வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நாவல் வரிசையில் நான்காம் நாவல் இது. அடுத்த சிறு பகுதி இங்கே பதிப்பாகிறது இதோ –
வைத்தாஸ் சிரித்தபடியே நந்தினியின் மார்பில் கையளைந்த படி கேட்டான். அந்தக் கரங்களை அவள் விலக்கவில்லை. ஆனாலும் அடுத்த தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருப்பதாகச் சொல்லி நகர்ந்தவள் படுக்கையில் அமர்ந்து இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாள்.
எமிலி பேசணுமா? என்ன இருக்கு அந்தக் குட்டிப் பொண்ணுக்கு என்கிட்டே பேச?
கேட்டு விட்டு இந்த நாளில் முதல் தடவையாக நந்தினி சிரிக்கிறாள்.
கையில் டெலிபோன் டைரக்டரியை விரித்து வைத்து பெயர்களைப் பாராயணம் செய்கிற கவனத்தோடு ஒவ்வொன்றாக முணுமுணுத்தபடி இருக்கிறான் வைத்தாஸ். கடவுளின் சகோதரியோடு கடவுளே பேச வந்தாலும் அவனுக்கு விரோதமில்லை. பரபரப்பும் எதிர்பார்ப்பும் கூட இல்லை.
சின்னக் குழந்தைகளோடு டெலிபோன் பேசுகிற, இயல்புக்கு அதிகமான செல்லம் கொஞ்சுதலும், அன்பு நிரம்பியதுமான குரலில் எமிலி என் குட்டிப் பெண்ணே என்று விளித்து நந்தினி தொலைபேச ஆரம்பிக்க, டெலிபோன் டைரக்டரியோடு அறைக்கு வெளியே வந்தான் வைத்தாஸ்.
நந்தினி வெவ்வேறு பேரோடு தொலைபேசி முடிப்பதற்குள் அந்த டைரக்டரியை முதலில் இருந்து இறுதி வரை படித்து விடுவான் அவன். அவனுடைய நாவல்களை விட அது சுவாரசியமாக இருக்கும் என்று அடுத்த பத்திரிகைப் பத்தியில் அவன் எழுதப் போகிறான்.
தன்னையே பரிகசித்துக் கொள்ளும் எழுத்துக்காரர்கள், வாசகர்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஆகிறார்கள். படிக்கிறவர்கள் ஒரு கள்ளச் சிரிப்போடு சொல்லவும் எழுதி வைக்கவும் விரும்புவதை எந்தக் குற்ற உணர்ச்சியும் அவர்கள் கொள்ளாமல் அவர்களுக்கு அனுபவப்படுத்த அவன் தன்னையே கிண்டல் செய்து கொள்வான். எழுத்துக்காரனே விரும்பித் தன்னைக் கோமாளியாக்கிக் கொள்ளும்போது அவர்கள் அதிகமாகச் சிரித்து இன்னும் தீவிரமாகக் களிமண் உருட்டி மேலே எரியும் ஆபத்தில்லாத, உறவு சொல்லி அழைத்துச் சகலரையும் மகிழ்விக்கக் கூடிய சொல் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அந்தச் சூழலில், அடுத்த நாவல் இன்னும் நன்றாக விற்பனையாகிறது.
உடனே இதை எல்லாம் தட்டச்சு செய்ய வைத்தாஸுக்கு ஆர்வம் மிகுந்து வந்தாலும், உள்ளே நந்தினி பேசிக் கொண்டிருக்கும் போது அதைச் செய்தால் பேச்சுக்கு சிரமமாக இருக்கக் கூடும் என்று அவன் மனதில் பட்டது.
டெலிபோன் டைரக்டரியின் பக்கங்களை இன்னும் கொஞ்சம் வாசித்தால் தட்டச்சு செய்யச் சிந்தனைகள் அதிகமாகக் கிடைக்கலாம். இல்லாவிட்டாலும் இந்தப் பொழுதும் அடுத்து வருவதும் அவன் வேறென்ன செய்ய விதிக்கப்பட்டிருக்கிறது? இதை எழுத மாட்டான் தான் வைத்தாஸ்.
உள்ளே இருந்து ஒரு நாற்காலியை எடுத்து வந்தால் வராந்தாவில் விளக்கடியில் உட்கார்ந்தபடிக்கு ஓய்வாகப் படித்துக் கொண்டிருக்கலாம்.
ஜாக்கிரதையாகக் கதவைத் திறந்து, சிறு இடைவெளியில் உடம்பைக் குறுக்கிக் கொண்டு வைத்தாஸ் நந்தினியின் ஐந்து நட்சத்திர ஓட்டல் அறைக்கு உள்ளே நுழையும்போது தலைமுறை தலைமுறையாக அனுபவித்து மரபணுவில் சேர்ந்திருக்கக் கூடிய அடிமைத்தனம் ஒரு வினாடி பரந்து உருவெடுத்துச் சூழ்ந்தது.
இது வைத்தாஸுக்கு அப்பனான வரதராஜ ரெட்டிக்கு அனுபவப்பட்டதல்ல. வைத்தாஸின் தாய்வழிப் பாட்டியும் அவளுக்குப் பாட்டியும் பட்டுணர்ந்தவை.
என் மகள் பூப்படைந்திருக்கிறாள்.
உள்ளே நுழைந்த வைத்தாஸிடம் உரக்கச் சொல்லிச் சிரித்தாள் நந்தினி. அவன் என்ன மாதிரி எதிர்வினை செய்வது என்ற நிச்சயமில்லாமல் நாற்காலியைப் பற்றியபடி நின்றான்.
நந்தினி வைத்தாஸை அருகே வரச் சொன்னாள். அந்தப் பக்கம் பேசும் சிறுமியை நல்வாக்கு கூறச் சொன்னாள். வைத்தாஸும் அவளை வாழ்த்த வேணும். அவன் காது மடலில் பட டெலிபோன் ரிசீவரை வைத்தாள்.
வைத்தாஸ் கவனித்துக் கேட்க, அந்தப் பக்கம் ஒரு சிறுமி மேரியின் ஆட்டுக்குட்டி என்ற குழந்தைகள் பாடலை சிரத்தையாகப் பாடியது கேட்டது.
எமிலி பாடி முடித்ததும், அவள் உடல் நலத்தையும் கல்வியையும் பற்றி வைத்தாஸ் ஆப்ரிகான்ஸ் மொழியில் விசாரிக்க அந்த முனையில் மௌனம்.
இல்லை, அவளுக்கு ஆப்ரிகான்ஸ் தெரியாது. தென் பிராந்தியத்தில் இருந்து வந்தவள். நான் பேசுகிறேன்.
மிகச் சரளமாகத் தென் பிராந்திய மொழியில் நந்தினி தொடர, நாற்காலியோடு வெளியே வந்தான். ஒரு மணி நேரம் கழித்து நந்தினி வாசல் கதவை விரியத் திறந்து வைத்தாஸை நெருங்கி வந்தாள். ஆளரவம் ஓய்ந்த தாழ்வாரம் அது.