

 

இன்னும் ரெண்டு மூணு மணி நேரம் பொறுத்துக்க முடியாதா?

 

அவனுடைய சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்து உயர்த்தி தலையைக் கரகரவென்று நகர்த்தி அவளைப் பார்க்க வைத்தபடி மூச்சில் பூண்டு மணக்கக் கேட்டாள். திலீப்புக்கு இப்போது பூண்டு பிடிக்கும். அதுவும் வேண்டி இருக்கிறது.

 

புண்ணியமாப் போறது. பிராணன் நின்னுடுத்து. என்னை விட்டுடு.

 

திலீப் அவள் கண்ணைக் கூர்ந்து பார்த்துப் போலி அச்சத்தோடு சொன்னான். வேண்டி இருந்தது. இன்னும் வரட்டும்.

 

அந்தப் பழைய கட்டிடத்தின் உள்ளடுக்குகளில் நம்பிக்கையோடு அரையிருட்டில் திலீப் தேடிப் போனது வீணாகவில்லை. நல்ல முறையில் பராமரிக்கப்  பட்ட ஒரு காற்றோட்டமான கழிப்பறையை அங்குக் கண்டான்.

 

திலீப் திரும்ப வந்தபோது இரண்டாம் பெட்டியில் இருந்து எடுத்த ஒரு அடுக்கு பனையோலை ஏடுகளையும் அவற்றைப் பொதிந்திருந்த சிவப்புப் பட்டுத் துணியில் ஏடுகளோடு கூட இருந்த பழுப்பேறிய கெட்டிக் காகிதத்தையும் சுவாரசியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் நடாஷா.

 

அவள் திலீப்புக்காகப் படித்துக் காட்டியது இந்தத் தோதில் இருந்தது.

 

கொல்லம் வருஷம் 1052  இங்கிலீஷ் வருஷம் 1877-ல் சாவக்காட்டு பிரான்சிஸ் ஸ்தாணுநாதன் என்ற, வேதத்தில் ஏறிய 67-வயது நபருக்குப் புதையல் கிட்டியது. அது நாலு நாழி அரிசி வடிக்கிற அளவிலே பழைய உலோகப் பானையில் தங்க நாணயங்களும், ஒரு குப்பியில் தைலமும், இந்த ஓலைச் சுவடிகளுமாக இருந்ததாம். சுவடிகள் தமிழ்ச் செய்யுளாக இருந்தபடியால் பாண்டிப் பிரதேசத்துப் பண்டிதர் ஒருவரிடம் கொடுத்து அவை பரீட்சிக்கப் பட்டன. அது சேரமான் பெருமாள் கைலாயம் போக விமானம் கட்டியது பற்றிய விளக்கமாகவோ அல்லாத பட்சத்தில் வஞ்சி என்ற பேரூரில் கழிவுநீர்ச் சாக்கடை அமைப்பு நிறுவியது குறித்தோ இருக்கும் என்று தெரிந்ததாம். அவற்றை அச்சுப் போட காலம் கனியாத காரணத்தால் இப்படிப் பெட்டியில் பத்திரமாக வைக்க சாவக்காட்டு பிரான்சிஸும், அரண்மனை உத்தியோகஸ்தர்களும்,  பாதிரியார் எஸ்தப்பன் மண்ணார்க்காடும்  சம்மதித்து அதேபடி இங்கே வைக்கப் பட்டதாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன